நெப்போலியனின் தோல்வியைக் கொண்டாட தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் அமைத்த மன்னர் – எதற்காக தெரியுமா?

எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர்

பிரான்ஸின் மன்னரான நெப்போலியன் பிரிட்டிஷ்காரர்களால் தோற்கடிக்கப்பட்டதற்காக தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஒரு நினைவுக் கோட்டை கட்டப்பட்டது. நெப்போலியனின் தோல்வியை இந்த அளவுக்குக் கொண்டாடியது யார்? அந்த சுவாரஸ்யமான வரலாற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் அவை. பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் போனபார்ட் ஆட்சிசெய்த அந்தத் தருணத்தில், பிரான்ஸிற்கும் ஐரோப்பாவின் மற்ற சில நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர்கள் நடந்துவந்தன. 1803 முதல் 1815 வரை இந்தப் போர்கள் நடந்தன.

முடிவில் வாட்டர்லூ யுத்தத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு செயின்ட் ஹெலனா தீவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த இறுதித் தோல்விக்கு முன்பாகவே ஒரு பின்னடைவைச் சந்தித்தார் நெப்போலியன். War of the Sixth Coalition என்ற பெயரில் நடந்த மோதலில் 1814ல் தோற்கடிக்கப்பட்டார் நெப்போலியன் போனபார்ட். First Treaty of Paris கையெழுத்திடப்பட்டு, நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

நெப்போலிய யுத்தத்தில் இது ஒரு மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்பட்டது. இந்த வெற்றியில் பிரிட்டனுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நினைவுக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது?

படக்குறிப்பு, இரண்டாம் சரபோஜி, நெப்போலியனுக்கு எதிரான பிரிட்டனின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்ப முடிவுசெய்தார்.இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டுப் பகுதிகளில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் செல்வாக்கு உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் தஞ்சாவூர் இரண்டாம் சரபோஜி மன்னரின் கீழ் இருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இரண்டாம் சரபோஜி, நெப்போலியனுக்கு எதிரான பிரிட்டனின் இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒரு மிகப் பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்ப முடிவுசெய்தார்.

இதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த சரபேந்திரராஜபட்டினம் என்ற ஊரில் இந்த நினைவுச் சின்னத்தை அமைக்க அவர் முடிவுசெய்தார். அதன்படி மனோரா என்ற கோட்டைச் சுவருடன் கூடிய நினைவுக் கோபுரம் கட்டப்பட்டது.

இந்த நினைவுக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது என்பதை, கோட்டைச் சுவர்களிலேயே ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி ஆகிய ஐந்து மொழிகளில் கல்வெட்டுகளாகப் பொறித்துவைத்தார் இரண்டாம் சரபோஜி.

படக்குறிப்பு, கோட்டையில் உள்ள தமிழ் கல்வெட்டு.தமிழ் கல்வெட்டில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன: “இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அமைந்த சுய சந்தோஷங்களையும் போனபற்தேயின் (நெப்போலியன் போனபார்ட்) தாழ்த்தப்படுதலையும் நினைவுகூறத்தக்கதாக இங்கிலீசு துரைத்தனத்தின் சினேகிதரும் படைத்தலைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராசாச் சத்திரபதி சரபோசி மகாராசா அவர்கள் இந்த உப்பரிகையைக் கட்டிவைத்தார். சகம் 1736.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கல்வெட்டு ஆங்கிலத்தில், “His Highness Maharajah Sirforjee Rajah of Tanjore The Friend and Ally of the British Government to Commemorate the Triumps Erected this Column of British Arms and the Downfall of Bonaparte 1814” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு தமிழில் ‘உப்பரிகை’ என்றும் ஆங்கிலத்தில் ‘Column’ என்றும் தெலுங்கில் ‘துவஜ சௌதம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மராத்தி மொழியில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு முழுமையாகச் சிதைந்துவிட்டது.

மனோரா கோபுரத்தின் வடிவமைப்பு

படக்குறிப்பு, அறுகோண வடிவத்தில் 9 மாடிகளைக் கொண்டதாக இந்தக் கோபுரம் அமைந்திருக்கிறது.இந்த மனோரா கோபுரம் 22.3 மீட்டர் உயரமுடையது. அறுகோண வடிவத்தில் 9 மாடிகளைக் கொண்டதாக இந்தக் கோபுரம் அமைந்திருக்கிறது. இந்தக் கோபுரத்தைச் சுற்றிப் பெரிய அகழி ஒன்றும் அதனைச் சுற்றி மதில் சுவரும் காணப்படுகிறது. இந்த அகழியைக் கடக்க ஏற்றி இறக்கக்கூடிய ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது ஒரு நிரந்தரப் பாலம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது.

கோபுரத்தின் ஒன்பது மாடிகளுக்கும் செல்வதற்கு குறுகிய படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று கடலையும் கடற்கரையையும் ரசிக்க முடியும். இரண்டாம் சரபோஜி மன்னர் தன் குடும்பத்தினருடன் இந்தக் கோபுரத்தில் ஏறி, ரசித்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

தற்போது கோபுரத்தின் உச்சி வரை ஏறுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், கோட்டைச் சுவரின் மீது ஏறிப் பார்த்தால் கிடைக்கும் காட்சிகளே ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன.

இந்த மனோராவைப் பார்க்கும் போது ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது வெகுதூரத்தில் எங்கோ இருக்கும் ஐரோப்பாவில் நடந்த ஒரு யுத்தத்திற்காக இங்கே பட்டுக்கோட்டைக்கு அருகில் ஒரு நினைவுக் கோட்டையை சரபோஜி மன்னர் ஏன் கட்டினார் என்பதுதான் அந்தக் கேள்வி. பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் இருந்த அரசுகளின் நிலையைப் புரிந்துகொண்டால் இந்தக் கேள்விக்கான பதிலை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

தஞ்சாவூரில் நடைபெற்ற போர்கள்

படக்குறிப்பு, கோபுரத்தைச் சுற்றிப் பெரிய அகழி ஒன்றும் அதனைச் சுற்றி மதில் சுவரும் காணப்படுகிறது.தஞ்சாவூரின் ராஜ்ஜியத்தின் கடைசி நாயக்க மன்னராக இருந்தவர் விசயராகவ நாயக்கர். சிவாஜியின் சகோதரரான எகோஜி, இவரை வீழ்த்தி தஞ்சாவூரைக் கைப்பற்றினார். இது 1675ல் நடந்தது. இதற்குப் பிறகு எகோஜி வழிவந்தவர்களே தஞ்சையை ஆட்சி செய்தனர்.

அவருக்குப் பிறகு அவரது மகன் சாஹஜியும் அதற்குப் பிறகு அவரது தம்பி முதலாம் சரபோஜியும் அதற்குப் பிறகு அவரது தம்பி துக்காஜி எனும் துளஜாஜியும் மன்னரானார்கள். துக்காஜியின் ஆட்சிக் காலத்திலேயே ஆற்காடு நவாபின் ஆதிக்கத்தின் கீழ் தஞ்சை வந்துவிட்டது.

துக்காஜிக்குப் பிறகு அவரது மூத்த மகன் பாவா சாஹிப், அவருக்குப் பிறகு இவரது முதல் மனைவி சுஜான் பாயி ஆகியோர் ஆட்சி செய்தனர். இதற்குப் பிறகு, துக்காஜியின் மற்றொரு மகனான பிரதாப சிம்மன் ஆட்சிக்கு வந்தார்.

இவரது ஆட்சிக் காலம்தான் தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்திலேயே போர்கள் நிரம்பிய காலமாக இருந்தது என தன்னுடைய தஞ்சாவூர் நூலில் குறிப்பிடுகிறார் தஞ்சை வரலாற்றாய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்த பிரதாப சிம்மன் 1763ல் இறந்தார்.

இதற்குப் பிறகு, பிரதாப சிம்மனின் மகனான இரண்டாம் துளஜா தஞ்சையின் மன்னரானார். ஆனால், இவரது ஆட்சியிலும் சோதனைகள் தொடர்ந்தன. நவாப் முகமதலி இவரைத் தாக்கி, தஞ்சை அரண்மனையிலேயே மூன்று ஆண்டுகள் சிறைவைத்தார்.

படக்குறிப்பு, இந்த மனோரா கோபுரம் 22.3 மீட்டர் உயரமுடையது.இதற்குப் பிறகு, 1776ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி நிர்வாகம் தலையிட்டு மீண்டும் துளஜாவை அரியணையில் அமர்த்தியது. இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தஞ்சை மீது படையெடுத்து வந்தனர். இதனால், ஆங்கிலேயப் படைகளை தஞ்சாவூரில் நிறுத்த வேண்டியதாயிற்று. இதனால், துளஜா பெயருக்கு அரசராக இருக்க வேண்டியதாயிற்று. இந்த நிலையில், 1787ல் அவர் காலமானார்.

இந்த துளஜாவுக்கு மகன்கள் இல்லை என்பதால் அவர் இரண்டாம் சரபோஜியை தத்தெடுத்து வளர்த்துவந்தார். ஆனால், துளஜா இறந்த காலகட்டத்தில், இரண்டாம் சரபோஜி சிறுவனாக இருந்ததால், பிரதாப சிம்மரின் மற்றொரு மகனான அமர்சிங் ஆட்சியைக் கவனித்துவந்தார். ஒரு கட்டத்தில் தானே அரசராக வேண்டுமென விரும்பிய அமர் சிங், அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் கார்ன்வாலிஸிற்கு கடிதம் எழுதினார்.

இதனால், கார்ன்வாலிஸ் உத்தரவின்பேரில் அப்போது சென்னையின் ஆளுநராக இருந்த சர் அர்சிபால்ட் காம்பெல் தஞ்சைக்கு வந்து 12 பண்டிதர்களின் கருத்தைக் கேட்டார். அவர்கள் அவர்கள் சரபோஜியின் சுவீகாரம் செல்லாது எனக் கூறினர். இதனால், அமர் சிங் அரசரானார்.

சரபோஜிக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் இடையேயான உறவு

படக்குறிப்பு, இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று கடலையும் கடற்கரையையும் ரசிக்க முடியும்.அந்த சமயத்தில் தரங்கம்பாடியில் இருந்த ஜெர்மானியப் பாதிரியாரான ஸ்வார்ட்ஸ் (Frederick Schwartz) இரண்டாம் சரபோஜி மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தார். இதனால், அவர் சரபோஜிக்கு ஆதரவாகவும் அமர்சிங்கிற்கு எதிராகவும் கிழக்கிந்தியக் கம்பனியிடம் பேச ஆரம்பித்தார்.

அதே சமயத்தில், தஞ்சை ராஜ்ஜியத்தை பகுதி பகுதியாக கிழக்கிந்தியக் கம்பனி அபகரிப்பதாகக் கருதிய அமர்சிங்கும் கம்பனிக்கு விரோதமான மனநிலையில் இருந்தார். இதையடுத்து, 1796 மார்ச்சில் கம்பனியார் மீண்டும் சரபோஜியின் வாரிசுரிமை குறித்து அதே பண்டிதர்களிடம் விசாரித்தனர். முதலில் வாரிசுரிமை செல்லாது எனக் கூறிய பண்டிதர்கள் இந்த முறை செல்லும் எனக் கூறினார்கள். இதனால், 1798ல் தஞ்சாவூரின் மன்னராக சரபோஜி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இரண்டாம் சரபோஜி 1798ல் அரசரானதும் கம்பெனியாருடன் ஓர் ஓப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை நகரம் மட்டுமே இவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மீதமிருந்த சோழ நாடு முழுவதும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியில் கீழ் வந்தது. இதற்காக சரபோஜிக்கு ஒரு லட்சம் வராகனும் மொத்த வரி வசூலில் (அமர் சிங்கிற்கு அளிக்கும் தொகை போக மீதமுள்ள தொகையில்) ஐந்தில் ஒரு பாகமும் வழங்கப்பட்டது.

ஆனால், இவர் காலத்திலேயே தஞ்சையின் நிர்வாகத்தைக் கவனிக்க பிரிட்டிஷ் ரெஸிடெண்டுகள் வந்துவிட்டதால் இரண்டாம் சரபோஜி பெயரளவுக்கான மன்னராகவே இருந்தார் என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆங்கிலேயரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இதுபோன்ற ஒரு கோபுரத்தை அவர் கட்டியதில் வியப்பேதும் இல்லை.

சரபோஜி மன்னரைப் பொறுத்தவரை, பெயரளவுக்கான மன்னர்தான் என்பதால் பெரிதாக ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால், வழிப்போக்கர்களுக்காக நிறையச் சத்திரங்களை அவர் கட்டினார். தஞ்சையில் உள்ள சரபோஜி நூலகம் நாயக்கர் ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டாலும், மேலும் நான்காயிரம் நூல்களுடன் பெரிதாக்கப்பட்டது.

அதேபோல, அடிக்கடி தரங்கம்பாடி சென்று அங்கு டேனியர்கள் நடத்திய பள்ளிகளைப் பார்த்தவர், தஞ்சை ராஜ்ஜியத்திலும் அதேபோல பள்ளிகளை நடத்த முயன்றார். தஞ்சை பெரிய கோவிலின் தென்மேற்குச் சுவர்களில் போன்ஸ்லே வம்சத்தின் வரலாற்றைப் பொறிக்கவும் செய்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு