பட மூலாதாரம், Facelab/Liverpool John Moores University

படக்குறிப்பு, கீழடி பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முகங்கள் 3டி டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்2 நிமிடங்களுக்கு முன்னர்

கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

கணினி உதவியுடன் கூடிய 3 டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகம் மறு உருவாக்கம் பணிகளை செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைகழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதம் இல்லாமல் இருந்துள்ளன.

தென்னிந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் நடமாடிய மனிதர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபியல் துறைத் தலைவர் ஜி குமரேசன் கூறுகிறார்.

முக மறு உருவாக்கம் என்பது மண்டை ஓடுகளை வைத்து, உடற்கூரியல் விதிகளுக்கு உட்பட்டு அறிவியல் ரீதியாகவும், தேவைப்படும் இடங்ளில் கலை நிபுணத்துவம் சார்ந்த விளக்கங்கள் (artistic interpretation) கொண்டும் செய்யப்படுவதாகும். இது போன்ற முக மறு உருவாக்கங்கள் 67% வரை அறிவியல் ரீதியாக செய்யப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Facelab/Liverpool John Moores University

“கீழடியிலிருந்து கிடைக்கப்பெற்ற சுமார் 50 மண்டை ஓடுகளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சேர இருந்த இரண்டு சிறந்த மண்டை ஓடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கு சுமார் 50 வயதிருந்திருக்கலாம். இவர்களுக்கு தென்னிந்திய முக அம்சங்கள் மட்டுமல்லாமல், மேற்கு யுரேசியா மற்றும் ஆஸ்ட்ரோ ஆசியாடிக் அம்சங்களும் சிறிய அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் படங்கள், 3டி ஸ்கேன் படங்கள் எடுத்து லிவர்பூல் பல்கலைக்கு அனுப்பப்பட்டன” என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபணுவியல் (Genetics) துறையின் தலைவர் பேராசிரியர் ஜி.குமரேசன் கூறுகிறார்.

மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எப்படி எடுக்கப்படுமோ, அதே முறையில் எடுக்கப்படும். 3டி ஸ்கேன் செய்ய தனியாக கருவி உள்ளது. இந்த தரவுகளைப் பெற்ற லிவர்பூல் பல்கலைகழகத்தின் ஃபேஸ் லேப் (Face lab- முக மறு உருவாக்கம் செய்யும் ஆய்வகம்) அதிலுள்ள இடைவெளிகளை அறிவியல்பூர்வமாக நிரப்பி முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளது.

பட மூலாதாரம், Facelab/Liverpool John Moores University

இவர்களின் மண்டை ஓடுகள் சேதமடையாமல் அப்படியே இருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகத்தின் ஃபேஸ் லேப் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன்.

“சில எலும்பு முறிவுகள் இருந்தன, பற்கள் இல்லை. இல்லாத பாகங்கள் பொதுவாக, ஏற்கெனவே உள்ள பாகங்களை பிரதிபலிக்கும் வகையில் மறு உருவாக்கம் செய்யப்படும் (உதாரணமாக வாயின் மேல் பகுதி எப்படி இருக்கிறது என்பதை பொருத்து கீழ் பகுதி மறு உருவாக்கம் செய்யப்படும்). எனவே தசைகளின் ஆழம் மற்றும் பிற அமைப்புகளை (மண்டை ஓட்டில் உள்ள) எலும்பியல் தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

“அந்த முகங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடையது என்றாலும், நமது தாத்தா ஒருவரின் முகத்தை நினைவுப்படுத்துவதாகவே உள்ளது” என்றார் பேராசிரியர் குமரேசன்.

பட மூலாதாரம், Journal of Anatomy/Caroline Wilkinson

படக்குறிப்பு, மண்டை ஓடுகளின் மீது தசைகளை பொருத்திய பிறகு காணப்படும் முக வடிவம் மண்டை ஓட்டிலிருந்து முகத்தை மறு உருவாக்கம் செய்வது ஒரு அறிவியல் நடைமுறையாகும். மண்டை ஓடுகளின் வடிவம் கிடைத்த பிறகு, அதன் மீது தசைகள் பொருத்தி பார்க்கப்படும்.

“Musculature எனப்படுவது தசைகளின் ஆழம் என்னவாக இருந்திருக்கும் என கணக்கிட்டு பொருத்துவதாகும். அது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறுபடும். மண்டை ஓடு தடிமனும் மாறுபடும். இவற்றுடன், ஒரு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட நவீன கால மனிதர்களின் தரவுகளையும் கொண்டு, அவர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படும்” என்கிறார் பேராசிரியர் குமரேசன்.

தசைகள் பொருத்துவது குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்திருந்த பேராசிரியர் வில்கின்சன், “ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய தசைகளின் தரவுகளை பயன்படுத்திக் கொள்வோம். மண்டை ஓட்டின் அளவையும் வடிவத்தையும் பொருத்து, ஒவ்வொரு தசையும் மாற்றி அமைக்கப்படும்” என்றார்.

இதனை மேலும் விளக்கும் வகையில், பேராசிரியர் வில்கின்சன் Journal of Anatomy என்ற இதழில் 2010-ம் ஆண்டு எழுதிய கட்டுரையில், ” தசைகளை பொருத்துவதில் எந்தவிதமான கலை நிபுணத்துவமும் இருக்கக் கூடாது. அவை உடற்கூறியல் விதிகளை பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் முகங்களில் சில வேறுபாடுகளை தவிர, (அனைவருக்கும்) ஒரே எண்ணிக்கையிலான தசைகள், (முகத்தின்) ஒரே இடத்திலிருந்து தொடங்குவதும், ஒட்டியிருப்பதும் வழக்கம். இவற்றின் வடிவம், அளவு, இடம் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருக்கலாம்” என்று எழுதியுள்ளார்.

மேலே உள்ள புகைப்படத்தில் (பேராசிரியர் கரோலின் வில்கின்சன், பிரிட்டனில் உள்ள டண்டீ பல்கலையில் உடற்கூரியல் மற்றும் மனித அடையாளத்துக்கான மையத்தில் பணியாற்றிய போது, ஜர்னல் ஆப் அனாடமி இதழில் “Facial Reconstruction-Anatomical Art or Artistic Anatomy?” என்ற கட்டுரையில் வெளிவந்த புகைப்படம்) , மூன்று வெவ்வேறு மண்டை ஓடுகளில் ஒரே விதமான தசைகளை பொருத்திய போது, முகங்களில் உள்ள வேறுபாடுகளை காணலாம்.

பட மூலாதாரம், Journal of Anatomy/Caroline Wilkinson

படக்குறிப்பு, முகத்தின் வலதுபுறத்தில் தசைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மீது தோல் பொருத்தப்படும் போது முகம் எப்படி இருக்கும் என்பதை முகத்தின் இடதுபுறத்தில் காணலாம். தசைகள் பொருத்திய பிறகு, அடுத்து முக்கியமாக செய்ய வேண்டியது, தசைகளின் மீதான தோல் பொருத்துவதாகும்.

“தசைகளின் அமைப்பு, எலும்புகளின் வடிவம், தசைகளின் ஆழம் ஆகியவற்றைக் கொண்டு தோலின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இளையவர்களை விட வயதானவர்களின் தோலை தீர்மானிப்பது கடினமாகும். ஏனென்றால் வயது முதிர்வு காரணமாக ஒருவருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறு காலத்தில் ஏற்படும். ஒருவருக்கு முன்கூட்டியே ஏற்பட தொடங்கும், மற்றொருவருக்கு தாமதமாக தொடங்கும். எனவே ஒரே வயதிலான இரண்டு நபர்களுக்கு தோல் வேறு மாதிரி இருக்கக் கூடும். எனவே ஒருவரின் சருமம் இந்த தன்மையில்தான் இருந்தது என்று உறுதியாக கூறுவது இயலாது” என்று பேராசிரியர் வில்கின்சன் தெரிவிக்கிறார் .

பட மூலாதாரம், Mark A. Roughleya and Caroline M. Wilkinsona

படக்குறிப்பு, பிரிட்டனின் யோர்க்‌ஷைர் நகரின் ஃப்யூஸ்டன் தேவாலயத்தின் சுற்றுப்புறத்தில் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகளிலிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட 19-ம் நூற்றாண்டு ஆண் ஒருவர். கணினி மறு உருவாக்கத்தில் தோலில் உள்ள சுருக்கங்கள், மேடு பள்ளங்கள் பொருத்தும் போது (வலது) முக வடிவம் எப்படி உள்ளது என்பதை காணலாம். முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது, சில பாகங்கள் சவாலானவையாக இருக்கின்றன. “வாய் பகுதியை வடிவமைப்பதில் கலை நிபுணத்துவம் அதிகம் தேவைப்படும். உடற்கூரியல்படி, மேல் உள்ள பற்கள் கீழ் உள்ளவற்றை விட எடுப்பாக இருந்தால், மேல் உதடும் அவ்வாறே இருக்கும். இவை வாய் மூடியிருக்கும் நேரத்தில் பற்கள் எவ்வாறு உள்ளன (occlusion pattern) என்பதை பொருத்து மாறுபடுகின்றன. காதுகளின் வடிவத்தை தீர்மானிப்பதும் மிகவும் கடினம்” என்கிறார் பேராசிரியர் வில்கின்சன்.

2006-ம் ஆண்டு பேராசிரியர் வில்கின்சன் பங்கேற்ற ஒரு ஆய்வு குறைந்தபட்சம் 67% முக அமைப்புகள் அறிவியல் ரீதியான நடைமுறைகளை பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்படுகிறது என்று கூறியது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முக மறு உருவாக்க தொழில்நுட்பம் தடயவியல் துறை சார்ந்த விசாரணைகளின் போது ஒருவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுத்தப்படலாம்.

அதே போன்று வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள, மக்களுக்கு தங்கள் கடந்த காலத்துடனான தொடர்பை மேம்படுத்த இந்த மறு உருவாக்கங்கள் பயன்படுகின்றன.

75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் மண்டை ஓடு ஒன்று இராக்கிய குர்திஸ்தானில் உள்ள ஷனிதார் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது 40களில் இருந்திருக்கலாம், பற்களில் நோய் இருந்திருக்கலாம் என்பதும் அவரது மண்டை ஓட்டை வைத்து தெரியவந்தது. நூற்றுக்கணக்கான துண்டுகள் சேகரிக்கப்பட்டு, இந்த மண்டை ஓடு ஒருங்கிணைக்கப்பட்டது. அதிலிருந்து அந்தப் பெண்ணின் முகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BBC Studios/Jamie Simonds

அதே போன்று, ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல காலத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் முகம் உட்பட சிலரது முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளனர். மண்டை ஓடுகளிலிருந்து முகங்கள் எப்படி மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதை பார்வையாளர்களே செய்து பார்க்கும் வகையில் விளக்க வீடியோக்களும் அங்கு உள்ளன.

பட மூலாதாரம், Perth Museum

வழக்கமான முக மறு உருவாக்க முறைகளில் மண்டை ஓடுகளின் படங்கள் அல்லது வார்ப்பு (cast) பயன்படுத்தப்படும். மண்டை ஓடுகளின் படங்கள் மீது தசைகளை வரைவது 2D முறையாகும்.

வார்ப்புகளை பயன்படுத்தி அதன் மீது மெல்லிய தசைகளை களிமண் அல்லது மெழுகு கொண்டு உருவாக்குவது 3D முறையாகும். கணினி உதவியுடன் கூடிய 3D முக மறு உருவாக்க முறையில், மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மற்றும் 3D ஸ்கேன் தரவுகள் கொண்டு அதன் டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் முகங்கள், வார்ப்புகளை கொண்டு உருவாக்கிய 3D முகங்களை போலவே காணப்படும். அதன் மீது பல்வேறு நவீன மென்பொருள்கள் கொண்டு தசைகள், தோல் ஆகியவற்றை பொருத்தலாம்.

பட மூலாதாரம், Face Lab, Liverpool John Moores University

படக்குறிப்பு, 3D டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்படும் முகங்கள் “முக மறு உருவாக்க படத்துக்கு உண்மைக்கு நிகரான தன்மையை கொண்டு வர புகைப்படம் எடிட் செய்யும் மென்பொருளை பயன்படுத்துவோம். (கீழடி முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது) இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் (உண்மைக்கு) மிக நெருக்கமான தோல், முடி மற்றும் கண்களின் நிறங்களை அளித்திருந்தனர்” என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Face Lab, Liverpool John Moores University and University of Glasgow.

படக்குறிப்பு, ராபர்ட் தி ப்ரூஸ் எனப்படும் ராபர்ட் இரண்டாம் அரசரின் 3D டிஜிட்டல் முக வடிவம். டிஜிட்டல் முக மறு உருவாக்கங்கள் இந்த துறையில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும் என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார்.

“பாரம்பரியமான களிமண் மாதிரிகளை விட இதன் அணுகுமுறை மேலும் துல்லியமாகவும் வேகமாகவும் இருக்கிறது. கணினி முறையில் மறு உருவாக்கம் செய்யும் போது, அந்த வடிவத்தை தொடர்ந்து சரி பார்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடிகிறது. இதை தவிர CGI – கணினி கிராஃபிக்ஸ் மற்றும் AI – செயற்கை நுண்ணறிவு உண்மைக்கு மிக நெருக்கமான படங்களை உருவாக்குவதில் எங்கள் திறனை அபாரமாக அதிகரித்துள்ளது” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு