யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வீதிகள், குளங்கள் மற்றும் பாலங்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக அறிக்கையிடுமாறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அனர்த்த நிலமைகள் தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த, கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டுள்ள இந் நேரத்தில் கட்சி, இன மத பேதமின்றி நாட்டைக் மீள கட்டியெழுப்ப வேண்டும். இக்கட்டான நேரத்தில் சனாதிபதி அவர்களின் வழிகாட்டுதல்களில் அரசாங்கம் துரிதமாக செயற்பட்டுவருகிறது. அதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி வருவதற்கு நன்றிகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க விரும்பினால் ஒரு பகுதிக்கு என்றில்லாமல் அனைத்து பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் கிடைக்கும் வண்ணம் பதிவுகளுடன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன், பிரதேச செயலாளர்கள் தத்தமது பிரதேச செயலக ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வீதிகள், குளங்கள் மற்றும் பாலங்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக அறிக்கையிடுமாறும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மீள கட்டியெழுப்பி பொருளாதார நடவடிக்கைகளை முன்கொண்டு சொல்லக்கூடிய நம்பிக்கையை உருவாக்க வேண்டுமென தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலர் தெரிவிக்கையில், அரசசாற்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்கள் அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பினால், உரிய பதிவுகளின் அடிப்படையில் அதனை பிரதேச செயலக ரீதியாக தேவைக்கேற்ற வகையில் வழங்க முடியும். மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் பிரதேச செயலக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்டச் செயலகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் சமைத்த உணவுக்கான முதலாம் கட்ட நிதி விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்திற்கு முன்னரும், பின்னரும் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும், அதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஊடாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களும் நிலைமைக்கேற்ற வகையில் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். அடுத்து வரும் நாட்களில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ச்சியாக அனைவரும் ஒன்றினைந்த வகையில் செயற்பட வேண்டும். அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற மற்றும் கிடைக்க இருக்கின்ற உதவிகளை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்காக குழந்தைகளுக்கான பிஸ்கட் வகைகள், பால்மா, துவாய், படுக்கை விரிப்புகள், பாய் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார நப்பின்கள் அதிகம் தேவைப்படுகிறது என தெரிவித்தார். அதனை அடுத்து கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசசார்பற்ற நிறுவன பிரதிநிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் குறித்த பொருட்களை வழங்க முன்வந்தனர். இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக கலந்துகொண்ட சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அனர்த்த நிலைமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அரசாங்க வைத்திய சாலைகளை நாடுமாறும், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் வெள்ள நீரில் அதிகம் நடமாடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல் வழங்கியவுடன், டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்து வருவதாகவும் அதற்காக புகையூட்டல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்ததார். இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் பங்குகொண்டனர்.
யாழில்.பிரதேச ரீதியாக பாதிப்பு குறித்து அறிக்கையிடுமாறு பிரதேச செயலர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு! – Global Tamil News
3