பாம்பை பிடித்து மாலை போல கழுத்தில் சுற்றியிருந்த நபர் – அதனிடமே கடிபட்டு இறந்த அவலம்

பட மூலாதாரம், Surah Niyazi

படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார்எழுதியவர், ஷுரைஹ் நியாஸிபதவி, பிபிசி ஹிந்திக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், ‘பாம்புகளின் நண்பர்’ தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார்.

முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்தார்.

பாம்புகளை மீட்பதில் அந்த வட்டாரத்தில் பிரபலமாக இருந்த தீபக், இதற்காகவே அவர் ஜேபி கல்லூரியில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

ராகோகரில் ஒரு வீட்டில் பாம்பு புகுந்துவிட்டதாக திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12 மணிக்கு அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. தீபக் அந்தப் பகுதியை அடைந்து பாம்பை பாதுகாப்பாக மீட்டார்.

இதற்கிடையில், அவரது 12 வயது மகனின் பள்ளியிலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, பள்ளி மூடப்பட்டுள்ளதாகவும், வந்து மகனை அழைத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அவசரத்தில் பாம்பை பெட்டியில் அடைப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டு பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தனது மகனை வண்டியின் பின்புறம் அமர வைத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கழுத்தைச் சுற்றியிருந்த பாம்பு அவரது வலது கையில் கடித்தது.

பாம்பு கடித்தவுடன் மருத்துவமனையை அடைந்த தீபக் மஹவார்

பட மூலாதாரம், Surah Niyazi

படக்குறிப்பு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்திருந்தால் தீபக் காப்பற்றப்பட்டிருக்கலாம் என மருத்துவர் கூறுகிறார்பாம்பு கடித்தவுடனே, தீபக் தனது நண்பர் ஒருவரை அழைத்தார், அவர் வந்து ராகோகரில் மிக அருகே இருந்த மருத்துவமனைக்கு தீபக்கை அழைத்துச் சென்றார். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அவரை குணாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர்.

தனது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பார்த்த தீபக், மாலையில் தனது வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் இரவில் அவரது நிலை மோசமடைந்த நிலையில் அவர் காலையில் உயிரிழந்தார்.

“அவர் எங்களிடம் வந்தபோது அவரது நிலை சாதரணமாக இருந்தது. அவரது முக்கிய உறுப்புகள் நலமாக இருந்தன, அவர் பேச்சு சாதாரணமாக இருந்ததுடன் முழு நினைவுடன் இருந்தார்,” என ராகோகர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தேவேந்திர சோனி பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் நிலையான நடைமுறைகளின்படி உடனடியாக அவருக்கு சிகிச்சையைத் தொடங்கினோம். அவருக்கு ஐவி செலுத்தப்பட்டது, நஞ்சு முறிவு மருந்து மற்றும் இதர மருந்துகளைக் கொடுத்த பின்னர் இங்கு அனைத்து வசதிகளும் இல்லாததால் குணாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினோம்.”

குணாவில் உள்ள மருத்துவமனையில் சில மணிநேரம் இருந்த தீபக், நன்றாக இருப்பதாக உணர்ந்ததால் வீடு திரும்பிவிட்டதாக மருத்துவர் சோனி தெரிவித்தார்.

“மிக மெதுவாகவே வேலை செய்யக்கூடிய நஞ்சைக் கொண்ட நாகம் போன்று அந்தப் பாம்பு தெரிந்தது. இதைப் போன்ற சூழ்நிலைகளில், நோயாளிகள் குறைந்தது 24 மணிநேரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது அவசியம். அவர் வீடு திரும்பாமல் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக்கூடும்,” என மருத்துவர் சோனி தெரிவித்தார்.

பாம்பு மீட்கும் திறன் பெற்றுத் தந்த வேலை

பட மூலாதாரம், Surah Niyazi I

படக்குறிப்பு, அவரது இளைய சகோதரர் நரேஷ் மஹவாரின் கூற்றுப்படி இதற்கு முன் பலமுறை தீபக்கை பாம்பு கடித்துள்ளதுதீபக் மஹவார் ராகோகரில் இருக்கும் ஜேபி கல்லூரியில் பாம்புகளின் நண்பராக (பாம்பு பிடிப்பவர்) பணியாற்றி வந்தார். அருகில் உள்ள கிராமங்களில் பாம்பு இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் என கோரிக்கை வந்தால், அவர் அங்கே சென்று பாம்புகளை மீட்பார்.

சம்பவம் நடந்தபோது, தீபக் தனது இளைய மகனை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார்.

தீபக்கிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு 14 வயது, மற்றொருவருக்கு 12 வயது. அவரது மனைவி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

தீபக்கின் இளைய சகோதரர் நரேஷ் மஹவார், “தீபக் இந்தப் பணியை பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தார், பாம்பு பிடிக்கும் கலையை அவர் வேறு யாரிடம் இருந்தோ கற்றுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் அவர் தனது கலையில் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் அவருக்கு ஜேபி கல்லூரியில் வேலை கிடைத்தது. இந்த கல்லூரி பாம்புகள் அதிகம் காணப்படும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது” என பிபிசியிடம் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இதற்கு முன்பும் தீபக்கை பல முறை பாம்புகள் கடித்துள்ளன. பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு தனக்குத் தானே சிகிச்சை செய்து கொள்வார். ஆனால் ஒருமுறை அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிருந்தது.

இந்த முறையும் இது சாதாரண வீக்கம்தான் எனவும், தான் விரைவில் குணமடைந்து விடுவோம் எனவும் நினைத்தார். அதனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,” என நரேஷ் கூறுகிறார்.

“இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும்போது மனிதாபிமான உணர்வுடன் எழுத வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். என் சகோதரர் இறந்துவிட்டார், இப்போது அவரது இரு சிறிய குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அரசு இந்த விவகாரத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒருவேளை ஏதாவது உதவி கிடைக்கலாம். இதனால் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படலாம்,” என அவர் கூறினார்.

“தவறான புரிதல்களைத் தாண்டி, தீபக் பலமுறை தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு உதவிய நல்ல மனிதராக இருந்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்தியா பெயர் பெற்றது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 லட்சம் பாம்புக் கடி சம்பவங்கள் பதிவாகின்றன.

இவற்றில் சுமார் 25 லட்சம் சம்பவங்களில், மக்களின் உடலை பாம்பின் நஞ்சு பாதிக்கிறது. பதிவான பாம்புக்கடி சம்பவங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். சுமார் நான்கு லட்சம் பேர் உடலின் ஏதோ ஓர் உறுப்பை இழக்கின்றனர் அல்லது அவை நிரந்தரமாகச் செயல்படாமல் போகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசியின் செய்தி ஒன்றிலும் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

பாம்புக் கடி அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக மத்திய பிரதேசம் கருதப்படுகிறது. இங்கு மருத்துவமனை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் ஒருவரின் மரணம் பாம்புக் கடியால் ஏற்பட்டது என நிரூபிக்கும் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்குகிறது.

‘தி ராயல் சொசைட்டி ஆஃப் ட்ராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன்’ இதழில் 2024ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு, இழப்பீடுகள் குறித்து பகுப்பாய்வு செய்திருந்தது. இதில், 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில், இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 5,728 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மாநில அரசு, பாம்புக் கடியால் ஏற்பட்ட மரணங்களுக்கு மொத்தம் ரூ. 229 கோடி நிவாரணத் தொகையை விநியோகித்து இருந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு