Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
2 ஜூலை 2025, 05:30 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்குப் பின் இந்த வழக்கு பல திருப்பங்களை சந்தித்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டதும் இந்த வழக்கு வேகம் பிடித்தது.
5 காவலர்கள் கைது, நீதிமன்றத்தில் ஆஜர், சிறையில் அடைப்பு, காவலர் குடும்பத்தினர் போராட்டம், காவலர்கள் தாக்கியதாக கூறப்படும் வீடியோ, நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக் கணைகள், காவல்துறையினர் மீது நடவடிக்கை, முடிவில் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் என 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் அதிவேகமாக மாற்றங்கள் நடந்தேறின.
வழக்கின் போக்கை சடுதியில் புரட்டிப் போட்ட உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன? அதன் பிறகு வந்த 24 மணி நேரத்தில் என்னென்ன மாற்றங்கள் அரங்கேறின?
5 காவலர்கள் கைது
அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு காட்சிகள் வேகமாக மாறின. விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 5 காவலர்களையும் அழைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது.இரவு 11 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்தை அந்த வேன் சென்றடைந்தது.திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.மற்ற நடைமுறைகள் முடிந்த பின்னர், நள்ளிரவு 1.15 மணியளவில் 5 காவலர்களும் வேனில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.நள்ளிரவு 1.45 மணியளவில் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பாக 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.இதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் 5 காவலர்களும் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர, காவலர்கள் ஆனந்த், கண்ணன் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட காவலர்கள் உடற்கூராய்வு அறிக்கை
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட போது, முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த உடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்வதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம்எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், டிஎஸ்பி சஸ்பெண்ட்
சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத்தை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது. அவர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஸிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நேற்று தினம் மாலையே சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்பியாக (கூடுதல் பொறுப்பு) சந்தீஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம்
திருப்புவனம் காவல் நிலையத்தில் நேற்று நண்பகல் வேளையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்களது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ” உயர் அதிகாரிகள் கூறும் போது கீழே உள்ளவர்கள் அதைக் கேட்டு செயல்படத்தான் செய்வார்கள். அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று அவர் கூறினர்.
ஆனால், உரிய அனுமதியின்றி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.
படக்குறிப்பு, காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோவில் காவலர்களாக சுட்டிக்காட்டப்பட்ட நபர்கள் சீருடையில் அல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. மறைவிடத்தில் இருந்தபடி ஒருவர் பதிவு செய்த வீடியோ இது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
அஜித்குமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
நகை காணாமல் போனதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன்?, சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? யார் இந்த வழக்கை தனிப் படையிடம் ஒப்படைத்தது? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா? நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
‘ரொம்ப சாரிமா’
அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, தொலைபேசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் பேசிய முதலமைச்சர், தைரியமாக இருக்கும்படி கூறினார். அப்போது, “விசாரணைக்கு அழைத்துச் சென்று இப்படி செய்துள்ளனரே,” என நவீன் முதலமைச்சரிடம் கூறினார்.
பட மூலாதாரம், KR Periakaruppan/X
படக்குறிப்பு, அஜித் குமார் தாயாரிடம் முதலமைச்சர் போனில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
முதலமைச்சர் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் போனில் உரையாடியது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்!; கொலை செய்தது உங்கள் அரசு; ‘SORRY என்பது தான் உங்கள் பதிலா? முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன் என்று சொல்கிறீர்களே, அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா?” என பதிவிட்டிருந்தார்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
அடுத்தடுத்து மாறிய காட்சிகளின் தொடர்ச்சியாக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில்,”இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இருப்பினும் காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை குறித்து எவ்வித சந்தேகமும் எழுப்பக் கூடாது, என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துளளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன?
நகை திருட்டு புகார் அளித்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், அஜித் குமார் உயிரிழப்பதற்கு முன்னதாக வெளியிட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அவரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, “ஓர் உயிர் போனதில் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினால் அழைத்து விசாரிப்பார்கள் என்று தான் தெரியும். காவலாளி இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது” எனக் கூறினார்.
தானும் 76 வயதான தாய் மட்டுமே வசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “எனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறுவது தவறானது. ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக சார்பு ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். மதியம் 2.30 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தோம்” என்றார்.
“என் நகையை இறந்து போன காவலாளி எடுத்திருப்பாரா என உறுதியாக தெரியாது. என்னிடம் சாவி வாங்கிச் சென்றது அவர் தான். அதைத் தான் கூறினேன். எங்களுக்குக் கடவுளைத் தவிர வேறு யாரையும் தெரியாது” என்கிறார் நிகிதா.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு