டிரம்ப் கையில் தென்படும் மாற்றத்திற்கு காரணமான நீண்ட கால உடல்நல பாதிப்பு என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நீண்டகால இரத்தநாள பாதிப்பு உள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது.எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன்பதவி, பிபிசி செய்திகள்எழுதியவர், குவாசி கியாம்ஃபி ஆசிடுபதவி, பிபிசி செய்திகள்19 ஜூலை 2025, 07:30 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கையில் காணப்பட்ட காயங்கள் குறித்து பல நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நீண்டகால இரத்தநாள பாதிப்பு உள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கால்களில் வீக்கம் ஏற்பட்டதால், டிரம்ப் இரத்தநாள பரிசோதனை உள்ளிட்ட “முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு” உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.

டிரம்பின் கையில் உள்ள காயங்கள், ஆஸ்பிரின் உட்கொள்வதாலும் “அடிக்கடி கைகுலுக்குவதாலும் ஏற்பட்ட திசு பாதிப்பால் உருவானவை” என்று கூறிய லீவிட், இது “ஆஸ்பிரின் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழக்கமான மருத்துவ முறையின் ஒரு பகுதி,” என்றும் தெரிவித்தார்.

79 வயதான டிரம்ப் தனது உடல்நலம் சிறப்பாக உள்ளது என்று அடிக்கடி கூறுவார். ஒருமுறை அவர் தன்னை “அதிபர்களிலேயே மிக ஆரோக்கியமான அதிபர்” என்று கூறிக் கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images

டிரம்புக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட இரத்த நாள நிலை, ‘நீண்டகால இரத்தநாள பாதிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. காலில் உள்ள இரத்த நாளங்கள் இதயத்துக்கு இரத்தத்தை அனுப்ப முடியாமல், கீழ் மூட்டுகளில் இரத்தம் தேங்கி வீக்கமடையும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வாஸ்குலர் அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியர் மருத்துவர் மெரில் லோகன், இதுகுறித்து பேசுகையில், இரத்தநாளங்களும் வால்வுகளும் “இரத்தத்தை கால்களில் இருந்து மேலே இதயத்தை நோக்கி,” அனுப்புகின்றன என்று பிபிசியிடம் கூறினார்.

கால்களில் இருந்து இதயத்துக்கு இரத்தம் பாயும்போது, ஈர்ப்பு விசைக்கு எதிராக நகர்வதால் அந்த செயல்முறை கடினமாகிறது.

“இரத்தநாளங்களும் வால்வுகளும் செயல்படாமல், இரத்தம் கால்களில் பின்னோக்கி பாய்வது தான் நீண்டகால இரத்தநாள பாதிப்பு எனப்படுகிறது” என்கிறார் லோகன்.

அமெரிக்க அதிபர்களிலேயே அதிக வயதானவர்

“ஆழமான இரத்தநாள உறைவு அல்லது தமனி நோய் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,” என்றும் “அனைத்து பரிசோதனை முடிவுகளும் சாதாரண அளவில் உள்ளன,” என்றும் லீவிட் கூறினார்.

டிரம்புக்கு ஏற்பட்டுள்ள இரத்தநாள பாதிப்பு, “தீங்கற்றது மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவானது,” என்று வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் பார்பபெல்லா, செய்தியாளர்களுக்கு அளித்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டிரம்புக்கு “இதய செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு அல்லது பொது நோய்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை,” என்று கூடுதல் பரிசோதனை முடிவுகள் கூறுவதாகவும் பார்பபெல்லா குறிப்பிட்டார். இது லீவிட் அளித்த முந்தைய அறிக்கையை உறுதிப்படுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக, டிரம்ப், ” சிறந்த உடல்நலத்துடன்” இருக்கிறார் என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 13, 2025 அன்று நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், டிரம்பின் கால்கள் வீங்கி இருப்பது போல காணப்பட்டதை புகைப்படக் கலைஞர்கள் பதிவு செய்தனர்.

அதனையடுத்து இந்த வாரம், பஹ்ரைன் பிரதமர் சல்மான் பின் ஹமாத் பின் இசா அல் கலீஃபாவை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்தபோது அவரது கையில் சிராய்ப்புகள் இருப்பதையும் புகைப்படங்கள் காட்டின.

பிப்ரவரி மாதம் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்த போது, டிரம்பின் கையில் சிராய்ப்பு இருப்பது புகைப்படத்தில் பதிவானது.

அவரது வீங்கிய கால்களும், சிராய்ப்புகளும், டிரம்புக்கு இதுவரை வெளியே சொல்லப்படாத நோய் இருக்கலாம் என்று இணையத்தில் விவாதங்களையும் வதந்திகளையும் தூண்டியது.

ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர உடல் பரிசோதனைக்குப் பிறகு, டிரம்ப் முழு “அறிவாற்றல் மற்றும் உடல் நலத்துடன் இருப்பதாக” பார்பபெல்லா கூறினார்.

ஜனவரி மாதம் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது டிரம்ப் 78 வயது ஏழு மாத வயதுடையவராக இருந்தார். இதன் மூலம் அமெரிக்காவில் அதிபராக பதவியேற்ற மிக வயதான நபரானார்.

நாள்பட்ட இரத்தநாள பாதிப்பு என்றால் என்ன?

நாள்பட்ட இரத்தநாள பாதிப்பு குறித்த பார்பபெல்லாவின் மதிப்பீட்டை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.

“இது தீவிர நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் அது ஒரு தீவிரமான நிலை அல்ல, இது மிகவும் பொதுவான ஒன்றாகும்” என்று வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தின் வாஸ்குலர் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் மேத்யூ எட்வர்ட்ஸ் பிபிசியிடம் கூறினார்.

“அவரது வயதில், 10 முதல் 35% மக்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் ” என்றும் அவர் தெரிவித்தார்.

அதிக எடை, இரத்தக் கட்டிகள் இருந்திருப்பது மற்றும் நீண்ட நேரம் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவை நாள்பட்ட இரத்தநாள பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனித்துவமாக உருவாக்கப்பட்ட மருத்துவ தரம் வாய்ந்த காலுறைகளை அணிவது இந்த நிலையை கட்டுப்படுத்த உதவும் என்றும், இரவில் கால்களை உயர்த்தி வைக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

“எனது நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் அவர்களின் கால்கள் மற்றும் பாதங்களில் ஒரு நல்ல லோஷனைப் பயன்படுத்தச் சொல்கிறேன், பின்னர் உடல் பருமன் போன்ற பிற ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்தச் சொல்கிறேன்,” என்கிறார் மருத்துவர் லோகன்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதிபரின் கையில் காணப்பட்ட சிராய்ப்புகள்

நீண்டகால இரத்தநாள பாதிப்பு உடலின் கீழ் பகுதியை மட்டுமே பாதிக்கிறது, எனவே இது அதிபரின் கையில் சமீபத்தில் காணப்பட்ட சிராய்ப்புகளுடன் தொடர்புடையது அல்ல. இது தான் சமீப காலமாக இணையத்தில் விவாதங்களைத் தூண்டியது.

அதிபரின் மருத்துவர், கைகுலுக்கல் மற்றும் ஆஸ்பிரின் மருந்தின் பக்கவிளைவு காரணமாக சிராய்ப்பு ஏற்பட்டதாகக் கூறினார். இந்த மருந்து மாரடைப்பு, இரத்த உறைவு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.

டிரம்பின் வயதும் ஆஸ்பிரின் உட்கொள்வதும் சிராய்ப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகை மருத்துவர் அளித்த விளக்கத்தை, தான் ஆமோதிப்பதாகக் கூறினார் மருத்துவர் எட்வர்ட்ஸ்.

“வயதாகும் போது சிராய்ப்பு ஏற்படுவது பொதுவானது, குறிப்பாக ஆஸ்பிரின் மற்றும் இரத்தத்தை உறையாமல் தடுக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இது அதிகமாக ஏற்படலாம் ” என்று குறிப்பிட்ட மருத்துவர் எட்வர்ட்ஸ், “யாராவது உங்கள் கையை வலுவாக அழுத்தினால், சிராய்ப்பு ஏற்படலாம் என நான் நம்புகிறேன்” என்றும் கூறினார்.

“அது மிகவும் வலுவான கைகுலுக்கலாக இருக்கும்,” என்கிறார் எட்வர்ட்ஸ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு