யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று, நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை, சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம், தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக காவற்துறையினர்  குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.