Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், @sgsiyer1970/x
எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர்
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வாலியின் இறந்த நாள் இன்று. டி.எஸ். ரங்கராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாலி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் துவங்கி ஏ.ஆர். ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களின் மெட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார்.
அவருடைய நினைவு நாளான இன்று அவர் எழுதிய பாடல்களில் நினைவுகூரத்தக்க 15 பாடல்களின் தொகுப்பு இது.
1. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.. ஆனால் இதுதான் முதல் இரவு
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த கற்பகம் (1963) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. வாலி திரையுலகில் அறிமுகமான துவக்க ஆண்டுகளில் எழுதிய சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றும்.
இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். எல்லாப் பாடல்களையும் பி. சுசீலாவே பாடியிருந்தார். இதே படத்தில் இடம்பெற்ற ‘அத்தைமடி மெத்தையடி’ போன்ற பாடல்கள் பிரபலமானவை என்றாலும், இந்தப் பாடல் தனித்துவமானது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தப் பாடலில் பல இடங்களில், சொல்ல வேண்டிய சொற்களை ஹம்மிங் மூலம் நிரப்பியிருப்பார் வாலி. உதாரணமாக, “வயதில் வருவது ஏக்கம்.. அது வந்தால் வராது … (தூக்கம்)”, வந்ததம்மா மலர் கட்டில்.. இனி வீட்டினில் ஆடிடும் …(தொட்டில்)” போன்ற வரிகளைச் சொல்லலாம்.
2. தொட்டால் பூ மலரும்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி நடித்து வெளியான ‘படகோட்டி’ (1964) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் 8 பாடல்கள். எல்லாப் பாடல்களையுமே வாலியே எழுதியிருந்தார். வழக்கம்போலவே, பாடல் வரிகள் மிகச் சிறப்பாக இருந்தன.
இதே பாடலை, 2004ல் எஸ்.ஜே. சூர்யாவும் சிம்ரனும் நடித்து வெளிவந்த ‘நியூ’ திரைப்படத்தில் வேறு மெட்டில் பயன்படுத்தியிருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பாடல் வரிகள் புதுமையாகவே இருந்தன.
3. இந்தப் புன்னகை என்ன விலை
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் வெளியான தெய்வத்தாய் (1964) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
இந்தப் பாடலும் வரிகளின் இனிமைக்காக அறியப்பட்ட பாடல்தான். “எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும், எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும், எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும், எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும், எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்” என்ற வரிகள் இதற்கு ஒரு உதாரணம்.
பட மூலாதாரம், 4K Tamil Old Film / Youtube
படக்குறிப்பு, மதுரையில் பறந்த மீன் கொடியை பாடலில் இடம் பெற்ற காட்சி 4. காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி நடித்த கலங்கரை விளக்கம் (1965) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் வாலி மூன்று பாடல்களை எழுதியிருந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில், எல்லாப் பாடல்களுமே சிறப்பாக அமைந்திருக்கும் என்றாலும் இந்தப் பாடலின் வரிகள் தனித்துத் தெரிந்தன.
இதே படத்தில் வாலி எழுதிய ‘என்ன உறவோ, என்ன பிரிவோ’ பாடலும் அட்டகாசமாக அமைந்திருக்கும்.
5. நான் ஆணையிட்டால்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை (1965) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் மிக முக்கியமான தருணத்தில் ஒலிக்கும் பாடல் இது.
அதேபோல, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்விலும் இந்தப் பாடலுக்கு முக்கியப் பங்கிருந்தது. நம்பியாரை சவுக்கால் அடித்தபடி எம்.ஜி.ஆர். பாட ஆரம்பிக்கும்போது திரையரங்குகளில் கைதட்டல் நிற்காமல் ஒலிக்கும்.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய பல பாடல்கள் பிற்காலத்தில் அரசியல் அர்த்தத்தோடு புரிந்துகொள்ளப்பட்டன. இந்தப் பாடலும் அதில் ஒன்று.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.6. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த சந்திரோதயம் (1966) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் 7 பாடல்கள். பாரதிதாசனின் இரண்டு பாடல்கள் தவிர, மீதமுள்ள ஐந்து பாடல்களை வாலி எழுதியிருந்தார்.
அந்த காலகட்டத்தில் வெளிவந்த பாடல்களோடு ஒப்பிட்டால், சுமார் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய இந்தப் பாடல் ஒரு நீண்ட பாடல்தான். ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’ என்ற இந்தப் பாடலின் வரிகள் மிக கவித்துவமானவையாக அமைந்திருக்கும். “குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ? நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ? நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ? எந்நாளும் பிரியாத உறவல்லவோ?” போன்ற வரிகள் இதற்கு ஒரு உதாரணம்.
7. மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள் (1967)
எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இரு மலர்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடலின் இலக்கிய நயத்தைப் பார்த்து, இந்தப் பாடலைக் கண்ணதாசன் எழுதியதாக கருதியவர்கள் பலர். படத் தயாரிப்பாளர் ஒருவர் கண்ணதாசனிடம் சென்று , ” ‘ இருமலர்கள் ‘ படத்துல ‘ மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் னு ஒரு பாட்டு எழுதியிருந்தீர்களே.. அதைப் போல ஒரு பாட்டு என் படத்துக்கும் வேணும்…’ என்று கேட்டார்.
அதற்கு கண்ணதாசன், “அதை நான் எழுதலீங்க… கவிஞர் வாலி எழுதிய அற்புதமான பாட்டு அது” என்று குறிப்பிட்டதாக எம்.எஸ். விஸ்வநாதன் ‘நான் ஒரு ரசிகன்’ நூலில் குறிப்பிட்டார். தனக்குப் பிடித்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் வாலி.
8. மதுரையில் பறந்த மீன்கொடியை
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வெளியான பூவா தலையா (1969) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடலில் பெண்ணை தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு வர்ணித்திருப்பார் வாலி.
“மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே… போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.. தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே… இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே ”
என்று ஆரம்பிக்கும் பல்லவி இதற்கு ஒரு உதாரணம் தான். பாடலில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பையும் பெண்ணோடு ஒப்பிட்டிருப்பார் வாலி. எழுதுவதற்கு சவாலான இந்தப் பாடல், கேட்பதற்கு மிக இனிமையான ஒன்று.
9. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வி. குமார் இசையமைத்த நூற்றுக்கு நூறு (1971) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மிகச் சிறப்பான இசையோடு, கருத்தாழமிக்க வரிகளையும் கொண்டிருந்த இந்தப் பாடல், 70களில் மிகவும் ஹிட்டான பாடல்களில் ஒன்று.
இதயம் எனது காணிக்கை – இணைவோம் என்ற நம்பிக்கை அழைத்தேன் ஓடி வா! ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும் அழகை தேடி வா! உனக்காக பெண்ணுண்டு, உறங்காத கண்ணுண்டு. தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு- ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்” என்ற வரிகள் உட்பட பாடல் முழுவதுமே ரசிக்கத்தக்க வரிகளைக் கொண்டது.
10. நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடித்த நாளை நமதே (1975) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்.
“காதலனையே நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு என்ன வரும்?” என்று எம்.ஜி.ஆர். கேட்க, “கனவு வரும்” என்று பதிலளிப்பார் லதா. ‘எப்படி?’ என எம்.ஜி.ஆர். மீண்டும் கேட்க, “நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது” என்று பாடலை துவங்குவார் நாயகி.
“ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட, மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது… கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது. கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது பருவம் பொல்லாதது பள்ளிக்கொள்ளாதது” என்று நீளும் பாடல் வரிகள் மிக அற்புதமாக இருக்கும்.
11. காலம் இளவேனில் காலம்
மணிவண்ணன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான விடிஞ்சா கல்யாணம் (1986) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. த்ரில்லர் திரைப்படமான இந்தப் படத்தில், ஒரே மெட்டில் இரண்டு பாடல்கள் அமைந்திருந்தன.
ஒன்று, காலம் இளவேனில் காலம் என்ற பாடல். இது மகிழ்ச்சியான பின்னணியில் அமைந்திருக்கும். மற்றொரு பாடல், “காலம் மழைக் காலம்” என்ற பாடல். இது ஒரு நெருக்கடியான பின்னணியில் அமைந்திருக்கும். இரண்டுமே இனிமையான பாடல்கள்.
த்ரில்லர் திரைப்படத்தில் இடம்பெற்றதாலோ என்னவோ, அதிகம் அறியப்படாத பாடல்களும்கூட.
12. தூங்காத விழிகள் ரெண்டு
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான அக்னி நட்சத்திரம் (1988) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட் என்றாலும், கே.ஜே. யேசுதாஸும் எஸ். ஜானகியும் பாடிய இந்தப் பாடல் கூடுதல் இனிமையான பாடல்.
“ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ? ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ? மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ? வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவை அல்லவோ?” என பாடல் வரிகளில் அட்டகாசம் செய்திருந்தார் வாலி.
பட மூலாதாரம், Music Studio/ Youtube
படக்குறிப்பு, தூங்காத விழிகள் ரெண்டு பாடல் காட்சி 13. கல்யாண மாலை
கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் (1989) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்திற்கு இசை இளையராஜா. இந்தப் படத்தில் நாயகன் ரகுமானை நாயகியான கீதா தொடர்ந்து துன்புறுத்துக்கொண்டே இருப்பார்.
அந்தப் பின்னணியில், பொதுவாக திருமண வாழ்க்கை குறித்தும் தன் திருமண வாழ்க்கை குறித்தும் நினைத்தபடி ரகுமான் பாடுவதைப் போல இந்தப் பாடல் அமைந்திருக்கும்.
வெளியாகி 35 ஆண்டுகள் கழிந்த பிறகும் எங்கோயோ தூரத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது இந்தப் பாடல்.
14. நீ தான் என் தேசிய கீதம்
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பார்த்தாலே பரவசம் (2001) படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற எட்டுப் பாடல்களில் ஐந்து பாடல்களை வாலியே எழுதியிருந்தார். மாதவனும் சினேகாவும் நடித்த இந்தப் பாடல் முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது.
பாடலின் துள்ளல் மிகுந்த இசையும் வாலியின் அட்டகாசமான வரிகளும் சேர்ந்து பாடலைத் திரும்பத் திரும்ப கேட்க வைத்தன.
15. உனக்காகப் பிறந்தேனே எனதழகா
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. வாலி பாடல் எழுதிய கடைசி சில திரைப்படங்களில் இந்தப் படமும் ஒன்று.
இந்தப் படத்தில் இரண்டு ஜோடிகள். ஒன்று விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி. மற்றொன்று ஜெயப்ரகாஷ் – துளசி ஜோடி. இதில் உனக்காக பிறந்தேனே எனதழகா பாடல் ஜெயப்ரகாஷ் – துளசி ஜோடிக்காக எழுதப்பட்டிருக்கும்.
இதே மெட்டில் அமைந்த ‘எனக்காக பிறந்தாயே’ பாடல் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேசுக்கு எழுதப்பட்டிருக்கும். இரண்டு பாடல்களுமே இரண்டு ஜோடிக்கும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு