சென்னையில் ஒன்றுகூடிய ‘தாவூதி போரா இஸ்லாமியர்கள்’ – யார் இவர்கள்?காணொளிக் குறிப்பு, தாவூதி போரா இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடமிருந்து எப்படி வேறுபட்டவர்கள்?சென்னையில் ஒன்றுகூடிய ‘தாவூதி போரா இஸ்லாமியர்கள்’ – யார் இவர்கள்?

8 ஜூலை 2025

ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான தாவூதி போரா இஸ்லாமியர்கள், முஹர்ரம் தினத்தை ஒட்டி நடத்தும் பிரம்மாண்டமான வருடாந்திர மாநாடு, இந்த ஆண்டு சென்னையில் நடந்திருக்கிறது.

உலகெங்கிலுமிருந்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் இந்த நிகழ்விற்காக சென்னையில் கூடியிருந்தார்கள். தாவூதி போரா இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடமிருந்து எப்படி வேறுபட்டவர்கள்?

வட சென்னையில் உள்ள மூர் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு உள்ளிட்ட தெருக்கள் கடந்த பத்து நாட்களாக வித்தியாசமான கோலத்தைப் பூண்டிருந்தன. ‘யா ஹுசைன்’ என எழுதப்பட்ட கொடிகள், ஆயிரக்கணக்கான போரா இஸ்லாமியர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், உணவு பரிமாறும் இடங்கள் என மிகப் பெரிய இஸ்லாமிய திருவிழாவே அங்கு நடந்திருக்கிறது.

ஷியா இஸ்லாமியர்கள் தங்கள் மரியாதைக்குரியவராகக் கருதும் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூரும் நாளான முஹரமை ஒட்டி, தாவூதி போரா இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒரு நகரில் ஒரு மிகப் பெரிய ஆன்மீக மாநாட்டை நடத்துகின்றனர். இந்த முறை இந்த மாநாடு சென்னை நகரில் நடந்திருக்கிறது.

இஸ்லாமிய மாதமான முஹர்ரம் மாதத்தின் துவக்கத்தில் இருந்து அடுத்த பத்து நாட்களுக்கு இந்த நிகழ்வு நடக்கும். ஆசிர்வதிக்கப்பட்ட பத்து நாட்கள் என்ற பொருள்படும் ‘ஆஷாரா முபாரக்கா’ என்ற இந்த நிகழ்வுக்கு உலகெங்கிலுமிருந்து தாவூதி போரா இஸ்லாமியர்கள், இந்த மாநாடு நடக்கும் இடத்தில் கூடுவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு சென்னை நகரில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி இந்த ஆன்மீக மாநாட்டை நடத்தியிருக்கின்றனர். தாவூதி போராக்களின் மதகுருவான சையெத்னா முஃபத்தல் சைஃபுதீன் இந்த பத்து நாட்களிலும் ஆன்மீக உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

சென்னையில் சுன்னி இஸ்லாமியர்களே பெரும்பான்மையினர் என்றாலும், முகமது நபியின் பேரனான இமாம் ஹுசைனை மிகுந்த போற்றுதலுக்குரியவராகக் கருதும் ஷியா இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரே தாவூதி போரா இஸ்லாமியர்கள்.

முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு