சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் போராட்டம் நினைவிருக்கிறதா? இந்தியா நூலிழையில் கோட்டை விட்ட ஆட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்காக போராடிய சச்சின் எழுதியவர், எஸ். தினேஷ்குமார்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. குறைவான ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் பல டெஸ்ட்களை இந்தியா கோட்டைவிட்டுள்ளது. அவற்றில் சில முக்கியமான ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

சென்னை டெஸ்ட்: இந்தியா vs பாகிஸ்தான் (1999)

1999–ல் சென்னை டெஸ்டில் இந்தியா ஒரு மகத்தான போராட்டத்தை வெளிப்படுத்தியும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி தங்கள் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தினர். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாகிஸ்தானின் முகமது யூசுஃப், விக்கெட் கீப்பர்–பேட்டர் மொயின் கான் தலா 60 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் டிராவிட், அசாருதீன் இருவரின் அரை சதங்களின் உதவியுடன் 16 ரன்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஷாஹித் அப்ரிடியின் அதிரடி சதத்தின் (141) துணை கொண்டு 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்தியாவுக்கு 271 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சுழலுக்கு சாதகமான களத்தில் இலக்கை விரட்டிய இந்தியா, ஒருகட்டத்தில் 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

கேப்டன் சச்சின்– நயன் மோங்கியா இணை 136 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தது. அரைசதம் அடித்த மோங்கியா ஆட்டமிழந்தவுடன் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு சச்சின் தலையில் இறங்கியது.

ஒருபக்கம் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் சச்சின் முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் பைரன்னர் வைத்துக் கொண்டு நீண்ட இன்னிங்ஸ் ஆடினார். அதிரடியாக வெற்றி இலக்கை துரத்திய சச்சின், கடைசியில் சக்லைன் முஷ்டாக் பந்தில் 136 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தோற்றபோதும் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள். பெங்களூரு டெஸ்ட்: இந்தியா vs பாகிஸ்தான் (1987)

1987 பெங்களூU டெஸ்ட் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. லிட்டில் மாஸ்டர் கவாஸ்கரின் கடைசி டெஸ்ட் இது என்பது கூடுதல் சிறப்பு. பரபரப்பான இந்த டெஸ்டில் இந்திய அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது.

சுழற்பந்து வீச்சின் சொர்க்கபுரியாக அன்று கருதப்பட்ட சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய இடக்கை சுழலர் மணிந்தர் சிங்கின் சுழலை சமாளிக்க முடியாமல், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது முதல் இன்னிங்சின் ஒரு கட்டத்தில் 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்தியா, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்சில் சலீம் மாலிக், இம்ரான் கான் உள்ளிட்ட நடுவரிசை வீரர்கள் கைகொடுக்கவே, பாகிஸ்தான், இந்தியாவுக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் கவாஸ்கர் ஒருபுறம் தனி ஒருவனாய் போராடினார். தனது கடைசி டெஸ்டில் விளையாடிய அவர், 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து போது வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்ற ரோஜர் பின்னி, 15 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, இந்தியா பரிதாபமாக 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. பாகிஸ்தான் அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. மறக்க முடியாத ஆட்டம்!

மும்பை டெஸ்ட்: இந்தியா vs நியூசிலாந்து (2024)

2024 நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம், அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. தென்னாபிரிக்காவுக்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைட் வாஷ் (White wash) செய்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்தது.

முதல் இரு டெஸ்ட்களில் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்த ரோஹித் சர்மா தலைமையான இந்தியா, மும்பை டெஸ்டில் ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜடேஜா, சுந்தர் இருவரும் சுழற்பந்து வீச்சில் அசத்திய போதும், மிட்ச்செலின் அரைசதத்தின் உதவியுடன் 235 ரன்களை பதிவுசெய்தது.

சுழலுக்கு சாதகமான மைதானத்தில் கில், பந்த் ஆகியோர் அரைசதம் விளாச, இந்தியா தனது முதல் இன்னிங்சில் 263 ரன்களை எடுத்தது.

இந்திய சுழலர்கள் மீண்டும் சிறப்பாக பங்களிக்க இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து 174 ரன்களில் நடையைக் கட்டியது. 147 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அஜாஸ் படேலின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் 121 ரன்களுக்கு சுருண்டு 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பர்– பேட்டர் பந்த் மட்டும் அதிரடியாக அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இந்திய ரசிகர்கள் மறக்கவிரும்பும் டெஸ்ட்களில் இதுவும் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா – நியூசிலாந்து ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா அவுட்டான காட்சி பிரிஸ்பன் டெஸ்ட்: இந்தியா vs ஆஸ்திரேலியா (1977)

1977 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பிஷன் சிங் பேடி தலைமையான இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்டை வென்று சாதனை படைத்தது. பிரிஸ்பன், பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, மெல்பர்ன், சிட்னி டெஸ்ட்களில் அடுத்தடுத்து வெற்றிபெற்று ஆச்சரியப்படுத்தியது.

பிரிஸ்பன் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. சம்பள பிரச்னை காரணமாக முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலகியதால், பலவீனமான அணியுடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்சில் பிஷன் சிங் பேடியின் மாயாஜால சுழலை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியா 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக வெங்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத் 40 ரன்களை கடந்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரண்டாவது இன்னிங்சில் சுதாகரித்த ஆஸ்திரேலியா, கேப்டன் பாப் சிம்சனின் அபார ஆட்டத்தால் 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. எளிதில் சரணடையும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, கவாஸ்கரின் சதத்துடன் கடுமையான போட்டியை கொடுத்தது.

ஜெஃப் தாம்சன், வெயின் கிளார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் கீழ் வரிசை பேட்டர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டியதால், 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. இந்த டெஸ்ட் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு