‘சடலமாக வருவான் என நினைக்கவில்லை’ என்று கதறும் தாயார் – நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, காவலாளி அஜித் குமாரும் அவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி செய்தியாளர்37 நிமிடங்களுக்கு முன்னர்

“என் கண் எதிரிலேயே அவனை அடித்தார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். வாயில் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினார்கள். கோவிலின் பின்புறம் கூட்டிப் போய் நகை எங்கே என்று கேட்டு அடித்தனர். அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான்” எனக் கூறி கண்கலங்கினார், காவலாளி அஜித்குமாரின் சகோதர் நவீன்குமார்.

“எங்கள் புகாரால் ஓர் உயிர் பறிபோகும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை” என்கிறார், காவலாளி மீது புகார் கொடுத்த நிகிதா.

திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் போட்டுக் காண்பித்தனர்.

கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மடப்புரம் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம் அமைந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த கூலி தொழில்கள் பிரதானமாக உள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மடப்புரம் கிராமத்தில் என்ன நிலவரம்?

மடப்புரம் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சென்ற போது, கோவிலைச் சுற்றி கடை வைத்திருந்த வணிகர்கள் பலரும் பேசவே தயங்கினர். ஒரு சில பெண்கள், “நாங்கள் வெளியூரில் இருந்து வந்து வியாபாரம் செய்கிறோம். போலீஸ் அடித்து அந்தப் பையன் இறந்துபோன தகவலைக் கேள்விப்பட்டோம். அவர் யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததில்லை” எனக் கூறினர்.

கோவிலுக்கு அருகில் பூ வியாபாரம் செய்து வரும் ஆறுமுகத்தாய் பிபிசி தமிழிடம் பேசும்போது, “இந்த வழியாக அந்தப் பையன் வேலைக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு போலீஸ் அழைத்துக் கொண்டு போனதாக கூறினார்கள். போலீஸ் அடித்ததை நான் பார்க்கவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு பிபிசி தமிழ் சென்றது. மிகப் பழைமையான அந்த வீடு அமைந்துள்ள தெருவில் சில அரசியல் கட்சி நிர்வாகிகளின் கார்கள் நின்றிருந்தன.

படக்குறிப்பு, மாலதி”சடலமாக வருவான் என நினைக்கவில்லை”

அஜித்குமாரின் தாய் மாலதியிடம் பிபிசி தமிழ் பேசுகையில், “சாமி கும்பிட வந்த ஒரு பெண், தனது காரை பார்க்கிங் செய்வதற்காக சாவியை என் மகனிடம் கொடுத்துள்ளார். அவன் தனக்குத் தெரிந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துள்ளான். சாமி கும்பிட்டுவிட்டுக் கிளம்பி போன அவர்கள், திரும்பி வந்து நகையைக் காணவில்லை எனக் கூறி கோவில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்” என்றார்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் நகை மற்றும் 2,500 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரித்துள்ளனர்.

“மாலை நான்கு மணியளவில் என் மகனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருப்பது தெரிந்தது. அங்கு அவனிடம், ‘அரிசி மாவு ஆட்டி உங்களை எல்லாம் காப்பாத்தினேன். நகை எடுத்திருந்தால் கொடுத்துவிடு’ எனக் கூறி அழுதேன். நான் எடுக்கவில்லை எனக் கூறினான். அங்கிருந்து போலீஸார் என்னை விரட்டிவிட்டனர்” எனக் கூறினார் மாலதி.

“மறுநாள் என் மகனை சடலமாகக் கொடுப்பார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என்றவாறு மாலதி கதறி அழுதார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாவு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

நிகிதா கொடுத்த புகாரின்பேரில் ஜூன் 28ஆம் தேதி காலையில் அஜித்குமாரின் வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர்.

படக்குறிப்பு, நவீன்குமார்”மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினர்”

“தனிப்படை காவலர்கள் 3 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். வெளியில் இருந்த வேனில் என் அண்ணன் இருந்தான். சட்டை எல்லாம் மண்ணாக இருந்தது. தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது நன்றாக அடித்துள்ளனர் எனத் தெரிந்தது” என்று அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு முழுக்க என் அண்ணனை தூங்கவிடவில்லை. ‘உன் தம்பியை அடித்தால் சொல்வாயா?’ எனக் கேட்டு என்னையும் அடித்தனர். மதியம் சாப்பிட்ட பிறகு 3 தனிப்படை போலீஸார் அண்ணனை கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாக கூறியுள்ளான்” என்கிறார்.

கோவிலின் பின்புறம் நகை உள்ளதாகக் கூறியதால் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அங்கு அழைத்து சென்றுள்ளனர். ” அங்கு நகை இல்லை எனத் தெரிந்ததும் கோபப்பட்டு காவலர்கள் கடுமையாக அடித்தனர். அவனது அலறல் சத்தம் கேட்டு கோவில் அருகே கடை வைத்திருந்த வியாபாரிகள் ஓடிவந்தனர்” எனக் கூறினார்.

“போகும் போது என் அண்ணன் நடந்து போனான். வரும்போது தூக்கிக் கொண்டு வந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது மிளகாய்ப் பொடியை கரைத்து வாயில் ஊற்றினர். அருகில் கம்பியெல்லாம் கிடந்தது. கடைசியாக என் சட்டையை கழட்டிக் கொடுத்தேன்.” எனக் கூறி கண்கலங்கினார், நவீன்குமார்.

கோவிலின் பின்புறத்தில் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாட்டுத்தொழுவத்திற்கு பிபிசி தமிழ் சென்றது. சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அந்த இடமே சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாக வெளியில் பேசப்படும் தகவல் குறித்து நவீன்குமாரிடம் கேட்டபோது, “அரசு தரப்பில் உதவி செய்வதாகக் கூறினர். ஆனால், அப்படி எந்த உதவிகளும் வரவில்லை” எனக் குறிப்பிட்டார்.

“அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் சாவியைக் கொடுத்ததாகக் கூறினான். அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா எனத் தெரியவில்லை” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரியும் அருண்குமார்.

படக்குறிப்பு, அருண்குமார்காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம்

அங்கிருந்து திருப்புவனம் காவல் நிலையத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது, குடும்பம் சகிதமாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய அவர்கள், “நன்றாக வேலை பார்த்ததாக உயர் அதிகாரிகள் நற்சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதை வைத்து எங்கள் குழந்தைகளை வளர்க்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினர்.

“இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்கும் நியாயம் வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர்கள், ” உயர் அதிகாரிகள் கூறும் போது கீழே உள்ளவர்கள் அதைக் கேட்டு செயல்படத்தான் செய்வார்கள். அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை” எனக் கூறினர்.

ஆனால், உரிய அனுமதியின்றி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

“மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை”

“பத்தாவது படித்த பிறகு தனியார் கம்பெனியில் என் அண்ணன் வேலை பார்த்து வந்தான். கோவிலில் காவலாளி பணி உள்ளதாகக் கூறியதால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக வேலை பார்த்து வந்தான். மூன்று மாதங்களாக அந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை” எனக் கூறுகிறார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார்.

கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்த பெண்ணின் மேலிட செல்வாக்கு காரணமாகவே தன் அண்ணனை காவல்துறை தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன?

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஓர் உயிர் போனதில் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினால் அழைத்து விசாரிப்பார்கள் என்று தான் தெரியும். காவலாளி இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது” எனக் கூறுகிறார்.

தானும் 76 வயதான தாய் மட்டுமே வசித்து வருவதாகக் கூறும் அவர், “எனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறுவது தவறானது. ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக சார்பு ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். மதியம் 2.30 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தோம்” என்கிறார்.

“நகையை பின்சீட்டில் வைத்திருந்ததாகக் கூறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?” என்று கேட்டபோது, “என் தாயார் வயதானவர் என்பதால் யாரும் பறித்துவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக காரின் பின்சீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வேண்டும் என்றே செய்யவில்லை” எனக் கூறுகிறார்.

“என் நகையை இறந்து போன காவலாளி எடுத்திருப்பாரா என உறுதியாக தெரியாது. என்னிடம் சாவி வாங்கிச் சென்றது அவர் தான். அதைத் தான் கூறினேன். எங்களுக்குக் கடவுளைத் தவிர வேறு யாரையும் தெரியாது” என்கிறார் நிகிதா.

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடந்த காட்சி (இடது), காவலாளி அஜித்குமார் (வலது)”எந்த அதிகாரமும் இல்லை” – ஆஷிஷ் ராவத்

காவல்துறை மீதான விமர்சனங்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் நேரில் சென்றது.

“புது காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டதால், தற்போது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று மட்டும் அவரது தரப்பு பதிலாக பிபிசி தமிழுக்கு சொல்லப்பட்டது.

அஜித்குமார் மரண வழக்கு உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. 5 காவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு