யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது, மாநகர சபை உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்ற நிலையில் சபை அமர்வில் பங்கேற்ற மாநகர சபை உறுப்பினர் இரத்தினம் சதீஸ் வெளியே வந்து பார்வையாளர் பகுதியில் இருந்து மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.

இதனை அவதானித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் குறித்த விடயம் தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக குறித்த உறுப்பினர் செயற்பட்டதால் அவருக்கு ஒரு மாதம் சபை அமர்வில் பங்கேற்க தடை விதிப்பது சம்பந்தமாக முதல்வர் சபை உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார்.

அதன் போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இளங்கோவன் குறித்த நபர் புதிய உறுப்பினர் என்பதால் மன்னிப்பு வழங்குமாறு கோரினார். இதனையடுத்து ஏனைய கட்சிகளை சேர்ந்த சிலர் குறித்த உறுப்பினரிடம் தன்னிலை விளக்கம் கோருமாறு கோரினர்.

இதனையடுத்து மீண்டும் சபைக்குள் சென்ற குறித்த உறுப்பினர் தான் ஊடகவியலாளர் என கூறி, அடையாள அட்டையென ஒரு அட்டையையும் காண்பித்து அதானால் தான் நேரலை செய்தேன் என்றார்.

ஊடகவியலாளர்கள் இருக்கும் போது உறுப்பினர் அவ்வாறு செயற்பட்டமை தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்த மாநகர முதல்வர் இனிமேல் இவ்வாறு சபை அமர்வில் நடந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாநகர சபை உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பிரிவை சேர்ந்தவர் என்பதுடன் கட்சி நிகழ்வுகளை முகநூல் வாயிலாக நேரலை ஒளிபரப்பு செய்பவராவர். அவர் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு ஊடக நிறுவனத்திலும் பணியாற்றவில்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது