Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கடலுக்கடியில் வெடிக்க தயாராகும் எரிமலைகள் – மனிதர்களுக்கு அச்சுறுத்தலா?
பட மூலாதாரம், Dana Stephenson/Getty Images
படக்குறிப்பு, பல ஆண்டுகளாக பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டத்துக்கு மேலே காணக்கூடிய பல எரிமலை வெடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எழுதியவர், மரியா சக்காரோபதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர்
நீருக்கடியில் உள்ள எரிமலைகள், பொதுவாக கண்ணுக்குத் தெரியாததால், பலர் அவற்றை மறந்துவிடலாம்.
ஆனால், விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கைகள் சிலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. நீருக்கடியில் உள்ள எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்பதே அந்த எச்சரிக்கையின் முக்கிய அம்சம்.
அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள ஆக்சியல் சீமவுண்ட் எரிமலை குறித்து, அவ்வாறு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலை வெப்பமடைந்து வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் வெடிக்கும் அறிகுறிகளை காட்டுவதாகவும், நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரேக்கத் தீவான சாண்டோரினியில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கங்கள், அங்குள்ள கால்டெரா (பெரிய எரிமலைப் பள்ளம்) மற்றும் அதற்கு அருகிலுள்ள கொலம்போ எனும் நீருக்கடியில் உள்ள எரிமலையைப் பற்றி ஆராய விஞ்ஞானிகளைத் தூண்டியுள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இவை உடனடியாக வெடிக்கப் போவதில்லை என்று நம்பப்படுகிறது, ஆனால் இது காலப்போக்கில் நடக்கலாம்.
எனவே அதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டுமா?
கடலின் ஆழத்தில் மறைந்துள்ள எரிமலைகள்
பூமியின் மேலோட்டத்தில் உள்ள திறப்புகள் தான் எரிமலைகள் எனப்படுகின்றன.
இவை சூடான சாம்பல், வாயுக்கள், மற்றும் மாக்மா எனப்படும் உருகிய பாறைகளை வெளியேற்றுகின்றன.
பொதுவாக, எரிமலைகள் மவுண்ட் வெசுவியஸ் அல்லது மவுண்ட் எட்னா போன்ற மாபெரும் மலைகளாகக் கருதப்படுகின்றன. இவை கண்ணைக் கவரும் வகையில் ஆரஞ்சு நிற எரிமலைக்குழம்பை வெளியேற்றுகின்றன.
ஆனால், பூமியில் உள்ள எரிமலைகளில் மூன்றில் இரண்டு பங்கு கடலுக்கு அடியில் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடலின் ஆழத்தில், சில நேரங்களில் ஆயிரக்கணக்கான மீட்டர் கீழே மறைந்திருக்கும் இந்த எரிமலைகள், அறியப்படாத உயிரினங்களுக்கு வாழ்விடமாய் உள்ளன. மேலும், இவை வெடித்த பிறகு புதிய தீவுகளை உருவாக்குகின்றன.
பட மூலாதாரம், D. Kelley, University of Washington/BOEM/NSF-OOI/WHOI, V19
படக்குறிப்பு, ஆக்சியல் சீமவுண்ட் எரிமலையின் புகைபோக்கிகளில் இருந்து வாயுக்கள் வெளிப்படுவதை நிபுணர்களால் படம்பிடிக்க முடிந்தது.நிலத்தில் உள்ள எரிமலைகளைப் போலவே, நீருக்கடியில் உள்ளவையும் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளை ஏற்படுத்தலாம். இவை சில சமயங்களில் பெரிய விளைவுகளையும் உருவாக்குகின்றன.
2022-ல், டோங்காவில் உள்ள ஹங்கா-டோங்கா ஹங்கா-ஹாபாய் எரிமலை வெடித்து, பசிபிக் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.
இதன் அலைகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகளை எட்டின.
அதில் மூன்று பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மேலும், நீர்மூழ்கி இணைய கேபிள் துண்டிக்கப்பட்டதால், ஐந்து வாரங்களுக்கு உலகத்துடனான தொடர்பை டோங்கா இழந்தது.
அவை எங்கே அமைந்துள்ளன ?
நீருக்கடியில் உள்ள எரிமலைகள், பூமியின் வெளிப்புற அடுக்கான பெரிய டெக்டோனிக் தகடுகள் இருக்கும் இடங்களில் உருவாகின்றன.
இந்த தகடுகள், ஒன்றையொன்று விலகிச்செல்லும்போது, அல்லது ஒன்றையொன்று சறுக்கிச்செல்லும்போது , பூமியின் ஆழத்தில் இருக்கும் மாக்மா மேலே எழுவதற்கான இடம் உருவாகிறது.
இந்த டெக்டோனிக் தகடுகள் உலகம் முழுவதையும் உள்ளடக்கியவை. எனவே, நீருக்கடியில் உள்ள எரிமலைகள் அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள் முதல் மத்தியதரைக் கடல் வரை உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன.
சில சமயங்களில், வெப்பமான புளூம்கள், டெக்டோனிக் தகடுகளின் நடுவில் மேல்நோக்கி உயர்ந்து, எரிமலைகளை உருவாக்குகின்றன.
பட மூலாதாரம், UW/NSF-OOI/CSSF, V15
படக்குறிப்பு, ஆழமான நீரில் எரிமலைகளிலிருந்து வெளியேறும் எரிமலைக்குழம்பு விரைவில் குளிர்ச்சியடைகிறது வெவ்வேறு வெடிப்புகள்
பட மூலாதாரம், UW/NSF-OOI/CSSF, V11
படக்குறிப்பு, 2011 ஆம் ஆண்டு ஆக்சியல் சீமவுன்ட் வெடித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அதன் உச்சியிலிருந்து நுண்ணுயிரிகளும் சிறிய துகள்களும் வெளியே வருவதைக் காண முடிந்தது.தண்ணீருடன் மாக்மா கொள்ளும் தொடர்பினால் கடல் எரிமலைகளின் வெடிப்பு, நிலத்தில் உள்ள எரிமலை வெடிப்புகளில் இருந்து வேறுபடுகிறது என்று பிரிட்டனின் தேசிய கடல்சார் மையத்தைச் (என்ஓசி) சேர்ந்த கடல்சார் எரிமலை நிபுணர் முனைவர் ஐசோபெல் யோ கூறுகிறார்.
“சூடான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால், அது நீராவியாக மாறும். இதேபோன்ற எதிர்வினை ஆழமற்ற எரிமலைகளில் நடக்கிறது,” என்று அவர் விளக்குகிறார். இது தண்ணீரில் சில நூறு மீட்டர் ஆழத்தில் உள்ள எரிமலைகளுக்கு பொருந்தும்.
ஆழமான நீரில் உள்ள எரிமலைகளில், நீரின் அழுத்தம் காரணமாக வெடிக்கும் எதிர்வினை ஏற்படாது.
இத்தகைய எரிமலைகளில் மாக்மா வெளியேற்றப்பட்டாலும், அது விரைவாக குளிர்ச்சியடைகிறது என்று இயோ கூறுகிறார்.
அதேபோல் மாக்மாவில் உள்ள வாயுவின் அளவும், எரிமலைகள் எவ்வளவு மோசமாக வெடிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. வாயுவின் அளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெடிப்பு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர் .
அவை எத்தனை முறை வெடிக்கும்?
நீருக்கடியில் உள்ள எரிமலைகள் மற்றும் அவற்றின் வெடிப்புகளின் சரியான எண்ணிக்கையை அறிவது கடினம், ஏனெனில் இவை அரிதாகவே கண்காணிக்கப்படுகின்றன என்கிறார் ஐசோபெல் யோ.
நீருக்கடியில் உள்ள எரிமலைகளைக் கண்காணிக்க தேவையான தொழில்நுட்பத்தின் செலவு, நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்களின் தேவை, தொலைதூர சூழலில் விஞ்ஞானிகள் செயல்படுவதற்கு உள்ள சிரமங்கள் போன்ற பல காரணிகளால் நீருக்கடியில் உள்ள எரிமலைகளைக் கண்காணிப்பதற்கு அதிக செலவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் நீருக்கடியில் ஆயிரக்கணக்கான எரிமலைகள் இருப்பதாக நம்புகின்றனர். மற்றவர்கள் ஒரு மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், UW/NSF-OOI/WHOI; V24
படக்குறிப்பு, எரிமலை வெடிப்புகளுக்குப் பிறகு கடலின் அடிப்பகுதியில் எரிமலைக்குழம்பு திடமாகிறது பல விஞ்ஞானிகள், நிலத்தில் உள்ளவற்றை விட நீருக்கடியில் அதிக எரிமலைகளும், அதிக வெடிப்புகளும் இருப்பதாக நம்புகின்றனர்.
இதற்குக் காரணம் சிக்கலான கணிதக் கணக்கீடுகளும், பல முக்கிய பரிசீலனைகளும் இருப்பதுதான். உதாரணமாக, பூமியின் மேற்பரப்பில் சுமார் 70% நீரால் மூடப்பட்டிருப்பது போன்ற தகவல்கள் இந்த கணக்கீடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
“இந்த அமைப்புகள் விரிவாக அளவிட்ட இடங்கள் உலகில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன” என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் புவியியலாளர் பேராசிரியர் டெப் கெல்லி கூறுகிறார்.
எந்த தீவுகள் எரிமலைகளாக உள்ளன?
உலகில் பல தீவுகள் எரிமலை வெடிப்புகளால் உருவாகியுள்ளன.
எடுத்துக்காட்டாக, எரிமலை தீவுகளின் ஒரு நேர்கோட்டு சங்கிலிதான் ஹவாய் தீவுகள். இவை சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகத் தொடங்கியதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடலுக்கு அடியில் உள்ள மாக்மா மேல்நோக்கி உயர்ந்து, கடல் மட்டத்திற்கு மேல் தோன்றியதால் இவை உருவாகியதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
சாண்டோரினி தீவு, ஏஜியன் கடலில் கிமு 1630-ல் ஒரு பெரிய பண்டைய எரிமலை வெடிப்பால் உருவானது என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) கூறுகிறது.
ஐஸ்லாந்து உள்ளிட்ட பிற இடங்களும் எரிமலை நடவடிக்கைகளால் உருவாகியவைதான்.
“உலகில் எரிமலைத் தீவுகளை காணக்கூடிய பல இடங்கள் உள்ளன. நீங்கள் செல்லக்கூடிய இடங்களில் எங்காவது மணல் கருப்பாக இருந்தால், அது பெரும்பாலும் எரிமலை மண்ணாக இருக்கலாம்”என்கிறார் இயோ.
பட மூலாதாரம், Jose Sarmento Matos/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, கிரேக்க தீவான சாண்டோரினி எரிமலை வெடிப்புகளால் உருவாக்கப்பட்டது. நீருக்கடியில் உள்ள எரிமலைகள் தொடர்ந்து புதிய நிலப்பகுதிகளை உருவாக்குகின்றன.
உதாரணமாக, 2023-ல் ஜப்பானுக்கு அருகிலுள்ள இவோட்டோ தீவின் கடற்கரையில் ஒரு நீருக்கடியில் எரிமலை வெடித்து, புதிய தீவு ஒன்றை உருவாக்கியது.
ஆனால், சில சமயங்களில் இந்த புதிய தீவுகள் அரிக்கப்பட்டு தண்ணீருக்கு அடியில் மறைந்துவிடுகின்றன.
“நாம் அதிக தீவுகள் உருவாகியிருப்பதைக் காணலாம், ஆனால் சில தீவுகள் மறைவதையும் காணலாம்” என்கிறார் ஐசோபெல் யோ.
எரிமலைகளை விட அதிகம்
நீருக்கடியில் உள்ள எரிமலைகளை கண்காணிப்பது கடல் சூழலை நன்கு புரிந்துகொள்ள முக்கியம் என்று பேராசிரியர் கெல்லி வலியுறுத்துகிறார்.
“இந்த எரிமலைகள் கடற்பரப்பில் சோலைகளைப் போல உள்ளன. இவற்றுடன் நம்பமுடியாத உயிரியல் சமூகங்கள் உள்ளன. பாறைகளைப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு பல விலங்குகள் உள்ளன”என்றும் அவர் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நீருக்கடியில் உள்ள சூழல்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள், ஆழ்கடல் சுரங்கம் போன்ற செயல்பாடுகளில், பொறுப்பான முடிவுகளை எடுக்க உதவும் என்கிறார் பேராசிரியர் கெல்லி.
“அங்கு என்ன வகையான உயிரினங்கள் உள்ளன, அவை கடலின் மற்ற பகுதிகளை எவ்வாறு பாதிக்கின்றன, அவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சுரங்கம் செய்வதற்கு முன் இந்தத் தகவல்கள் தேவை,” என்று அவர் விளக்குகிறார்.
பட மூலாதாரம், UW/Carleton College/NSF-OOI/WHOI; V24
படக்குறிப்பு, சிவப்பு குழாய் புழுக்கள் போன்ற பல இனங்கள் கடலுக்கு அடியில் எரிமலை பாறைகளில் வாழ்கின்றன. நாம் கவலைப்பட வேண்டுமா?
நிலத்தில் இருக்கும் எரிமலைகளோ அல்லது நீருக்கடியில் இருக்கும் எரிமலைகளோ, அனைத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று இயோ கூறுகிறார்.
“நீருக்கடியில் உள்ள எரிமலைகளைப் பற்றி, மற்ற எரிமலைகளை விட அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்,” என்று கூறும் அவர்,
“ஆனால், அவற்றை நிலத்தில் உள்ளவற்றைப் போலவே கண்காணிக்க வேண்டும். ஆனால், நாம் அதனைச் செய்யவில்லை” என்பதையும் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், NSF-OOI/UW/CSSF
படக்குறிப்பு, “கடல் பன்றி” என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு உயிரினம் ஆக்சியல் சீமவுண்ட் எரிமலையைச் சுற்றி வாழ்கிறது. ஏப்ரல் மாதத்தில், ஐஸ்லாந்தில் நிலத்தில் உள்ள எரிமலை வெடித்ததால், சுற்றுலாப் பயணிகளும், அங்கு குடியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
எனவே, “நீருக்கடியில் உள்ள எரிமலைகளிலும் இவ்வாறு நடக்க வாய்ப்பிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்,” என்கிறார் முனைவர் யோ.
நீருக்கடியில் உள்ள எரிமலைகளை கண்காணிப்பது முக்கியம், ஏனெனில் அவை ஏற்படுத்தும் ஆபத்துகள் வெடிப்புகளுடன் மட்டும் இணைக்கப்படவில்லை. எரிமலையின் பகுதிகள் நீருக்கடியில் உடைந்து, சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
ஆக்சியல் சீமவுண்ட் என்றால் என்ன?
பட மூலாதாரம், NSF-OOI/UW/CSSF;V13
படக்குறிப்பு, ஆக்சியல் சீமவுண்டின் உச்சியில் பல புகைபோக்கிகள் உள்ளன.பேராசிரியர் டெப் கெல்லி, ஆக்சியல் சீமவுண்ட் எரிமலையின் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த எரிமலை பசிபிக் பெருங்கடலில் சுமார் 2,600 மீட்டர் (8,500 அடி) ஆழத்தில் உள்ளது.
இந்த எரிமலை 311 மைல் (500 கிமீ) நீளமுள்ள கேபிள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த கேபிள் கரையிலிருந்து எரிமலைக்கு நேரடியாகச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், UW/NSF-OOI/WHOI;V17
படக்குறிப்பு, ஆக்சியல் சீமவுண்டில் குளிர்ந்த எரிமலைக்குழம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், விஞ்ஞானிகள் எரிமலை வெப்பமடைவதையும், அதன் முந்தைய வெடிப்புகளின் புள்ளிகளை விட அதிகமாக இருப்பதையும் கவனித்துள்ளனர், என்கிறார் பேராசிரியர் கெல்லி.
இது அடுத்த ஒரு வருடத்தில் வெடிக்கலாம். ஆனால், கடலின் அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இது நிலத்தில் உணரப்படாது என்று கூறும் அவர்,
புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நீருக்கடியில் உள்ள எரிமலை அமைப்பை சிறப்பாகக் கண்காணிக்க உதவும் என்றும் கருதுகிறார்.
“இது நமது பூமியின் மிக முக்கியமான பகுதி. இதைப் பற்றி நாம் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்துகிறார் பேராசிரியர் கெல்லி .
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு