‘ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள்’: கூட்டணிக் கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்55 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விசிகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுகள் வந்துள்ளன.

“கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்” – என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.

இதனை மறுக்கும் தி.மு.கவே, ‘கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்’ என்று கூறுகிறது.

கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது?

‘ஆட்சியில் பங்கு ‘

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டதாக அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்புகள் எழுந்தன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார்கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், “கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம்” என்றார்.

“காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாட்டின் நிலவரத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை நடக்கும் போது, ‘அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்று கேட்போம்” என அவர் குறிப்பிட்டார்.

“துணை முதல்வர் பதவி…தராவிட்டால் மாற்று வழி”

பட மூலாதாரம், Facebook/Krishnamurthy

படக்குறிப்பு, 2026 தேர்தலில் குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பொன்.கிருஷ்ணமூர்த்தி இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, “கடந்த தேர்தலில் குறைவான தொகுதிகளை முடிவு செய்ததன் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார். தி.மு.க-வின் கோரிக்கையை ஏற்று குறைந்த இடங்களில் போட்டியிட்டோம்” எனக் கூறுகிறார்.

“ஆனால், 2026 தேர்தலில் குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும்” எனக் கூறும் பொன்.கிருஷ்ணமூர்த்தி, “அவ்வாறு கொடுக்காவிட்டால் மாற்று வழிகளை கட்சித் தலைமை ஆலோசிக்க வேண்டும். கூடவே, காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும்” என்கிறார்.

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும் போது, தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி கூறக் கூடாதா?” எனவும் பொன்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

படக்குறிப்பு, காங்கிரஸுக்கு திமுக துணை முதலமைச்சர் பதவியைத் தர வேண்டும் – ராஜேஷ்குமார் “தனித்து நின்று வெற்றி பெற முடியாது”

சமீப நாட்களாக, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள், ‘அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்’ எனப் பேசி வருகின்றன.

ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதால் குறைவான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றோம். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை” என பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கட்சியின் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க செயல்படுத்தினாலும் தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை” எனக் கூறிய பெ.சண்முகம், “அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியாக நின்று தேர்தலை எதிர்கொள்ளும் போது தி.மு.க தரப்பிலும் கூட்டணியாக நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்” எனக் கூறினார்.

பெ.சண்முகத்தின் கருத்தை வரவேற்று செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை, தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்” எனக் கூறினார்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்குப் பதில் அளித்த திருமாவளவன், “கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்ற நிலைப்பாடும் இல்லை. ஆனால், அந்தக் கோரிக்கையை வைக்கும் சூழல் கனியவில்லை” எனவும் தெரிவித்தார்.

“12 தொகுதிகள்” – துரை.வைகோ

பட மூலாதாரம், X/Duraivaiko

படக்குறிப்பு, தங்கள் கட்சிக்கு குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ.ஜூன் 22 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுகவின் 31வது பொதுக்குழு கூட்டத்தில், “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து கூடுதல் தொகுதிகளைப் பெற்று, வென்று, மதிமுக தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“தங்கள் கட்சி குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும்” எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ.

“எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும்”

“தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறக் கூடிய அணியாக, தி.மு.க கூட்டணி உள்ளது. இதில் அதிக இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் இருக்கும். ஆனால், ஒதுக்கப்படும் இடங்களில் எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பது முக்கியம்” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் அவை பாதிக்கும் குறைவாக வெற்றி பெற்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும் சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Facebook/Sigamani

படக்குறிப்பு, எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முக்கியம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.”உதாரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களை பெற்றாலும் காங்கிரஸ் கட்சியால் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. இதை மனதில் வைத்தே தி.மு.க இடங்களை ஒதுக்கும்” எனவும் சிகாமணி திருப்பதி குறிப்பிட்டார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க 119 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்றது.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவில் எட்டு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க-வுக்கு 89 தொகுதிகள் கிடைத்தன.

“தொகுதிகளை ஒதுக்குவது மட்டுமல்ல, அந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கவும் தி.மு.க அதிகம் உழைக்க வேண்டிய நிலை உள்ளது” எனக் கூறுகிறார், சிகாமணி திருப்பதி.

“வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது”

பட மூலாதாரம், Facebook/MK Stalin

இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, “தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது” எனக் கூறுகிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, ம.தி.மு.க, த.மா.கா, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாக போட்டியிட்டன.

“தி.மு.க தோல்வியடைவதற்கு இந்தக் கூட்டணியும் ஒரு காரணமாக இருந்தது. சுமார் ஒன்றரை சதவீத வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது. அதிகாரத்தில் பங்கு என்பதை நியாயமான கோரிக்கையாகவே பார்க்கிறேன்” எனக் கூறுகிறார் ஆர்.மணி.

“காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்களைக் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பிரச்னை வரும். கூடுதல் இடங்களைத் தருவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை” எனவும் ஆர்.மணி குறிப்பிட்டார்.

‘ஆட்சியில் பங்கு’ என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்துப் பேசும் ஆர்.மணி, ” கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு நாங்கள் மட்டுமே அதிகாரத்தில் இருப்போம் என்பதை ஏற்க முடியாது” என்கிறார்.

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை தி.மு.க வைக்கிறது. ஆனால், அதிகாரத்தில் பங்கு என்பது தான் ஜனநாயகமாக இருக்கும். ஒரு கட்சி ஓர் இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்” எனக் கூறுகிறார் ஆர்.மணி.

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க தொடர்ந்து முன்வைப்பதாகக் கூறும் ஆர்.மணி, “இது நியாயமான கோரிக்கை. இதை பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் முன்வைக்கின்றன” என்கிறார்.

“ஸ்டாலினால் சமாளிக்க முடியாது” – ஆர்.மணி

2006 சட்டமன்றத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 96 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 36 பேரும் பா.ம.க உறுப்பினர்கள் 18 பேரும் தி.மு.க அரசுக்கு ஆதரவு கொடுத்தனர்.

இதை மேற்கோள் காட்டும் ஆர்.மணி, “2026 தேர்தலில் அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க தலைமையால் எதிர்கொள்ள முடியாது. வெளியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தில் பங்கு கேட்கும். கருணாநிதியைப் போல ஸ்டாலினால் சமாளிக்க முடியாது” எனக் கூறுகிறார்.

“கூட்டணி ஆட்சி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது” எனக் கூறும் ஆர்.மணி, ” மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. அதேபோல், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.” என்கிறார்.

“தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்” – தி.மு.க

பட மூலாதாரம், Facebook/Constantine

படக்குறிப்பு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் – தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.”அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்” எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.

“மாநிலத்தில் கூட்டாட்சி என்பதை மக்கள் ஏற்பதில்லை. ஒருவர் ஆளும் போது மட்டுமே தெளிவான முடிவை எடுக்க முடியும் என நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சியாக இருந்தால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொண்டு தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டதை நினைவுகூர்ந்து பேசிய கான்ஸ்டன்டைன், “அந்தக் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. 2011 தேர்தலில் குறைவான தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டபோதும் மக்கள் ஏற்கவில்லை” என்கிறார்.

பட மூலாதாரம், Facebook/VCK

படக்குறிப்பு, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது கிடையாது எனக் கூறிவிட்டார் – கான்ஸ்டன்டைன்”தவிர இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல” எனக் கூறும் கான்ஸ்டன்டைன், “கட்சி தொடங்கும் போதே, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.” என்கிறார்.

அதிக இடங்களை கேட்பதன் மூலம், ஏற்கெனவே கொடுத்ததை குறைத்துவிட வேண்டாம் என கூட்டணிக் கட்சிகள் உணர்த்துவதாக கான்ஸ்டன்டைன் தெரிவித்தார்.

“கூட்டணிக் கட்சிகள் கேட்பதைப் போல தி.மு.க-வினரும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். தற்போதுள்ள எண்ணிக்கையே தொடரலாம் அல்லது சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம். அதைத் தலைமை முடிவு செய்யும்” என்கிறார், பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு