Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள்.
காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள்.
இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது?
உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.
ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.
ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா.
அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார்.
படக்குறிப்பு, ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா.
அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன.
“பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே” என்கிறார் ரம்யா.
ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா.
அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர்.
“முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை” என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்.
உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.
பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர்.
படக்குறிப்பு, மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்ஆனால், “இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்,” என்று விளக்கினார்.
“சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை.
வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது,” என்கிறார் திவ்யா.
ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்?
ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
“பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்,” என்றார்.
கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார்.
இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா.
அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு