சாட்ஜிபிடி ஒவ்வொரு பதிலுக்கும் இவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறதா?

பட மூலாதாரம், @Google

படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள கூகுள் போன்ற பல நிறுவனங்களின் தரவு மையங்கள், குளிரூட்டும் அமைப்புகளில் இருந்து தண்ணீரை ஆவியாக்குகின்றன.எழுதியவர், சாரா இப்ராஹிம்பதவி, பிபிசி உலக சேவை41 நிமிடங்களுக்கு முன்னர்

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது.

உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா?

ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது?

சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.

கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது.

10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது.

ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை.

இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ.

2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது.

“நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்,” என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார்.

ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன.

இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன.

கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன.

இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது.

ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.

சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம்.

அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது.

ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன.பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.

ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும்.

2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் “நுகரப்பட்டது”, அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது.

இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது.

இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம்.

வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்?

சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது.

ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, ‘யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்’ என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது.

சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு “ஆர்வம் அதிகரித்து வருவதாக” அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார்.

நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார்.

ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன.

அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, “அதிக” தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% “நடுத்தர” பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது.

மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், “தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து” எடுக்கப்படுகிறது.

மெட்டாவின் 26% தண்ணீர் “அதிக” அல்லது “மிக அதிக தண்ணீர் அழுத்தம்” உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது.

அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா?

உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார்.

மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது.

எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை “இன்னும் ஆரம்ப கட்டத்தில்” தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன.

தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ?

ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது.

ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் “அளப்பரிய மாற்றத்தை” ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார்.

பட மூலாதாரம், Meta

படக்குறிப்பு, சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன.ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் “மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக”, “திறமையான மற்றும் வெளிப்படையான” முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார்.

பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு “எந்த வழியும் இல்லை” என்று கூறுகிறார்.

“நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்.”

“நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன.

இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் “வாட்டர் பாசிட்டிவ்” (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர்.

ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை “நோக்கி முன்னேறி வருவதாகக்” கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் “நீண்ட தூரம் செல்லவேண்டும் ” எனக் கூறுகிறார்.

நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த “கடினமாக உழைப்பதாக” ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், “கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்” என்று வலியுறுத்துகிறது.

ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. “நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது.”என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் .

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு