மண்டைதீவு புதைகுழி வழக்கு – விசாரணை அறிக்கையை கையால் எழுதி மன்றில் சமர்ப்பித்த பொலிஸார்

by ilankai

மண்டைதீவு புதைகுழி தொடர்பிலான விசாரணை அறிக்கையை கையெழுத்து பிரதியாக வழங்காது , தட்டச்சு பிரதியாக வழங்குமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள்  மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து சான்று ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு , நீதவான் உத்தரவிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, பொலிஸாரினால் , அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் பொலிஸார் சமர்ப்பித்தனர். அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக நாளைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். 

Related Posts