Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சூரிய மண்டலத்தின் நீண்டகால மர்மத்தை தீர்க்க முயலும் உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி
பட மூலாதாரம், RubinObs
படக்குறிப்பு, சிலியில் உள்ள செரோ பச்சனில் அமைந்துள்ள ரூபின் ஆய்வகம் மற்றும் ரூபின் துணைத் தொலைநோக்கிஎழுதியவர், ஐயோன் வெல்ஸ்பதவி, தென் அமெரிக்க செய்தியாளர்எழுதியவர், ஜார்ஜினா ரானார்ட்பதவி, அறிவியல் செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சிலியில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த புதிய தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான இருண்ட பகுதியை, இதற்கு முன் வேறு எந்தத் தொலைநோக்கியும் வெளிப்படுத்தாத முறையில் உற்றுநோக்கும் திறனைக் கொண்டுள்ளது.
அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த ஒரு படத்தில், பூமியில் இருந்து 9,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் உருவாகும் பகுதியில், பரந்து விரிந்த வண்ணமயமான வாயு மற்றும் தூசு மேகங்கள் சுழல்கின்றன.
உலகின் அதிசக்தி வாய்ந்த டிஜிட்டல் கேமராவை வேரா சி ரூபின் ஆய்வகம் கொண்டுள்ளது. அது, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக உறுதியளிக்கிறது.
நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருந்தால், இந்தத் தொலைநோக்கி அதைத் தனது முதல் ஆண்டிலேயே கண்டுபிடிக்கும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், NSF-DOE Vera C. Rubin Observatory
படக்குறிப்பு, வேரா ரூபின் தொலைநோக்கி எடுத்த முதல் படம் டிரிஃபிட் மற்றும் லகூன் நெபுலாக்களை நுணுக்கமான விவரங்களுடன் காட்டுகிறது.இந்தத் தொலைநோக்கி பூமிக்கு அருகிலுள்ள ஆபத்தான சிறுகோள்களை கண்டறிந்து, பால்வீதியை வரைபடமாக்கும். மேலும், நமது பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை உருவாக்கும் மர்மமான இருண்ட பொருள் (டார்க் மேட்டர்) குறித்த முக்கியக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
இந்தத் தொலைநோக்கி 10 மணிநேரத்தில் 2,104 புதிய சிறுகோள்களையும், பூமிக்கு அருகில் உள்ள ஏழு விண்வெளி பொருட்களையும் கண்டறிந்ததாக, திங்கள் கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரூபின் ஆய்வகம் தெரிவித்தது.
மற்ற அனைத்து விண்வெளி ஆய்வுகளும், பூமியில் இருந்து செய்யப்படும் ஆய்வுகளும் கூட்டாக ஓர் ஆண்டில் சுமார் 20,000 சிறுகோள்களைக் கண்டுபிடிக்கின்றன.
வேரா சி ரூபின் ஆய்வகம் தெற்குப் பகுதியின் இரவு வானத்தைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான 10 ஆண்டுக்கால பணியைத் தொடங்கி இருப்பதால், வானியலில் இதுவொரு வரலாற்றுத் தருணமாகக் கருதப்படுகிறது.
“நான் தனிப்பட்ட முறையில் இந்தக் குறிக்கோளை அடைய சுமார் 25 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். பல வருடங்களாக இந்த அற்புதமான தளத்தை உருவாக்கி, இதுபோன்ற ஆய்வைச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம்,” என்கிறார் ஸ்காட்லாந்தின் ராயல் வானியலாளர் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கேத்தரின் ஹேமன்ஸ்.
இந்த ஆய்வில் பிரிட்டன் முக்கியப் பங்காளியாக உள்ளது. தொலைநோக்கி விண்வெளியைப் படம்பிடிக்கும்போது, அதில் கிடைக்கும் மிகவும் விரிவான புகைப்படங்களை ஆராய பிரிட்டனில் தரவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
வேரா ரூபின் நமது சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை பத்து மடங்கு அதிகரிக்கக்கூடும்.
பட மூலாதாரம், NSF-DOE Vera C. Rubin Observatory
படக்குறிப்பு, பால்வீதியைவிட சுமார் 100 பில்லியன் மடங்கு பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள சுழல் நட்சத்திரக் கூட்டங்கள் உள்பட ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம்அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த படங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பு பிபிசி வேரா ரூபின் ஆய்வகத்தைப் பார்வையிட்டது. சிலியின் ஆண்டிஸ் மலைத்தொடரில், செரோ பச்சோன் என்ற மலையில் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது. அங்கு, விண்வெளி ஆய்வுக்காக தனியார் நிலத்தில் பல ஆய்வகங்கள் உள்ளன.
அந்த ஆய்வகம் மிக உயரமான வறண்ட சூழலில், மிகவும் இருட்டான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களைப் பார்க்க இதுவொரு சரியான இடமாக உள்ளது.
இந்த ஆய்வில், இருளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இரவில் காற்று வீசும் சாலையில் பேருந்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தொலைநோக்கி அமைந்துள்ள இடத்தில், முழு வெளிச்சம் கொடுக்கும் ஹெட்லைட்களை பயன்படுத்தக் கூடாது.
ஆய்வகத்தின் உட்புறமும் இதேபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு வானத்தை நோக்கித் திறக்கும் தொலைநோக்கியின் குவிமாடம் முற்றிலும் இருட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு தனி பொறியியல் குழு பணியாற்றுகிறது. வானியல் ஆய்வுக்குத் தடையாக இருக்கக்கூடிய எல்ஈடி விளக்குகள் மற்றும் பிற வெளிச்சங்களை அணைக்க அந்தக் குழு உதவுகிறது.
தொலைநோக்கியின் மூலம் ஆய்வு செய்ய, நட்சத்திரங்களின் ஒளியே “போதுமானதாக” இருக்கிறது என்று திட்டத்தை மேற்பார்வையிடும் விஞ்ஞானி எலானா அர்பாக் கூறுகிறார்.
பிரபஞ்சத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதே இந்த வானியல் ஆய்வகத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று என்று கூறும் அவர், அதற்காக, “பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மங்கலான விண்மீன் திரள்கள் அல்லது சூப்பர்நோவா வெடிப்புகளைப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
“எனவே, நமக்கு மிகவும் கூர்மையான படங்கள் தேவை,” என்கிறார் அர்பாக். ஆய்வகத்தின் ஒவ்வொரு வடிவமைப்பும் மிகுந்த துல்லியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், SLAC National Accelerator Laboratory
படக்குறிப்பு, வேரா ரூபின் ஆய்வகத்தின் 3,200 மெகாபிக்சல் கேமரா, அமெரிக்க எரிசக்தி துறையின் SLAC தேசிய ஆக்ஸலரேட்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது.இந்தத் தொலைநோக்கி, அதன் சிறப்பு வாய்ந்த மூன்று-கண்ணாடி வடிவமைப்பின் மூலம் செயல்படுகிறது. இரவு வானத்தில் இருந்து தொலைநோக்கிக்குள் வரும் ஒளி முதலில் 8.4 மீ விட்டமுள்ள முதன்மைக் கண்ணாடியில் விழுகிறது. பின்னர் 3.4 மீ விட்டமுள்ள இரண்டாம் நிலை கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அதன் பிறகு, 4.8 மீ விட்டமுள்ள மூன்றாவது கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்டு, அந்த ஒளி கேமராவுக்குள் செல்கிறது.
அந்த கண்ணாடிகளைச் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி தூசிகூட படத்தின் தரத்தை மாற்றிவிடும். இந்தத் தொலைநோக்கியின் அதிக பிரதிபலிக்கும் திறனும், அதனுடைய வேகமும், அதிக அளவிலான ஒளியைப் பிடிக்க உதவுகிறது. இது “மிகவும் தொலைவில் உள்ள பொருட்களைப் பார்க்க முக்கியமானது” என்று ஆய்வகத்தின் தீவிர ஒளியியல் நிபுணரான கில்லெம் மெகியாஸ் கூறுகிறார்.
வானியலில், வெகுதொலைவில் உள்ளன என்பதற்கான அர்த்தம், அவை பிரபஞ்சத்தின் முந்தைய காலங்களைச் சார்ந்தவை என்பதாகும். விண்வெளி மற்றும் நேரத்தின் மரபு ஆய்வின் (Legacy Survey of Space and Time) ஒரு பகுதியாக, இந்தத் தொலைநோக்கியின் கேமரா ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இரவு வானத்தைப் படம் பிடிக்கும். 1.65 மீ x 3மீ அளவுடைய இந்த கேமரா 2,800 கிலோ எடையுடன், பரந்த பார்வையை வழங்குகிறது.
நகரும் குவிமாடமும் தொலைநோக்கியின் ஏற்றமும் விரைவாக இடமாற்றம் செய்யும் திறன் கொண்டவை என்பதால், இந்த கேமரா இரவில் சுமார் 8 முதல் 12 மணிநேரம் வரை, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒரு படத்தைப் பதிவு செய்யும்.
பட மூலாதாரம், RubinObs
படக்குறிப்பு, கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றனஇந்த கேமரா 3,200 மெகாபிக்சல்களை கொண்டுள்ளது (ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் ஃபோனின் கேமராவைவிட 67 மடங்கு அதிகம்). அதாவது, ஒரு புகைப்படத்தை முழுமையாகக் காண, 400 அல்ட்ரா HD டிவி திரைகள் தேவைப்படும்.
“முதல் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அது ஒரு மறக்க முடியாத சிறப்புத் தருணமாக இருந்தது” என்று பகிர்ந்துகொண்டார் மெகியாஸ்.
“இந்தத் திட்டத்தில் நான் முதன்முதலில் பணியாற்றத் தொடங்கியபோது, 1996 முதல் இதில் பணியாற்றி வந்த ஒருவரைச் சந்தித்தேன். நான் 1997இல் பிறந்தவன். இதைப் பார்த்தபோது, இது ஒரு தலைமுறை வானியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்த முயற்சி என்பதை உணர முடிந்தது” என்றும் அவர் கூறினார்.
ஓர் இரவில் சுமார் 10 மில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படும் நிலையில், உலகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.
“தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அம்சம் தான் உண்மையில் புதியதும் தனித்துவமானதும். இது நாம் இதுவரை கற்பனைகூட செய்யாத விஷயங்களை நமக்குக் காண்பிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது” என்று பேராசிரியர் ஹேமன்ஸ் விளக்குகிறார்.
ஆனால், பூமிக்கு அருகில் திடீரென வரும் ஆபத்தான விண்வெளி பொருட்களை, குறிப்பாக YR4 போன்ற சிறுகோள்களைக் கண்டறிந்து எச்சரிக்கையூட்டுவதன் மூலம் நம்மைப் பாதுகாக்கவும் இது உதவக்கூடும். YR4 சிறுகோள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஒரு கட்டத்தில் கவலை தெரிவித்தனர்.
கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இதுவொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமது விண்மீனை ஆய்வு செய்ய இதுவரை கிடைத்ததிலேயே இது மிகப்பெரிய தரவுத் தொகுப்பாக இருக்கும். இது பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது ஆராய்ச்சிகளை முன்னேற்றும் சக்தியாக இருக்கும்” என்கிறார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிஸ் டீசன்.
பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களின் எல்லைகளைப் பகுப்பாய்வு செய்ய, அவர் அந்தப் படங்களைப் பெறுவார். தற்போது கிடைக்கும் பெரும்பாலான தரவுகள் சுமார் 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவற்றை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், வேரா ரூபின் தொலைநோக்கியின் உதவியுடன், விஞ்ஞானிகள் 12 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பொருட்களையும் காண முடியும்.
பால்வீதியின் நட்சத்திர ஒளிவட்டம் (stellar halo), அதாவது காலப்போக்கில் அழிக்கப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பையும், இன்னும் உயிருடன் இருப்பினும் மிக மங்கலாகவும், கண்டுபிடிக்க கடினமாகவும் இருக்கும் சிறிய விண்மீன் திரள்களையும் காண முடியும் என பேராசிரியர் டீசன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இவற்றோடு, நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருக்கிறதா என்ற நீண்டகால மர்மத்துக்கு விடை காணும் அளவுக்கு வேரா ரூபின் தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது வியக்கத்தக்கது.
அது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட 700 மடங்கு தொலைவில் இருக்கக்கூடும். இது, பூமியில் இருந்து ஆய்வு செய்யப் பயன்படும் மற்ற தொலைநோக்கிகளால் அடைய முடியாத அளவுக்கு அப்பாற்பட்ட தொலைவு.
“இந்தப் புதிய அழகான ஆய்வகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால் அதற்காக நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் பேராசிரியர் ஹேமன்ஸ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு