‘கருவிலேயே முன்பதிவு, பிறந்ததும் விற்பனை’ – சிங்கப்பூருக்கு குழந்தைகள் கடத்தலா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “சில குழந்தைகள் கருப்பையில் இருக்கும்போதே முன் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று ஒரு போலீஸ் கமிஷனர் பிபிசியிடம் கூறினார்.எழுதியவர், குயினாவதி பசரிபுபதவி, பிபிசி இந்தோனீசியாஎழுதியவர், கேவின் பட்லர்பதவி, பிபிசி செய்திகள்14 நிமிடங்களுக்கு முன்னர்

2023 முதல் சிங்கப்பூருக்கு 25 குழந்தைகளை விற்றதாகக் கூறப்படும் ஒரு சர்வதேச குழந்தை கடத்தல் கும்பலை இந்தோனீசிய காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனீசிய நகரங்களான பொன்டியானாக் மற்றும் டாங்கெராங்கில் இந்த கும்பலுடன் தொடர்புடைய 13 பேரை இந்த வாரம் கைது செய்த காவல்துறை, கடத்தப்படவிருந்த 6 குழந்தைகளை மீட்டனர் . அந்த குழந்தைகள் அனைவரும் சுமார் ஒரு வயதுடையவர்கள்.

“குழந்தைகள் முதலில் பொன்டியானாக்கில் தங்கவைக்கப்பட்டு, அவர்களின் குடியேற்ற ஆவணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று மேற்கு ஜாவா காவல்துறையின் பொது குற்றவியல் புலனாய்வு இயக்குநர் சுரவன் பிபிசி நியூஸ் இந்தோனீசியாவிடம் கூறினார்.

இது குறித்து தெரிந்துகொள்ள பிபிசி செய்தி சிங்கப்பூர் காவல்துறையையும், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோரையோ, கர்ப்பிணித் தாய்களையோ குறிவைப்பதே இந்தக் கும்பலின் செயல்பாடாகக் கூறப்படுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அந்தக் கும்பல் முதலில் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொண்டு, பின்னர் வாட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட தளங்களுக்கு மாறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

“சில குழந்தைகள் கருப்பையில் இருக்கும்போதே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறந்த பின், பிரசவ செலவுகள் ஈடு செய்யப்பட்டு, பணம் வழங்கப்பட்டு, குழந்தை பெறப்பட்டுள்ளது,” என்று குற்றவியல் புலனாய்வு இயக்குநர் சுரவன் கூறினார்.

கடத்துவதற்காக குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் நபர்கள், பராமரிப்பாளர்கள், தங்கவைத்தவர்கள், குடும்ப அட்டைகள், பாஸ்போர்ட்கள் போன்ற போலி ஆவணங்களைத் தயாரித்தவர்கள் ஆகியோர் இக்குழுவில் இருந்ததாக காவல்துறை விளக்கியது.

தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகள், இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு பராமரிப்பாளர்களிடம் இருந்து, பின்னர் ஜகார்த்தாவிற்கும், பொன்டியானாக்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனக் கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் 11 முதல் 16 மில்லியன் இந்தோனீசிய ரூபாய்க்கு ($673-$975) விற்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அந்தக் கும்பல் 12 ஆண், 13 பெண் குழந்தைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்றுள்ளது என்று கைது செய்யப்பட்ட சிலர் கூறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தோனீசிய மாகாணமான மேற்கு ஜாவாவின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.

சிங்கப்பூரில் தத்தெடுப்பவர்களைக் கண்டறிவது தங்களது “உடனடி பணி” என்று இந்தோனீசிய காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

“புறப்பட்ட குழந்தைகளின் விவரங்களை நாங்கள் சரிபார்ப்போம். அதனால், யார் புறப்பட்டார்கள்,அவர்களுடன் யார் சென்றார்கள், எப்போது புறப்பட்டார்கள், அங்கு தத்தெடுத்தவர்கள் யார் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்,” என்று சுரவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

போலி ஆவணங்களால், பல குழந்தைகளின் குடியுரிமை மாற்றப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சேகரித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் பாஸ்போர்ட்டுகளை காவல்துறை தேடிக்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், West Java Regional Police

படக்குறிப்பு, சிங்கப்பூரில் தத்தெடுப்பவர்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் “உடனடி பணி” என்று போலீசார் கூறுகின்றனர்.கடத்தல்காரர்களுக்கும் பெற்றோருக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் குழந்தைகள் பெறப்பட்டதாகவும், இதுவரை யாரையும் கடத்தி அழைத்துச் செல்லவில்லை என்றும் சுரவன் முன்னதாக பிபிசி இந்தோனீசியாவிடம் தெரிவித்தார். தரகர் பணம் கொடுக்காததால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விற்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் மீதும் கிரிமினல் குற்றம் சாட்டப்படலாம் என்கிறார் சுரவன்.

இதனை விளக்கிய அவர், “பெற்றோருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது குழந்தை பாதுகாப்பு குற்றங்கள் மற்றும் மனித கடத்தல் குற்றங்கள் சுமத்தப்படலாம்” என்றார்.

வெளிநாட்டில் இருக்கும் அந்த கடத்தல் கும்பலின் உறுப்பினர்களையும், குழந்தைகளை வாங்குபவர்களையும் கைது செய்ய இந்தோனீசிய காவல்துறை இன்டர்போல் மற்றும் சிங்கப்பூர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

“குற்றவாளிகளை தேடப்படும் நபர்களாக பட்டியலிடுவோம். சர்வதேச தேடல் அறிவிப்பு ஒன்றை (Red Notice) வெளியிடுவோம், அல்லது அந்த நாடுகளில் உள்ள சட்டத்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் அவர்களைக் கைது செய்யுமாறு கேட்போம்,” என்று சுரவன் கூறினார்.

குழந்தை கடத்தல் கும்பல்கள் பொதுவாக நிர்க்கதியான சூழல்களில் உள்ள பெண்களை குறிவைக்கின்றன என்கிறார் இந்தோனீசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (KPAI) ஆணையர் ஐ ரஹ்மயந்தி.

“உதாரணமாக, பாலியல் வன்முறை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் அல்லது பாலியல் உறவுகளால் ஏற்பட்ட தேவையற்ற கர்ப்பம் ஆகியவற்றின் காரணமாக அந்த பெண்கள் தவிப்பவர்கள்” என்று அவர் பிபிசி நியூஸ் இந்தோனீசியாவிடம் விளக்கினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மருத்துவ அவசரநிலைகள் மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றால் ஏற்படும் கர்ப்பம் போன்ற சில குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர, இந்தோனீசியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

குழந்தை அல்லது குழந்தை கடத்தல் கும்பல்கள், தங்களை பெரும்பாலும் மகப்பேறு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் அல்லது பெண்களையும் குழந்தைகளையும் பராமரிப்பதாகத் தோன்றும் தங்குமிடங்களாகக் காட்டிக்கொள்கின்றன என்கிறார் ஐ ரஹ்மயந்தி.

“இந்த மருத்துவமனைகள் அல்லது தங்குமிடங்கள் முதலில் ‘நீங்கள் பிரசவித்து உங்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்’ என்பது போல் கருணையுடன் பேசுகின்றன. ஆனால் உண்மையில், பணம் கொடுத்து குழந்தையை சட்டவிரோதமாக விற்கின்றன” என்று அவர் விளக்கினார்.

இந்தோனீசியாவில் விற்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தரவு எதுவும் இல்லை என்றாலும், மனித கடத்தல் குற்றங்கள் குறித்த இந்தோனீசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (KPAI) சொந்த தரவு, இந்தப் போக்கு தொடர்ந்து வளர்ந்து வருவதைக் குறிக்கிறது.

2020-ல் இந்தோனீசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் 11 சட்டவிரோத தத்தெடுப்பு வழக்குகளைப் பதிவு செய்தது, ஆனால் 2023-ல் குழந்தை கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான 59 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

2024-ல், டெபோக் (மேற்கு ஜாவா) மற்றும் பாலி போன்ற இடங்களில் விற்பனைக்கு தயாராக இருந்த குழந்தைகளை இந்தோனீசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (KPAI) கண்டுபிடித்தது.

தொடர்ந்து பேசிய ரஹ்மயந்தி, குழந்தைகள் வெவ்வேறு விலைகளுக்கு விற்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், “ஜாவா பகுதியில், விலை Rp11 மில்லியன் முதல் Rp15 மில்லியன் வரை உள்ளது. பாலி பகுதியில், இது Rp20 மில்லியன் முதல் Rp26 மில்லியன் வரை செல்லக்கூடும், விலை பல காரணிகளைப் பொறுத்தது. அவற்றில் ஒன்று, குழந்தையின் தோற்றம்”” என்று அவர் விளக்கினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு