சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை கட்டும் கல்வெட்டு

படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக21 நிமிடங்களுக்கு முன்னர்

திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன.

திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து – மூடும் அமைப்பு.

இந்தத் தூம்பின் ஒரு பகுதியில் கல்வெட்டுகள் உள்ளதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்தனர்.

இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில், அது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கக்கூடும் என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும், திருவண்ணாமலை வட்டாட்சியருமான பாலமுருகன்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தக் கல்வெட்டில் “இத்தோரணம் செய்வித்தான் அருங்குன்றக் கிழான் பொன்னம்பலக்கூத்தன்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் தூம்பு, தோரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதாவது, “மெய்யூரில் உள்ள தூம்பை அருங்குன்றக்கிழான் ஆன பொன்னம்பலக்கூத்தன் என்பவர் செய்து அளித்துள்ளார் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது” என்று விளக்கினார் திருவண்ணாமலை வட்டாட்சியர் பாலமுருகன்.

இதேபோல திருவண்ணாமலை அருகே தண்டரை பெரிய ஏரியில், அந்த ஏரியின் கரையை ஒட்டிய பகுதியில் 2 தூம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலுள்ள கல்வெட்டுகள் விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்தக் கல்வெட்டில் விக்கிரம சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் (பொது ஆண்டு 1,122) “சாங்கியம்முடையான் திருவந்தேவன் இடுவித்த தூம்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் “விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு” என்று கல்வெட்டு முடிவு பெறாமல் உள்ளது.

தூம்புகளின் தனித்துவமான கட்டுமானம்

இந்த கல்வெட்டுகளின் மூலம் சோழர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைப் பணிகளை அறிய முடிவதாகக் கூறுகிறார் பாலமுருகன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை தென்முடியனூர், தேத்துறை ஆண்டபட்டு, வலையாம்பட்டு உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் தூம்புக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் பாலமுருகன்.

அதோடு, அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளும் நீர்ப்பங்கீடு தொடர்பான தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தன என்பதற்கு இந்தக் கல்வெட்டுகள் சான்றாக அமைவதாகவும் அவர் விளக்கினார்.

படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன்தூம்பு மதகு என்பது ஏரிகளில் தேக்கி வைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அமைக்கப்பட்ட ஒரு திறன்மிக்க அமைப்பு என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

இந்த குமிழித் தூம்பு கட்டுமான அமைப்பை சோழ அரசர்கள் அதிக அளவில் செய்துள்ளதாகவும் கூறுகிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

இந்தக் கட்டமைப்பு குறித்து விளக்கிய அவர், “இந்தத் தூம்பு அமைப்பில் தேவையான அளவில் தண்ணீரை வெளியேற்ற உதவும் வகையில் கட்டுமானம் அமைந்திருக்கும். தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கல்பெட்டியின் மேலே அரையடி விட்டத்தில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் துளை நீரோடித் துளை எனக் குறிப்பிடப்படும்.

இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல்லைக் கொண்டு மூடி வைத்திருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு – மூன்று துளைகள் இருக்கும். அவற்றை சேரோடித் துளை என்பர். ஏரியின் தரைமட்டத்திற்குக் கீழே இந்தக் கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும் வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்” என்று விவரித்தார்.

சோழர்கள் போற்றிய நீர் மேலாண்மை கட்டமைப்பு

இந்தக் கட்டமைப்பில் நீர் திறந்துவிடப்படும் நுட்பம் குறித்துப் பேசிய பாலசுப்பிரமணியம், “பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவார்கள்.

அப்போது ஏரியின் நீரோடித் துளை வழியாக 80 விழுக்காடு நீரும், சேரோடித் துளை வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும். சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும் விதமாக கல் மண்டபங்களையும் அமைத்திருப்பார்கள்” என்று விளக்கினார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் கண்டராதித்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செம்பியன் மாதேவி பேரேரி அமைந்திருக்கிறது.

பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தின் பேரில் வெட்டிய ஏரி இது.

படக்குறிப்பு, கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்இதன் மதகு ஒன்றுக்கு, கண்டராதித்தன் தான் வளர்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயரைச் சூட்டியுள்ளார். மேலும், புதுக்கோட்டை அருகே உள்ள குமிழித் தூம்புக்கு ராஜராஜன் என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து சோழர்கள் இந்த அமைப்பை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார்கள் என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

“ஆங்கிலேயர் காலத்தில் பொதுப் பணித்துறை ஏரிகளைப் பராமரிக்கத் தொடங்கியது. அதிலிருந்து இந்தத் தூம்புகள் கைவிடப்பட்டன.

பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட இத்தகைய குமிழித் தூம்புகளின் தூண்களில் இருக்கும் அரச மரபினர் காலத்துக் கல்வெட்டுகளும் அரசு சின்னங்களும் தெய்வச் சிற்பங்களும் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு செய்திகளை நமக்குத் தற்போதும் உணர்த்துகின்றன,” என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு