பட மூலாதாரம், @thirumaofficial

கடந்த சில தினங்களாக பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பால் புதுமையினர் (LGBTQ+) குறித்து பேசிய பழைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, குயர் சமூகத்தினர் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திருமாவளவன் ஜூலை 6 அன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை – வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த “மாணவர் பாராளுமன்றம்” என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன்.

அதில், ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப்பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது என்றும் ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எப்போதும் LGBTQ+ தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும். எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.