ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்தி வைப்பு – கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா பிரியா15 ஜூலை 2025, 09:03 GMT

புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹூதி பிரிவின் கீழ் இயங்கும் ஏமன் குடியரசின் நீதித்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை திட்டமிடப்பட்டிருந்த நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

முன்னதாக, இதுகுறித்து சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்திருந்தார்.

அவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, “கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டுக்குப் பிறகு, நிமிஷா பிரியா சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் இருக்கிறது. தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினருடனான சந்திப்பு இன்று நடக்கும்.

ஷேக் ஹபீப் உமரின் ஆலோசனைப்படி, ஹொடைடா மாநில தலைமை நீதிபதியும், ஏமன் ஷுரா கவுன்சிலின் உறுப்பினருமான, மரணமடைந்த மஹ்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்க மஹ்தியின் சொந்த ஊரான தமருக்கு வந்துள்ளார். அவர் ஷேக் ஹபீப் உமரின் சூஃபி கட்டளையைப் பின்பற்றுபவர் மட்டுமின்றி மற்றொரு முக்கிய சூஃபி தலைவரின் மகன் என்பதும் நம்பிக்கை தருவதாக உள்ளது.”

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார். “மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை”

“மஹ்தியின் கொலை அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மஹ்தி வாழ்ந்த பிராந்தியத்தின் பழங்குடியினர் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும். இதனால்தான் இதுவரை அந்தக் குடும்பத்தினருடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டால் மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. புகழ் பெற்ற அறிஞரும் சூஃபியுமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் மத்தியஸ்தம் மூலம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மஹ்தி குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இன்றைய விவாதம் ‘ப்ளட் மணி’ (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈட்டை (பெரும்பாலும் பணம்) ஏற்றுக்கொள்வது குறித்து இறுதி முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மஹ்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு, நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார். உடன் சாமுவேல் ஜெரோம்.”மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக பொருளல்ல”

ஏமனில் நிமிஷா பிரியா வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோமும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கூறியுள்ளார்.

“எல்லாம் நேர்மறையாக இருக்கிறது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக அதற்கு பொருளல்ல. நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பகிர்ந்து கொள்வேன்” என்று அவர் கூறினார்.

“மஹ்தியின் குடும்பத்தினர் இதுவரை மன்னிப்பு வழங்கவில்லை. அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே மரண தண்டனை ரத்து செய்யப்படும், மரண தண்டனையை ஒத்திவைப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே வழி, இது மன்னிப்பு பெறுவதற்காக மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அதிக நேரத்தை கொடுக்கும்.” என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு