பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

by ilankai

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கம்பளை கணபதி தோட்ட மக்களை நேற்று நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன் இராசமாணிக்கம், திலித் ஜயவீர மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அதேபோன்று கண்டி மாவட்டத்துக்கும் சென்றுள்ளனர்.கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவும் இதன்போது கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை மற்றும் தமது வீடுகள் எதிர்வரும் காலங்களிலும் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் அச்சுறுத்தல்களை குறிப்பிட்டனர். இதன்போது பொதுமக்களிடம் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்,அரசாங்கத்துடன் பேசி காணிகளை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்தியாவுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.காணியை பெற்றுத் தருகிறோம். வீடுகளை கட்டிக் கொள்ளுங்கள்.  நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை இருப்பினும் இயலுமான வகையில் உதவி செய்கிறோம். அச்சுறுத்தலான இடங்களுக்கு மீண்டும் செல்வது பாதுகாப்பற்றது.ஆகவே காணியை பெற்றுத் தருவதற்கு பேசுவோம் என்றார். இந்த கள விஜயம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாவது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டி மாவட்டத்துக்கு கள விஜயம் செய்திருந்த நிலையில் அண்மைய மிக மோசமான காலநிலையினால் அம்மாவட்;டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எமது குழு தற்போதைய நிவாரண முயற்சிகளில் பங்கெடுத்ததுடன், அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்தோம். அத்தோடு மாவத்துற, இஹலகம, கம்பளையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டோம்.இங்கு 35 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படும் நிலையில், 22 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உதவவில்லை எனவும் அதன்காரணமாக தமது சொந்த பணத்தையும் இயந்திரங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் கூறுகின்றனர். அத்தோடு அரசாங்க அதிகாரிகள் இன்னமும் பார்வையிடாத மேலும் சில பாதிக்கப்பட்ட இடங்கள் இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

Related Posts