Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் அம்ர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஸினால் இத் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களின் வரவேற்பினைப் பெற்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தினை முன்வைத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உரையாற்றுகையில்,
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் வரலாற்று ரீதியில் நாம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். எம் மீதான இனப்படுகொலை அரச கொள்கையாக இடம்பெற்றுள்ளது. எமது பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கில் நிலங்கள் திட்டமிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பௌத்த சிங்கள பேரினவாத விஸ்தரிப்பு முயற்சியாக எமது மொழி உரிமை மறுக்கப்பட்டது. தமிழ் மக்கள் என்ற காரணத்திற்காக சொந்த மண்ணிலேயே அரச ஒத்துழைப்போடும் அனுசரனையோடும் ஏவுதலோடும் வன்செயல்கள் வாயிலாகவும் இராணுவ நடவடிக்கைகள் வாயிலாகவும் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டனர். தமிழர்களைக் கொன்றால் குற்றமில்லை என்ற ஆட்சியாளர்களின் உத்தியோகப்பற்றற்ற ஆதரவு அரசினால் அளிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனைகளில் இருந்து விலத்தளிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை.
தமிழ் பெண்கள் அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர். இதற்கு செம்மணி தக்க சான்று. இன்றும் மீட்கப்படும் புதைகுழிகள் மீது சர்வதேச விசாரணை அமையுமாயின் பல உண்மைகளை அவை வெளிப்படுத்தும். தமிழ் இனமாகப் பிறந்தார்கள் என்ற அடிப்படையில் எமது கல்வி உரிமை வரலாற்றில் மறுக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சர்வதேசத்தினால் காட்டுமுராண்டிச் சட்டம் என இனங்காணப்பட்ட சட்டங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பல தசாப்தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் அரசியல் கைதிகளாக மீதமுள்ளவர்கள் விடுதலைக்காக ஏங்குகின்றனர். அரச படைகளால் வலோத்காரமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களது விடுதலையை கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் தெருக்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டு இருக்கின்றனர். சிறுவர்கள் பாடசாலை வளாகங்களுக்குள் வைத்தே அரச படைகளால் குண்டுகள் வீசப்பட்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவமயமாக்கத்தினுடாக பௌத்த சிங்கள பேரினவாதம் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வித சட்ட ரீதியான அணுகுமுறைகளும் இன்றி இராணுவ அதிகாரம் கொண்டு கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் பல நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகம் திட்டமிட்ட அரச தாபனங்கள் ஊடாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் பல மனிதப் புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஏராளமான எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை. இறுதி யுத்தத்திலும் ஏனைய யுத்தத்திலும் போர்த் தர்மங்களையும் உலக நியதிகளையும் மனித உரிமைகளையும் மீறி அரசு செயற்பட்டுள்ளது. வகைதொகையின்றி இலட்சக்கணக்கில் மக்களை படுகொலை செய்துள்ளது.
உள்நாட்டில் உண்மைகளை கண்டறிந்து நீதியை வழங்க போதிய பொறிமுறைகளும் ஏற்புடைமையும் இன்றைய அரசிடமும் கிடையாது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்குவதையும் நீதியை வழங்குவதாக சர்வதேசத்திடம் பொய்யான உத்தரவாதங்களை வழங்கி தமிழருக்கான நீதியை காலந்தாழ்த்தும் உத்திகளிலேயே அரசு கவனம் செலுத்துகின்றது. காலந்தாழ்த்துதல் ஊடாக எமது நீதிக்கேரிக்கைஇ மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைஇ இனப்பிரச்சினைத்தீர்வு ஆகியவற்றை நீர்த்துப்போகச் செய்யும். தந்திரோபாயத்தினை இலங்கை கொண்டுள்ளது.
எமது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், வரலாறு, அடையாளம் அனைத்தும் திட்டமிடப்பட்டு உள்நாட்டில் அழிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் எம் மீது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி ஒன்றே தீர்வைப் பெற்றுத்தரும் என்பதை அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆணைக்குரிய இவ் உயரிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் ஆட்சி மன்றில் தீர்மானமாக எடுக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.