வெள்ளை நிற சளி உணர்த்துவது என்ன? நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டும் சளி திரவம்

பட மூலாதாரம், Emmanuel Lafont

படக்குறிப்பு, மூக்கில் சுரக்கும் திரவம் வெளியில் இருந்து வரும் நுண்ணுயிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. எழுதியவர், சோஃபியா குவாக்லியாபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நம் மூக்கில் சுரக்கும் திரவம் (சளி) நம்மை நோயில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சளியின் நிறம், உடலில் என்ன நிகழ்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கான தகவல்களைக் கூட வழங்க முடியும்.

பண்டைய கிரேக்கத்தில் மனித ஆரோக்கியம் மற்றும் ஆளுமையை சமநிலைப்படுத்துவதற்கு பொறுப்பான உடலின் நான்கு முக்கிய திரவங்களுள் ஒன்றாக சளி நம்பப்பட்டது. மருத்துவ அறிஞர் ஹிப்போகிரேட்டஸ்ஸ், ஒருவரின் சளி (phlegm), ரத்தம், மஞ்சள் பித்தம், கரும்பித்தம் ஆகிய நான்கு திரவங்களின் சமநிலை, அவரது சுபாவத்தை குறிப்பதாக ஒரு கோட்பாட்டை உருவாக்கினார்; இதில் ஏதேனும் ஒன்று அதிகமாக இருந்தாலும் உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, மூளை மற்றும் நுரையீரலிலிருந்து சளி உருவாவதாக கருதப்பட்டது, குளிர் காலங்களில் அதிகம் உருவாகும் சளி, வலிப்பை கூட ஏற்படுத்தலாம். சளி திரவம் அதிகமாக சுரப்பவர்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத, குழப்பமான மனநிலையை கொண்ட, கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால், சளி ஒருவரின் ஆளுமையை பாதிக்காது அல்லது நோய்களை உருவாக்காது என நமக்கு இப்போது தெரியும், மாறாக நோய்களில் இருந்து சளி நம்மை பாதுகாக்கவே செய்கிறது.

நம் உடலின் அதிசயங்களில் ஒன்று சளி

சளி ஏற்படுவதோ அல்லது தும்மல் வாயிலாக சளியை அறை முழுவதும் பரப்புவதோ யாருக்கும் பிடிக்காது என்றாலும், நமது நாசி பாதை வழியாக வரும் சளி, மனித உடலின் அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. அது நம்மை நோய்க்கிருமிகளில் இருந்து காக்கிறது, அதன் தனித்துவமான கலவை நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை உணர்த்தும் தகவல்களையும் வழங்கலாம். தற்போது விஞ்ஞானிகள் கோவிட்-19 முதல் நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள் வரை எல்லாவற்றையும் சளியின் மூலம் கண்டறியவும் அதற்கு சிகிச்சை வழங்கவும் முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Emmanuel Lafont

படக்குறிப்பு, மூக்கில் வடியும் திரவத்தை பயன்படுத்தி நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.வயது வந்த பெரியவரின் உடல் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 மில்லிலிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது, ஆனால், பெரியவர்களை விட குழந்தைகளுக்கு சளி திரவம் அதிகமாக சுரக்கிறது.. ஏனெனில் குழந்தைகளின் உடல் முதன்முறையாக வெளிப்புற உலகின் மூலக்கூறுகளுக்கு வெளிப்பட்டு, அதை எதிர்கொள்ள அவர்களது உடல்கள் தயாராகி வருகின்றன என கூறுகிறார், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சுவாச தொற்று மற்றும் தடுப்பூசி இயலின் பேராசிரியர் டேனியலா ஃபெரெய்ரா.

சளியின் நிறம் உணர்த்துவது என்ன?

சளியை வெறுமனே நோக்கினாலே அதன் நிறமும் தன்மையும் உடலில் என்ன நடக்கிறது என்பதை சொல்லிவிட முடியும்: சளி ஒரு தெர்மோமீட்டர் (visual thermometer) போன்று செயல்படுகிறது. தெளிவாக இருக்கக்கூடிய சளி, நாசி பாதையை எரிச்சலூட்டக்கூடிய மகரந்தத் தூள் அல்லது தூசியை வெளியேற்றுவதற்காக ஏற்பட்டிருக்கலாம்.

உங்கள் சளி இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ இருந்தால், ஒருவேளை உங்கள் மூக்கின் உட்புறத்தை நீங்கள் எரிச்சலூட்டியிருக்கலாம்.

ஆனால், சளியை மட்டும் பார்த்து சொல்வது முதல் வழிதான்.

சளியில் உள்ள நுண்ணுயிரிகள்

ஒவ்வொருவருடைய சளியிலும் தனித்துவமான நுண்ணுயிரிகள் உள்ளன. அவை ஒருவருடைய பாலினம், வயது, வாழும் இடம், உணவுப் பழக்கம் மற்றும் நீங்கள் வேப் (vape) செய்கிறீர்களா என்பதைப் பொறுத்துக்கூட மாறும். இந்த நுண்ணுயிரிகள் தான், நோய்க்கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது, அவற்றில் சில நுட்பமானதாக நிகழ்கின்றன. உதாரணமாக, காய்ச்சல் மற்றும் சீழ் நிறைந்த கொப்புளங்களை ஏற்படுத்தவல்ல சாத்தியமான ஆபத்து கொண்ட ஸ்டஃபைலோகோகஸ் பாக்டீரியா நமது மூக்கில் தப்பிப் பிழைத்து, உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துவது என்பது, சளியில் உள்ள நுண்ணுயிர் பாக்டீரியா அவற்றை எப்படி தாங்குகிறது என்பதை சார்ந்ததே என, 2024ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் டேனியலா ஃபெரெய்ரா ஓர் ஆரோக்கியமான சளி நுண்ணுயிரிகள் எப்படி இருக்கும் என்பதை கண்டறிவது குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதன்மூலம், நாசி பாதையில் பயன்படுத்தப்படும் தினசரி ஸ்பிரேயில் அவற்றை பயன்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அதாவது, குடல் நலத்துக்கு எப்படி ப்ரோபயோடிக்குகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அதேபோன்று நாசி நலத்துக்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

“நமது மூக்கில் உள்ள நுண்ணுயிரிகளை மாற்றி, சிறந்த நுண்ணுயிரிகளை பயன்படுத்தி, அவற்றை அங்கேயே இருக்குமாறு செய்ய முடிந்தால், எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். அப்படி செய்யும்போது தீய நுண்ணுயிரிகள் உள்ளே நுழைந்து உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்த முடியாது,” என்கிறார் ஃபெரெய்ரா.

அத்தகைய நல்ல நுண்ணியிரிகளை ஃபெரெய்ராவின் சகாக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய பாக்டீரியாக்கள் மனிதர்களின் நாசிக்குள் நுழைந்து, அங்கேயே நீடித்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Emmanuel Lafont

படக்குறிப்பு, நம் உடலுக்குள் நடக்கும் மாற்றங்களை பார்த்தே அறிந்து கொள்ளும் வகையில், ஒரு தெர்மாமீட்டர் போல் செயல்படுகிறது நம்முடைய மூக்கில் இருந்து வெளியேறும் திரவம் சளியில் உள்ள நுண்ணுயிரிகள் நோயெதிர்ப்பு அமைப்புடன் நெருக்கமாக தொடர்புடையதால், இந்த ஆய்வின் மூலம் எப்படி நோயெதிர்ப்பு அமைப்பையும் மேம்படுத்த முடியும் என்பதையும் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளும் திறன் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக ஃபெரெய்ரா கூறுகிறார். ஒருவரின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வகைகளை சார்ந்து அவரின் உடல் தடுப்பூசிகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பது மாறுவதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. கோவிட் 19 தடுப்பூசி மீது செய்யப்பட்ட ஆய்வுகள், அது சளியின் நுண்ணுயிரிகள் மீது பாதிப்பை ஏற்படுத்துவதாக பரிந்துரைக்கின்றது, அதாவது தடுப்பூசி எவ்வளவு திறன் வாய்ந்ததாக உள்ளது என்பதில் நுண்ணுயிரிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“உடல்நலம் பாதிக்கப்படாமல் காப்பதில் கோவிட்-19 தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றின, ஆனால் நாம் தொடர்ந்து அந்த வைரஸை பரப்பி வந்தோம்,” என்கிறார் ஃபெரெய்ரா.

“நம்மால் இன்னும் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்க முடியும், அதனால் அடுத்த தலைமுறையினருக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படாது. அது, கோவிட்-19 அல்லது காய்ச்சல் அல்லது வேறு எந்தவித மூச்சுசம்பந்தமான வைரஸ் தொற்றாக இருந்தாலும் சரி.”

பரிசோதனைகளை அதிகப்படுத்துதல்

மிக துல்லியமான சளி நுண்ணுயிரிகளை கண்டுபிடிப்பதற்கான சூத்திரத்தைக் கண்டுபிடிக்கும் ஃபெரெய்ராவின் பணி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். அதற்கிடையே, சுவீடனில் உள்ள விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பு, தூசியால் ஏற்படும் சளிக்காய்ச்சல், ரைனோசைனசிடிஸின் தினசரி அறிகுறிகளை கொண்டவர்களுக்கு ஆரோக்கியமாக உள்ளவர்களின் சளியை உட்புகுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்காக வயதுவந்த 22 பேர், தங்களுடைய ஆரோக்கியமான நண்பர்கள் அல்லது இணையரின் சளியை ஊசி (syringe) மூலமாக ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து செலுத்துமாறு செய்துள்ளனர். அதன் விளைவாக, குறைந்தது 16 நோயாளிகளுக்கு இருமல், முக வலி போன்ற பிரச்னைகள் மூன்று மாதங்களுக்கு சுமார் 40% குறைந்ததாக கண்டறிந்துள்ளனர்.

“அது எங்களுக்கு சிறந்த தகவலாக இருந்தது, யாருக்கும் இதில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை,” என சுவீடனின் ஹெல்சிங்போர்க் மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை மருத்துவத்தின் மூத்த ஆலோசகரும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சையாளருமான ஆன்டெர்ஸ் மார்டென்சன் கூறுகிறார். அவர் இந்த ஆய்வின் ஆய்வாசிரியரும் ஆவார். ஒருவருடைய மலத்தை உடல்நல பிரச்னைகள் கொண்ட ஒருவருக்கு உட்செலுத்தி, குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்துவது குறித்து மற்ற ஆய்வுகளின் வாயிலாக இந்த ஆய்வு ஈர்க்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

சிறியளவில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், ஒருவருடைய சளியில் உள்ள நுண்ணுயிரிகள் எவ்வாறு மாறின, அவர்களின் மூக்கில் ஏற்கெனவே உள்ள குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் என்னவாகின, அவை குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்பது போன்ற மேலதிக தகவல்களை வழங்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக பெரிய மற்றும் துல்லியமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம், Emmanuel Lafont

படக்குறிப்பு, புகைப்பிடித்தல் காரணமாக சுவாச உணர்வை இழந்த நபர்களுக்கு உதவும் வகையில் விட்டமின் டி ஸ்ப்ரேயை கண்டறிந்துள்ளனர் முல்லிகனின் குழுவினர் உண்மையில், நாள்பட்ட பிரச்னைகள் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு சளி ஒரு மிகப்பெரிய தடையாகக் கூட இருக்கலாம்.

ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் காது மூக்கு தொண்டை நிபுணராக உள்ள ஜெனிஃபர் முல்லிகன், நாள்பட்ட ரைனோசினுசிடிஸ் (புரையழற்சி – சைனஸ்) மற்றும் உலகளவில் 5 முதல் 12% பேரை பாதித்துள்ள நாசி கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி (nasal polyps) குறித்து ஆய்வு செய்ய சளியை பயன்படுத்துகிறார். தன் பணியின் ஆரம்ப ஆண்டுகளில் ரைனோசினுசிடிஸ் உள்ள நோயாளிகளின் மூக்கின் திசுவை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அது ஆபத்தான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது ரைனோசினுசிடிஸ் உள்ளவர்களின் உடலில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் நெருக்கமாக ஆய்வு செய்ய ஒருவருடைய சளியே போதுமானது என்பதை அவரது ஆய்வு நிரூபித்துள்ளது. “இந்த பிரச்னையை ஏற்படுத்தும் காரணிகளை நாங்கள் சளியை பயன்படுத்தி கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என கூறும் முல்லிகன், இந்த பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

அதேபோன்று, முன்பு இதற்கான சிகிச்சையும் பெரும்பாலும் சோதனைகள் மற்றும் தவறுகளின் அடிப்படையிலும் ஒவ்வொரு நோயாளிக்கும் வித்தியாசமானதாகவும் இருக்கும். சில சமயங்களில் பல மாதங்கள் நீடிக்கும் இந்த சிகிச்சைகளுக்கு செலவானது. ஒருவருடைய சளியை ஆய்வு செய்வதன் மூலம் என்ன சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதை விரைவாக அடையாளம் காணலாம் என்கிறார் முல்லிகன்.

முல்லிகனுடைய இந்த நுட்பம் குறித்து, மனிதர்களிடத்தில் உலகம் முழுவதிலும் சில ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொறியாளர்களால் தொடங்கப்பட்ட டியாக்-நோஸ் (Diag-Nose) போன்ற வளர்ந்துவரும் சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்கள், சளியை ஆய்வு செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகளை உருவாக்கி வருகின்றன, நாசியிலிருந்து சிறியளவில் சேகரிக்கப்படும் மாதிரிகளுக்கான (microsampling device) சாதனங்களுக்கு காப்புரிமையை பெற்றுவருகின்றன: 2025ம் ஆண்டில் அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி பெற்ற, இத்தகைய முதல் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனங்கள், மாதிரி முறைகளை தரப்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சி மாறுபாட்டைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.

வாசனையை மீட்டெடுக்கும் முயற்சி

“மூக்கின் திசுக்களை ஆராய்வதன் மூலம் மட்டும் நாங்கள் கற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களை இதன்மூலம் கற்றுள்ளோம். நோய்கள் குறித்து நாங்கள் அறிந்தவற்றை இது முழுமையாக மாற்றியுள்ளது. வருங்காலத்தில் நோயாளிகள் எவ்வாறு பரிசோதிக்கப்படுவர் மற்றும் எப்படி அவர்களுக்கு சிகிச்சை தரப்படும் என்பதிலும் இது மாற்றத்தைக் கொண்டு வரும்,” என்கிறார் முல்லிகன்.

ஒருவர் வாசனையை நுகரும் திறனை ஏன் இழக்கிறார் என்பது குறித்து ஆராயவும் இதே முறையை பயன்படுத்துகின்றார் முல்லிகன். புகைப்பிடித்தலால் ஏற்பட்ட அழற்சி காரணமாக, வாசனையை நுகரும் திறனை இழந்தவர்களுக்கு விட்டமின்-டி ஸ்பிரே அதை மீட்டெடுக்க உதவலாம் என்பதை அவருடைய குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

நுரையீரலில் என்ன நடக்கிறதோ அது மூக்கிலும் நடைபெறுகிறது என்றும், அது தலைகீழாகவும் நடக்கும் என்றும் முல்லிகன் கூறுகிறார். எனவே, இந்த பரிசோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைகள் நுரையீரல் நோய்களுக்கும் பயன்படுத்த முடியும். நோயாளி ஒருவரின் சளியில் IL-26 எனும் புரதம் எந்தளவில் இருக்கிறது என்பதை ஆராய்வதன் மூலம், அவர் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு (chronic obstructive pulmonary disease) எவ்வளவு எளிதில் ஆட்படுவார் என்பதை மருத்துவர்கள் கூற முடியும் என்பதை புதிய ஆராய்ச்சி ஒன்று பரிந்துரைக்கிறது. இந்நோய் புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் அதிகம் ஏற்படும் ஒன்றாக உள்ளது, மேலும் உலகளவில் அதிகளவில் இறப்புகளை ஏற்படுத்தும் நான்காவது காரணியாக உள்ளது. நோயாளியின் சளியை ஆராய்வதன் மூலம், இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து வேகமாக சிகிச்சையளிக்க முடியும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”ஒருவருடைய தனிப்பட்ட மருத்துவ முறையாக எதிர்காலத்தில் சளி உருவெடுத்து வருவதாக நான் முழுமையாக நம்புகிறேன்,” என கூறுகிறார் முல்லிகன்.

முக்கிய குறிப்பு

இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே, மருத்துவர் அல்லது மற்ற எந்தவித சுகாதார பணியாளரால் வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாக இதனை கருதக்கூடாது. இந்த கட்டுரையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு பயனரும் மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கும் பிபிசி பொறுப்பாகாது. இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள எந்த வெளிப்புற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் பிபிசி பொறுப்பாகாது, அவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது ஆலோசனைகளை பிபிசி ஆதரிக்கவில்லை. உங்களின் உடல்நலன் குறித்து கவலைகள் எழுந்தால் எப்போதும் மருத்துவரை அணுகுங்கள்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு