மகாராஷ்டிரா: தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு நெருக்கடி தர முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே எழுதியவர், தீபாலி ஜக்தப் & மயூரேஷ் கொன்னூர் பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 6 ஜூலை 2025, 03:57 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசு அந்த முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது. முன்னதாக, மராத்தி மொழியை கட்டாயமாக்கும் முடிவுக்கு எதிராக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இருவரும் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அரசு தன் முடிவை ரத்து செய்துவிட்டதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த பேரணிக்கு பதிலாக, வெற்றிக் கூட்டத்தை அவர்கள் நடத்தினர்.

சிவ சேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அணி), மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.

“எந்தவொரு சண்டை அல்லது சச்சரவை விடவும் மகாராஷ்டிரா பெரியது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். பாலாசாஹேப்பால் செய்ய முடியாததை, பலர் செய்ய முடியாததை தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்,” என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

“எங்களுக்கு இடையேயான தடையை தானிய விவசாயிகள் நீக்கியுள்ளனர். இப்போது நாங்கள் ஒன்றாக வாழ்வதற்காக ஒன்றிணைந்துள்ளோம். இப்போது நாங்கள் ஒன்றாக இணைந்து உங்களை (பாஜக) வெளியேற்றுவோம்,” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

எனினும், இந்த இருவரும் ஒன்றாக இணையும்போது என்ன நடக்கும், இதன்மூலம் சொல்ல வரும் சேதி என்ன என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அரசியல் ரீதியாக இருவரும் ஒன்றிணைந்தால், தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை எப்படி ஒதுக்குவார்கள் என்ற கேள்வியை சில அரசியல் நிபுணர்களிடம் கேட்டோம். இருவரும் ஒன்றிணைந்ததன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அறியலாம். அதற்கு முன்பு, இந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் பங்கு என்ன என்பது குறித்து புரிந்துகொள்வோம்.

உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கூறியது என்ன?

வோர்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பாஜகவையும் ஏக்நாத் ஷிண்டேவையும் கடுமையாக விமர்சித்தார்.

“‘பேடெங்கே டோ கேடெங்கே’ (Batenge to Katenge) எனும் முழக்கத்தின் மூலம் மக்களுக்கு இடையே மோதல்களை தூண்டிவிட்டு, மகாராஷ்டிரா மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜக தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அரசியலில் பாஜக ஒரு தொழிலதிபர் போன்றது. அவர்கள் பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுவார்கள்.”

இந்துக்கள் பிரிந்து கிடந்தால் கொல்லப்படுவார்கள் என்பதே பாஜக முன்வைக்கும் ‘பேடெங்கே டோ கேடெங்கே’ முழக்கமாகும்.

“நேற்று ஒரு துரோகி ‘ஜெய் குஜராத்’ என முழக்கமிட்டார். தனது எஜமானர் வரும் போது ‘ஜெய் குஜராத்’ என்று சொல்லும் ஒருவர் எப்படி மராத்தி மொழிக்கு எப்படி முக்கியத்துவம் அளிப்பார்?” என ஏக்நாத் ஷிண்டே குறித்து உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.

“யாருக்கும் அநீதி இழைக்காதீர்கள். ஆனால், யாராவது உங்களுக்கு எதிராக கையை உயர்த்தினால், அதை அப்படியே இருக்க விடாதீர்கள்,” என பாலாசாஹேப் அடிக்கடி கூறுவார். மராத்தி மொழியின் பெயரால் கொடுமைப்படுத்தாதீர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் மகாராஷ்டிராவுக்கு வெளியே ஒரு மராத்தி நபர் எப்போதாவது மற்றவரை நிர்பந்தித்தது உண்டா?”

“நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். ஆனால், நான் மகாராஷ்டிர மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். நாம் எல்லோரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இப்போது சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தின்போது இணைந்தது போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாஜகவில் உள்ள மராத்தி மக்களும் அதில் இணைய வேண்டும்.” என்றார் உத்தவ் தாக்கரே.

“நாங்கள் கொடுமைப்படுத்தவில்லை, ஆனால் எங்களை கொடுமைப்படுத்துபவர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அனைத்து வேறுபாடுகளையும் புதைத்துவிட்டு, வலுவாக இணைவோம். நம்மை யாரும் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது, மராத்தி முத்திரையை யாரும் அழிக்க முடியாது என்பதை மராத்தியை நேசிப்பவர்கள் மறக்கக் கூடாது.” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், facebook/sanjayraut.official

படக்குறிப்பு, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே (கோப்புப்படம்) இந்த கூட்டத்தில், “மரியாதைக்குரிய உத்தவ் தாக்கரே மற்றும் மராத்திய சகோதரர்கள் இங்கே ஒன்றுகூடியுள்ளனர்,” என ராஜ் தாக்கரே பேச ஆரம்பித்தார்.

அவர் கூறுகையில், “உண்மையில், ஒரு பேரணிதான் இன்று நடப்பதாக இருந்தது. அனைத்து தரப்பிலிருந்தும் மராத்திய மக்கள் எப்படி ஒன்றிணைந்துள்ளனர் என்பதற்கு அதுவொரு சிறந்த உதாரணமாக இருந்திருக்கும். ஆனாலும் அந்த அறிவிப்பை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.”

“நான் என்னுடைய பேட்டியில் கூறிய பின்புதான் எல்லாமே ஆரம்பித்தது. எந்தவொரு சண்டை அல்லது சச்சரவை விடவும் மகாராஷ்டிரா பெரியது. நாங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்துள்ளோம். பாலாசாஹேப் அல்லது பலராலும் செய்ய முடியாததை தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்.”

“எந்தவொரு கொடியும் இங்கு இல்லை, மராத்தி மொழிதான் நோக்கம். அற்பத்தனமான கண்ணோட்டத்துடன் மகாராஷ்டிராவை பார்க்க நாங்கள் விரும்பவில்லை.” என்று ராஜ் தாக்கரே கூறினார்.

இருவரும் வேறுபாடுகளை மறப்பார்களா?

ராஜ் தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் ஒரே மேடையில் தோன்றினாலும் இத்தனை ஆண்டுகாலம் அவர்களுக்கு இடையே நீடித்த வேறுபாடுகளை அவர்கள் மறுப்பார்களா? அனைத்து தேர்தல்களிலும் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் எதிர்த்து வந்துள்ளனர். கீழ்மட்ட அளவில் மோதல்கள் இருந்தபோதிலும் விரைவாக அவர்களால் ஒன்றாக இணைய முடியுமா என, மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் தேசாயிடம் கேள்வி எழுப்பினோம்.

“அவசரநிலை காலகட்டத்துக்குப் பின் சில மாதங்களில் ஜனதா கட்சி ஒன்றிணைந்தது. எனவே, 17-18 ஆண்டுகள் கழித்து இந்த இரு கட்சிகளும் ஒன்றாக இணைய முடியும்” என ஹேமந்த் தேசாய் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என, பால நன்ட்கோன்கர் நேரடியாகவே வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். இப்போது இரு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டுப் பேரணி நடத்துவது குறித்து ராஜ் தாக்கரே கூறியவுடன், ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் ஒன்றாக இணைந்தனர். அதாவது, இரு கட்சியினரும் உத்தரவுகளை பின்பற்றுகின்றனர். மக்கள் முடிவெடுத்தால், அதை அவர்கள் செய்ய வேண்டும்.” என்றார்.

பட மூலாதாரம், Getty Images

அவர் மேலும் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி வங்க அடையாளத்தையும் நிதிஷ் குமார் பிகாரி அடையாளத்தையும் கொண்டுள்ளனர். அது இங்கேயும் நடக்கும். மும்பையில் மராத்தி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கொள்ளையடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக மிகுந்த கோபம் உள்ளது. அதனை இரு சகோதரர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.” என்றார்.

“மாற்றுத் திட்டம் வேண்டும்” – அமெய் திரோத்கர்

பிபிசி மராத்தியிடம் பேசிய பத்திரிகையாளர் அமெய் திரோத்கர், “மொழி பிரச்னையை மட்டும் முன்னெடுத்துச் சென்று இந்த இரு கட்சிகளும் ஒன்றாக தொடர்ந்து செயல்பட முடியாது. மகாராஷ்டிரா மற்றும் மும்பைக்கு அவர்கள் மாற்று திட்டத்தை வழங்க வேண்டும்.”

“பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முயலும் போது, இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைவதில் என்ன சிக்கல்? இருவரும் ஒன்றிணையும்போது மும்பை மட்டுமல்லாமல் தானேவிலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அரசியல் செய்வது கடினமாகும். இருவரும் மு.க.ஸ்டாலின் மற்றும் ரேவந்த் ரெட்டி போன்றவர்களை அழைத்து, இந்த அடையாள பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.”

“பாஜக மிகவும் புத்திசாலித்தனமாக அரசியல் செய்கிறது. மும்பையில் மராத்தி மொழி பேசுபவர்களுடன் மற்ற மொழி பேசும் மக்களும் உள்ளனர். மராத்தியை முன்னிறுத்தும் தாக்கரே சகோதரர்களுக்கு எதிராக மற்ற வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜக முயற்சிக்கலாம். மும்பை மாநகராட்சி மட்டுமின்றி, மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதியில் (MMR) பகுதியில் உள்ள பிற நகராட்சிகள் மீதும் பாஜக கண் வைத்துள்ளது,” என்கிறார் திரோத்கர்.

“ஏக்நாத் ஷிண்டேவின் முக்கியத்துவத்தைக் குறைக்க பாஜக இதை செய்தால், அது பாஜகவையும் பாதிக்கும்.”

“நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று அந்த சகோதரர்களுக்கு உணர்த்துவது மட்டும் போதாது, பாஜக ஒரு மாற்று திட்டத்தையும் முன்னிறுத்த வேண்டும். மொழி பிரச்னையில் அது வேலை செய்யாது, மகாராஷ்டிரா மற்றும் மும்பைக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம் என்பதைச் சொல்ல வேண்டும்.” என அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே (கோப்புப்படம்) இருவரும் ஒன்று சேர்ந்தால் பாஜகவுக்கு நெருக்கடி தர முடியுமா?

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்ஆஷிஷ் ஜாதவ் கூறுகையில், “மும்பை வாக்காளர்களை வைத்துப் பார்க்கும்போது, மராத்தி மொழி பேசுபவர்கள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருக்கும் போக்கு உள்ளது” என்றார்.

கோவிட் காலகட்டத்திலிருந்தே மும்பையில் உள்ள கொங்கனி (Konkani) முஸ்லிம்கள் , மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், வட இந்திய முஸ்லிம்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகிறார்.

அவர் கூறுகையில், “இன்றைக்கு ஒரு கருத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. பாஜக எப்படி ஒரு கருத்தை உருவாக்குகிறதோ, அதேபோல இந்த இரண்டு கட்சிகளும் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. பாலாசாஹேப்பால் செய்ய முடியாததை பட்னாவிஸ் செய்ததாக ராஜ் தாக்கரே கூறுகிறார், இது முக்கியமான கருத்து.

“பாஜக நல்லாட்சியை வழங்குவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது. தாக்கரேக்கள் இருவரும் ஒன்றிணைந்தது அதை நொறுக்கியுள்ளது. இந்த பிரச்னையில் மகாராஷ்டிரா எங்கு இருக்கிறது என்பது குறித்து மராத்தி மக்கள் ஆச்சர்யம் அடையலாம். ஒரே நேரத்தில் இரு தலைவர்களும் வெளிநாட்டில் இருந்தனர். அங்கு வைத்து இதை விவாதித்தனரா என ஆச்சர்யம் ஏற்படலாம். இப்போது, ராஜ் தாக்கரே பாஜக கூறுவதை கேட்பதில்லை,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரு சகோதரர்களும் ஏற்கெனவே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுள்ளனர். சாதி ரீதியான பிரிவினை குறித்த பிரச்னையை உத்தவ் தாக்கரே எழுப்பியுள்ளார். மும்பை மாநகராட்சியில் மராத்தி-அமராதி கூட்டணி அமைக்கும்போது பாஜக இரு தரப்பினருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடும் என்று உத்தவ் தாக்கரே சூசகமாகக் கூறினார்.

மும்பையின் முன்னாள் மேயரும் உத்தவ் பாலசாஹேப் தாக்கரே கட்சியின் தலைவருமான கிஷோரி பட்னேகர், இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் கூட்டணி இப்போது 100 சதவிகிதம் என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஆம், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் கூட்டணி ஏற்படும். அதை இரு சகோதரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மராத்தி மக்களுக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்,” என்றார்.

“அரசியல் ரீதியாக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். 70,000 கோடி ஊழல் புரிந்துள்ளதாக பிரதமர் குற்றச்சாட்டு எழுப்பிய கட்சி ஒன்றாக இணையும் போது, நாங்கள் ஏன் ஒன்றிணையக் கூடாது,” என அவர் கேள்வியெழுப்பினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு