ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

கிரித்தல இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சம்மி குமார ரத்னா மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பிலிருந்ததாக நம்பப்படும் கிரித்தல இராணுவ முகாமில் வடகிழக்கிலிருந்தும் கொழும்பு உள்ளிட்ட தெற்கு பகுதிகளிலிருந்தும் கடத்தி செல்லப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனிடையே சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில்  கையொப்பமிடும் நிகழ்வு இன்று புதன்கிழமை மன்னார் பகுதியில் இடம்பெற்றிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும்  நீதி வழங்கு ,இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை   உடனடியாக  ரத்து செய், அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர்ப்பு பதாகையில்  கையொப்பங்கள்  சேகரிக்கப்பட்டிருந்தது.