பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், ஜிரொபோர்ன் ஶ்ரீசாம் & கோ ஈவ்பதவி, பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கினர்.

அப்போது அவர்கள், அந்த பெண்ணை ” கோல்ஃப்” என்ற பெயரில் அழைத்தனர். மேலும் குறைந்தது 9 துறவிகளுடன் அப்பெண் உறவில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேற்கொண்டு பேசிய காவல்துறையினர், கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பெண் இந்த முறையில் 385 மில்லியன் பாட் (கிட்டத்தட்ட ரூ. 100 கோடி மதிப்பில்) பணம் பறித்துள்ளார் என்று தெரிவித்தனர்.

விசாரணை நடத்திய அதிகாரிகள், அப்பெண்ணின் வீட்டை சோதனையிடும் போது, அங்கே 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றினர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டியே துறவிகளிடம் அவர் பணம் பறித்தது குறிப்பிடத்தக்கது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

புகழ்பெற்ற தாய்லாந்தின் புத்த அமைப்பு மீது சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது. கடந்த சில ஆண்டுகளாகவே புத்த துறவிகள் பாலியல் குற்றங்களிலும் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Thai News Pix

படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் ஜூன் மாதத்தின் போது தான் முதல் வழக்கானது காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. பாங்காங்கில் இருந்த புத்தமதத்துறவிகளின் தலைவர் ஒருவர், பெண் ஒருவரால் மோசடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறவறத்தைவிட்டு வெளியேறினார் என்று அவர்கள் கண்டறிந்தனர்.

கோல்ஃப் அந்த புத்தத்துறவியுடன் 2024-ஆம் ஆண்டு மே மாதம் காதல் உறவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிறகு அந்த பெண் அவரின் குழந்தைக்கு தாயானதாகவும், குழந்தை பராமரிப்பிற்காக 7 மில்லியன் பாட் பணம் கேட்டதாகவும் காவல்துறையினர் விளக்குகின்றனர்.

அதிகாரிகள், மேலும் பல துறவிகள் இதே ரீதியில் அப்பெண்ணுக்கு பணம் அனுப்பியதை கண்டறிந்தனர்.

அப்படி அனுப்பப்பட்ட பணம் முழுமையும் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடத்தக்க அளவு பணம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

விசாரணை அதிகாரிகள் கோல்ஃபின் வீட்டை இந்த மாதத்தின் துவக்கத்தில் சோதனையிட்டனர். அப்போது அவருடைய போனைக் கைப்பற்றிய காவல்துறையினர், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருப்பதைக் கண்டனர்.

மிரட்டிப் பணம் பறித்தல், பண மோசடி மற்றும் திருட்டுப் பொருட்களை பெற்றது என்று பல்வேறு வழக்குகளை தற்போது அப்பெண் எதிர்கொண்டு வருகிறார்.

“மோசமாக நடந்து கொள்ளும் துறவிகள்” குறித்து புகார் அளிக்க சிறப்பு உதவி எண்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து துறவற விதிமுறைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக கூறியுள்ளது தாய்லாந்து பௌத்த விவகாரங்களை நிர்வகிக்கும் சங்கா சுப்ரீம் கவுன்சில்.

துறவற விதிமுறைகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க அரசு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 81 துறவிகளுக்கு தாய்லாந்து நாட்டு மன்னர் உயர் பட்டங்களை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த விவகாரத்திற்கு பிறகு மன்னர் வஜிரலோங்கோர்ன் அந்த உத்தரவை ரத்து செய்தார்.

சமீபத்திய சம்பவங்களைமேற்கோள்காட்டிய அவர், பௌத்தர்கள் மனதில் பெரும் துன்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

தாய்லாந்தில் 90%க்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். புத்த துறவிகள் மரியாதைக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். நற் கர்மத்தைப் பெறுவதற்காக தாய்லாந்து ஆண்கள் பலரும் குறிப்பிட்ட காலத்திற்கு துறவறம் மேற்கொள்வதுண்டு. ஆனால் சமீபத்தில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளது அங்குள்ள புத்த அமைப்பு.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் பெயர் பெற்றவரான விராபோல் சுக்போல் என்ற துறவி 2017-ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள், மோசடி, பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போது, அவர் பெயர் தலைப்புச் செய்திகளானது.

2022-ஆம் ஆண்டு, தாய்லாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்திருக்கும் பெட்சாபூனில் உள்ள புத்த கோவில் ஒன்றில் இருந்த நான்கு துறவிகளும் போதைப் பொருட்கள் பரிசோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்து சங்கா அமைப்பில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக பல ஆண்டுகளாக விமர்சனம் வைக்கப்பட்டாலும் கூட, நூறாண்டுகால பழமை வாய்ந்த அந்த அமைப்பில் சிறிய அளவிலேயே மாற்றங்கள் வந்துள்ளன என்று பலரும் தெரிவிக்கின்றனர். பிரச்னையின் பெரும்பகுதி அதன் அதிகாரப் படிநிலையில் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“இது தாய்லாந்து அதிகார அமைப்பைப் போன்றே செயல்படும் ஒரு சர்வாதிகார அமைப்பாகும். அங்கு மூத்த துறவிகள் உயர் அதிகாரிகளைப் போலவும், இளைய துறவிகள் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர்” என்று மத அறிஞர் சுரபோத் தவீசக் பிபிசி தாய்லாந்து சேவையிடம் பேசும் போது தெரிவித்தார்.

“அவர்கள் நெருடலை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றைக் கண்டால் அதனை எதிர்த்து அவர்கள் பேசத் துணிவதில்லை. ஏனெனில் புத்தக் கோவிலில் இருந்து அவர்கள் மிக எளிதில் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள்.”

தற்போது காவல்துறை மற்றும் சங்கா அமைப்பால் நடைபெற்று வரும் விசாரணைகளானது, தேவைப்படும் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் முக்கிய நடவடிக்கையாகும்.

“உண்மையை வெளிக்கொண்டுவருவது மிகவும் முக்கியமானது.” என்று ப்ரகிராதி சடாசுட் கூறுகிறார். அவர் பாங்காங் தம்மசாட் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

“தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள சுப்ரீம் சங்கா கவுன்சில் பலரின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்தே அது அமையும்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு