ஆமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கை கூறும் ‘எரிபொருள் சுவிட்ச்’ என்பது என்ன? அதில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆமதாபாத் விமான விபத்து குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டவுடன் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட்-ஆஃப் நிலைக்குச் சென்றன.

விமானிகள் அறை (காக்பிட்) குரல் பதிவில், ஒரு விமானி மற்ற விமானியிடம், “நீங்கள் ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள்?” என்று கேட்கிறார், அதாவது, “ஏன் (எரிபொருள் சுவிட்சை) அணைத்தீர்கள்?” என்று அவர் கேட்டுள்ளார்.

இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்ச்களும் சிறிது தாமதத்திற்குப் பிறகே ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

“விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை எட்டியது. அதன் பிறகு உடனடியாக இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகளும் ‘ரன்’ நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு நகர்ந்தன. இரண்டு என்ஜின்களின் கட்-ஆஃப் நேரத்திற்கு இடையிலான நேரம் ஒரு விநாடி.”

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், N1 மற்றும் N2 என்ஜின்கள் மெதுவாக அவற்றின் டேக்-ஆஃப் நிலைக்குக் கீழே குறையத் தொடங்கின.”

“காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்ற விமானியிடம் ஏன் துண்டித்தீர்கள் என்று கேட்கிறார்? மற்ற விமானி அவர் இல்லை என்று பதிலளிக்கிறார்” என்று அறிக்கை கூறுகிறது.

எந்தக் குரல் எந்த விமானியுடையது என்பது அறிக்கையில் தெளிவாக இல்லை.

விமானம் விபத்தில் சிக்கிய அந்தப் பயணத்தில், கேப்டன் விமானத்தை மேற்பார்வையிட, துணை விமானி விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் என்ன நடந்தது என்பதை இந்த 15 பக்க அறிக்கை விளக்குகிறது.

இப்போது, எரிபொருள் சுவிட்ச் என்றால் என்ன, விமானங்களுக்கு இந்த சுவிட்ச் ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள முயல்வோம். ஏனெனில் எரிபொருள் சுவிட்ச் ‘கட் ஆஃப்’ நிலைக்கு மாற்றப்பட்டதுதான் விபத்துக்குக் காரணம் என்பதே முதன்மை முடிவு.

எரிபொருள் சுவிட்ச் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் ஓர் இயந்திரத்திற்கான எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்ச்கள் ஆகும். தரையில் இயந்திரத்தின் இயக்கத்தைத் தொடங்க அல்லது நிறுத்த அல்லது பறக்கும்போது இயந்திர செயலிழப்பு ஏற்பட்டால் இயந்திரத்தை நிறுத்த அல்லது ரீஸ்டார்ட் செய்ய விமானிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

விமான நிபுணர்களின் கூற்றுப்படி, விமானி தற்செயலாக இந்த எரிபொருள் சுவிட்சை அணைத்து எஞ்சினுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்த முடியாது. இது தவறுதலாக அணைத்துவிடும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் விமானி அதை அணைத்தால், அது உடனடி விளைவை ஏற்படுத்தும். ஏனெனில், அதை அணைப்பதன் மூலம், இயந்திரத்திற்கான எரிபொருள் சப்ளை உடனடியாக நிறுத்தப்பட்டுவிடும்.

“இந்த எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுக்கு தனி வயரிங் மற்றும் மின்சாரம் உள்ளது. இந்த சுவிட்சை கட்டுப்படுத்த ஒரு எரிபொருள் வால்வு உள்ளது,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அமெரிக்க விமானப் பாதுகாப்பு நிபுணர் ஜான் காக்ஸ் கூறியுள்ளார்.

எரிபொருள் சுவிட்ச் எங்கே?

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தைப் பொறுத்தவரை, இந்த போயிங் 787 விமானத்தில் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் உண்டு. அவை இரண்டு ஜி.இ. என்ஜின்களுடன் இணைக்கப்பட்டு த்ரஸ்ட் லிவருக்கு கீழே அமைந்திருந்தன.

இந்த த்ரஸ்ட் லிவர் விமானிகள் அறையில் (Cockpit) இருக்கும். இதை விமானி மின்சார விநியோகத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்துகிறார்.

இந்த சுவிட்ச் அதன் நிலையில் இருக்கும் வகையில் ஸ்பிரிங் லோட் செய்யப்பட்டுள்ளது. அதை இயக்க அல்லது அணைக்க, விமானி முதலில் சுவிட்சை மேலே திருப்ப வேண்டும். பின்னரே அதைத் துண்டிக்க அல்லது இயக்க முடியும்.

ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் சுவிட்சுக்கு என்ன ஆனது?

இந்த விமான விபத்து குறித்த முதல் கட்ட அறிக்கை, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் ஏர் இந்தியா விமானத்திற்கு என்ன நடந்தது என்பதைக் கூறுகிறது.

“விமானம் புறப்பட்ட நேரத்தில் பிற்பகல் 1:38:42 மணியளவில் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை எட்டியது. அதன் பிறகு உடனடியாக, என்ஜின்-1 மற்றும் என்ஜின்-2 ஆகியவற்றின் எரிபொருள் சுவிட்சுகள் கட்-ஆஃப் நிலைக்குச் சென்றன. இரண்டு சுவிட்சுகளும் கட்ஆஃப் நிலைக்குச் செல்வதற்கு இடையே ஒரு நொடி வித்தியாசம் மட்டுமே இருந்தது.”

அறிக்கையின்படி, “காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்ற விமானியிடம் ஏன் துண்டித்தீர்கள் என்று கேட்கிறார்? மற்றொரு விமானி தாம் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளிக்கிறார்.”

“சுமார் பத்து நொடிகள் கழித்து, பிற்பகல் 1:38:56 மணிக்கு, என்ஜின் 1இன் எரிபொருள் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்து ‘ரன்’ நிலைக்குச் சென்றது. அடுத்த 4 நொடிகளில், என்ஜின் 2இன் எரிபொருள் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்து ‘ரன்’ நிலைக்குச் சென்றது.”

அதாவது விமானி இரண்டாவது முறையாக விமானத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சுமார் 9 நொடிகள் கழித்து, பிற்பகல் 1:39:05 மணிக்கு, ஒரு விமானி தரையில் இருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு ‘மேடே’ அழைப்பு விடுத்தார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது.

என்ஜின்கள் இயக்கத்தை நிறுத்தியபோது, ரேம் ஏர் டர்பைன் எனப்படும் ஒரு சிறிய ப்ரொபல்லர் போன்ற சாதனம் விமானத்திற்கு அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்கத் தானாகவே செயல்படுத்தப்பட்டது.

“விமான நிலையத்தில் இருந்து வந்த சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட உடனேயே மேலேறத் தொடங்கியதைக் காட்டுகிறது. ரேம் ஏர் டர்பைன் (RAT) அந்த நேரத்தில் செயல்படுத்தப்பட்டது. விமானத்தின் ஓடுபாதையைச் சுற்றி பறவைகள் நடமாட்டம் பெரிய அளவில் இருந்ததாக தகவல்கள் எதுவும் இல்லை. விமான நிலைய ஓடுபாதை எல்லையைக் கடப்பதற்கு முன்பே விமானம் தனது உயரத்தை இழக்கத் தொடங்கியது” என்று அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின்படி, எரிபொருள் மாதிரி அறிக்கையும் ‘திருப்திகரமானதாக’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு