Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மருத்துவமனைக்குள் நுழைந்து கைதியை சுட்டுக் கொன்ற கும்பல் – குற்றங்களின் தலைநகராக மாறுகிறதா பிகார்?
பட மூலாதாரம், Screen Shot
படக்குறிப்பு, வியாழக்கிழமை பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சந்தன் மிஸ்ராவைக் கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள்.எழுதியவர், சிட்டு திவாரிபதவி, பிபிசி செய்தியாளர்18 நிமிடங்களுக்கு முன்னர்
பிகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி வியாழக்கிழமை (ஜூலை 17) காலை கொலை செய்யப்பட்டார்.
பாட்னா நகரில் மட்டும், ஜூலை 4 முதல் ஜூலை 17 வரை மணல் வியாபாரி ஒருவர், ஒரு பள்ளி நடத்துநர் மற்றும் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிகார் ‘குற்றங்களின் தலைநகராக’ மாறி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பராஸ் மருத்துவமனையில் என்ன நடந்தது?
படக்குறிப்பு, பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில், கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் மிகவும் நிதானமாக தப்பிச் சென்றனர்.பாட்னாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான பராஸ் மருத்துவமனையின் அறை எண் 209இல், வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
ஐந்து பேர் துப்பாக்கிகளை காட்டிக் கொண்டு இந்த அறைக்குள் நுழைந்து, சந்தன் மிஸ்ரா என்ற நபரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, மிகவும் அமைதியாக நடந்து சென்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சந்தன், பிகாரில் உள்ள பக்ஸரைச் சேர்ந்தவர். மருத்துவமனையின் சிசிடிவி-இல் பதிவான காட்சிகளில், அந்த நபர்கள் முகமூடி அணியவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் அறைக்கு வெளியே நின்று, இடுப்பிலிருந்து கைத்துப்பாக்கிகளை எடுத்து, பின்னர் அறைக்குள் நுழைந்து சுட்டுவிட்டு, எந்தவித அவசரமோ பதற்றமோ இல்லாமல் வெளியேறுகிறார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு பேசிய பாட்னா காவல்துறை எஸ்எஸ்பி கார்த்திகேய சர்மா, “சந்தன் மிஸ்ரா, தண்டனை பெற்ற ஒரு கைதி. அவர் பரோலில் வெளியே வந்தவர். பக்ஸரில் நடந்த கும்பல் சண்டை அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்” என்றார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த நபர்களை பிடிக்க பாட்னா நகரத்தை ஒட்டியுள்ள புல்வாரிஷரீஃப் மற்றும் பக்ஸரின் பல பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பணியில் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டில் 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என பிடிஐ செய்தி கூறுகிறது
யார் இந்த சந்தன் மிஸ்ரா?
படக்குறிப்பு, சந்தன் மிஸ்ரா மீது பக்ஸர் மற்றும் அராவின் வெவ்வேறு காவல் நிலையங்களில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சோன்வர்ஷாவில் வசித்து வந்த சந்தன் மிஸ்ரா, பக்ஸரில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
பக்ஸரில் வசிக்கும் அசுதோஷ் குமார், “அவர் 16 வயதில் குற்றவாளியானார். சந்தன் மற்றும் அவரது நண்பர் ஷேருவின் கும்பல் ‘சந்தன்ஷேரு கேங்’ என்று அழைக்கப்பட்டது. ஆனால், பின்னர் சந்தனுக்கும் ஷேருவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது” என்று கூறுகிறார்.
2011ஆம் ஆண்டு ராஜேந்திர குமார் என்ற பக்ஸர் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சந்தன் மிஸ்ரா, பாட்னாவின் பியூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு பராஸ் மருத்துவமனைக்கு வந்த சந்தன் மிஸ்ராவின் தந்தை ஸ்ரீகாந்த் மிஸ்ரா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், “எனது ஒரே மகன் கொல்லப்பட்டுள்ளதால் எனக்கு பயமாக இருக்கிறது. நானும் கொல்லப்படலாம். அரசு குற்றவாளிகளைப் பிடித்தால் மட்டுமே எங்களுக்கு நிம்மதி கிடைக்கும்” என்று கூறினார்.
பாட்னா மருத்துவமனையில் இதற்கு முன் நடந்த கொலை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1998ஆம் ஆண்டும், நீதிமன்றக் காவலில் இருந்த ஒரு கைதி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்டார்.சந்தன் மிஸ்ரா கொலை வழக்கு, பிகாரில் ராப்ரி தேவி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பிரஜ் பிகாரி பிரசாத்தின் கொலையை நினைவூட்டுகிறது. அவர் பாட்னாவின் ஐஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டார்.
1998ஆம் ஆண்டு நீதிமன்றக் காவலில் இருந்த அவர், சிகிச்சைக்காக ஐஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொலையில் ஸ்ரீபிரகாஷ் சுக்லா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் சுக்லா, உ.பி. சிறப்புப் படையினருடன் நடந்த ‘என்கவுன்டர்’ மூலம் கொல்லப்பட்டார்.
உண்மையில், 1990களில், பிகாரின் அரசியலில் பல வலிமையான தலைவர்கள் இருந்தனர். இந்தக் காலகட்டத்தில், பிகாரின் ஆட்சி லாலு பிரசாத் யாதவின் கைகளில் இருந்தது. இன்றும் கூட எதிர்க்கட்சிகள், லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சியில் பிகாரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன.
இப்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் பிற எதிர்கட்சிகள், பாஜக-ஜேடியு கூட்டணி மற்றும் நிதிஷ் குமார் மீது அதே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
பிகாரின் சமீபத்திய குற்றச் சம்பவங்கள்
படக்குறிப்பு, பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா ஜூலை 4 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தி மைதான் பகுதியில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் இந்த சம்பவம் நடந்தது.ஜூலை 4 முதல் ஜூலை 17 வரையிலான காலகட்டத்தைப் பற்றிப் பேசினால், தொழிலதிபர் கோபால் கெம்கா, மணல் வியாபாரி ராமகாந்த், வழக்கறிஞர் ஜிதேந்திர மஹதோ, பள்ளி நடத்துநர் அஜித் குமார் ஆகியோர் தலைநகர் பாட்னாவில் கொலை செய்யப்பட்டனர்.
உள்ளூர் செய்திகளின்படி, கடந்த 15 நாட்களில் பிகார் மாநிலத்தில் குறைந்தது 50 கொலைகள் நடந்துள்ளன.
அதே சமயம், பாட்னாவில் மட்டும் ஜூலை 1 முதல் ஜூலை 16 வரை 14 கொலைகள் நடந்துள்ளன. பிகாரில் நடக்கும் தொடர்ச்சியான குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில், மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏடிஜி தலைமையகம்) குந்தன் கிருஷ்ணன் கூறிய கருத்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 16 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கொலைகள் நடந்து வருகின்றன. மழை பெய்யாத வரை, விவசாயிகளுக்கு வேலை இல்லாததால் கொலைகள் தொடர்கின்றன. மழைக்குப் பிறகு, விவசாயிகள் பரபரப்பாகி விடுகிறார்கள். ஊடகங்கள் இந்தக் கொலைகள் குறித்து தொடர் விவாதங்களை நடத்துகின்றன, மறுபுறம் இந்த காலத்தில் தேர்தல்களும் உள்ளன.” என்று கூறினார்.
குந்தன் கிருஷ்ணனின் கருத்து ‘கண்டிக்கத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது’ என்றும், பிகாரின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது மிகவும் கவலைக்குரியது என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், “சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. குற்றங்கள் பருவத்திற்கு ஏற்ப நடக்கும் என்று கூறியுள்ள பிகார் போலீசார் விடுப்பு எடுக்க வேண்டும்,” என்றார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இவை அனைத்திற்கும் மத்தியில், புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2006 மற்றும் 2022க்கு இடையில் பிகார் மாநிலத்தில் 53,057 கொலைகள் நடந்துள்ளன என்று 2022இல் வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சில நாட்களுக்கு முன்பு வரை பிகாரின் குற்றச் செயல்கள் குறித்த குறிப்புகளை வெளியிட்டு வந்தார். நிதிஷ் குமாரின் இருபது ஆண்டுகால ஆட்சியில் 60 ஆயிரம் கொலைகளும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
தேஜஸ்வியின் இந்தக் கூற்றுகள் குறித்து நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பூஜா பேட்ரிக் பிபிசியிடம் பேசினார்.
“எங்கள் ஆட்சி காலத்தில் குற்ற விகிதம் குறைந்துள்ளது. லாலு ஆட்சியில் இருந்தபோது, பிகார் மக்கள் தொகை அவ்வளவு அதிகமாக இல்லை, இப்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அவரது காலத்தில், குற்ற விகிதம் அதிகமாக இருந்தது, ஆனால் இப்போது அது குறைந்துள்ளது.” என்று கூறினார்.
‘பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்’
பட மூலாதாரம், @yadavtejashwi
படக்குறிப்பு, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார், மேலும் மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில், பிகாரின் முன்னாள் டிஜிபி அபயானந்த் பிபிசியிடம் பேசினார், “எனது முழு காவல் பணியிலும் நான் புள்ளிவிவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பொதுமக்களின் கருத்து மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஒரு சாதாரண பிகாரி தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தால், சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். மாறாக, அவர் அப்படி உணரவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது என அர்த்தம்” எனக் கூறினார்.
‘பாட்னா டைரி’ புத்தகத்தின் ஆசிரியரும், சிபிஐ- இன் (CPI) மூத்த தலைவருமான நிவேதிதா ஜா, “இதுபோன்ற ஒரு மருத்துவமனையில் ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. இது குற்றவாளிகளின் தைரியம் அதிகரித்துள்ளது என்பதையும், நமது அரசாங்கம், காவல்துறை அமைப்பு என அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்பதையும் காட்டுகிறது” என்று கூறுகிறார்.
தலாஷ் பத்திரிகையின் ஆசிரியரும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் துணைப் பதிவாளருமான மீரா தத், “மாநிலத்தில் குற்றக் கலாசாரம் அதிகரித்துள்ளது. வேலையின்மை, நிர்வாக ஊழல்கள் மற்றும் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக குற்றங்கள் அதிகரித்துள்ளன. நமது தலைவர்கள் சிறிய குற்றவாளிகளை ஊக்குவிப்பதால், அரசியல் ஏற்பும் அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் சாதி என்ன என்பதை நாம் பார்க்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
தற்போது பிகாரில் சாதி, அரசியல், அரசியல் குற்றங்கள் மற்றும் குற்றத்தின் நுட்பமான இழைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பது தெளிவாகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு