Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அசிம் முனிர் – டிரம்ப் சந்திப்பு: இந்தியா, பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
12 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போரைத் தடுப்பதில் அவர் ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவிக்க, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஜெனரல் முனிரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் டிரம்ப் இவ்வாறு கூறினார்.
அசிம் முனிருடனான சந்திப்புக்குப் பிறகு, ‘இரான் தொடர்பான பிரச்னை ஜெனரல் முனிருடன் விவாதிக்கப்பட்டது’ என டிரம்ப் கூறினார்.
“இரானைப் பற்றி அவர் (ஜெனரல் முனிர்) மிக நன்றாக அறிவார். ஒருவேளை மற்றவர்களை விட சிறந்த புரிதல் கொண்டவராகவும் இருக்கலாம். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அவர் கவலையடைந்துள்ளார்” என்று டிரம்ப் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிரை கெளரவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த மதிய விருந்தில் கலந்து கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மதிய விருந்துக்குப் பிறகு அதிபர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டிரம்ப், “பாகிஸ்தான்-இந்தியா போரைத் தடுப்பதில் ஜெனரல் அசிம் முனிர் முக்கிய பங்கு வகித்தார், அவரைச் சந்திப்பதை பெருமையாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்ததாக அதிபர் டிரம்ப் கூறினார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத சக்திகள் என்றும், அவற்றுக்கிடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் “இரண்டு புத்திசாலிகள் போரை நிறுத்த முடிவு செய்தனர்” என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார்.
இரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
பாகிஸ்தான் ஜெனரலுடன் இரான் குறித்து ஏதேனும் விவாதம் நடத்தப்பட்டதா என்று செய்தியாளர்கள் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், “அவர் (ஜெனரல் முனிர்) இரானை நன்கு அறிவார், மற்றவர்களை விட நன்றாகவே அறிவார், தற்போதைய சூழ்நிலை அவருக்கு கவலையளிக்கிறது. இஸ்ரேலுடன் அவருக்கு மோசமான உறவு இருக்கிறது என்பது அதற்கு அர்த்தமல்ல. அவர் இரண்டு நாடுகளையும் நன்கு அறிந்தவர், உண்மையில் அவர் இரானை இன்னும் நன்றாக அறிந்திருக்கலாம். இப்போது என்ன நடக்கிறது என்பதை அவர் கவனித்து வருகிறார். அவர் என்னுடன் உடன்படுகிறார்” என்று தெரிவித்தார்.
“போரை நோக்கி நகராததற்கு நன்றி தெரிவிக்க விரும்பியதால், நான் அவரை இங்கு அழைத்தேன்” என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.
தனது முயற்சிகளால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டது என்று டிரம்ப் இதற்கு முன்பும் பலமுறை கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “சில நாட்களுக்கு முன்பு இங்கு வந்த பிரதமர் மோதிக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்”என்று குறிப்பிட்டார்.
“அவர்கள் இருவரும் (ராணுவத் தளபதி அசிம் முனிர் மற்றும் பிரதமர் மோதி) மிகவும் புத்திசாலிகள். அணு ஆயுதப் போராக மாறக்கூடிய ஒரு மோதலை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். பாகிஸ்தானும் இந்தியாவும் முக்கிய அணு ஆயுத சக்திகள். எனவே இன்று அவரை (ராணுவத் தளபதி அசிம் முனிர்) சந்தித்தது எனக்கு பெருமையளிக்கிறது” என்று டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், EPA-EFE/Shutterstock
படக்குறிப்பு, அசிம் முனிருடனான சந்திப்புக்குப் பிறகு, ‘இரான் தொடர்பான பிரச்னை ஜெனரல் முனிருடன் விவாதிக்கப்பட்டது’ என டிரம்ப் கூறினார்.செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த சந்திப்பு, பாகிஸ்தானில் ஒரு பெரிய ராஜீய வெற்றியாகக் கருதப்படுகிறது.
ஜூன் 13 அன்று இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்குமா என்ற ஊகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இரான் மீதான தாக்குதலில் இஸ்ரேலுடன் இணைவீர்களா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, ”நான் அவ்வாறு செய்யலாம், ஒருவேளை செய்யாமலும் இருக்கலாம்.” என்று டிரம்ப் பதிலளித்தார்.
இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றம், மோதல் பரவி, பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது ஹுசைன் பக்கேரியையும், ராணுவத் தளபதி அசிம் முனிர் மே மாத இறுதியில் சந்தித்தார்.
இரான் அதி உயர் தலைவர் காமனெயியை சந்தித்த பாகிஸ்தான் தூதுக்குழுவில் அசிம் முனிரும் இருந்தார்.
இதுபோன்ற நேரடி சந்திப்புக்காக டிரம்ப் ஒரு வெளிநாட்டு ராணுவத் தலைவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது இதுவே முதல் முறையாக உள்ளது.
2001 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அதிபராகவும் ராணுவத் தளபதியாகவும் இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷரஃப், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்திருந்தார்.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவமோ அல்லது அமெரிக்க அதிகாரிகளோ இந்தச் சந்திப்பு குறித்து எந்தத் தகவலையும் வழங்கவில்லை, கூட்டத்தின் செயல்திட்டம் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரான் தாக்குதலில் சேதமடைந்த இஸ்ரேல் மருத்துவமனைதற்போது எழுந்துள்ள விவாதம் என்ன ?
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
ஜெனரல் முனிரைச் சந்தித்த பிறகு, இரான் பற்றி பேசும்போது அதிபர் டிரம்ப்பின் தொனி சற்று மென்மையாகத் தெரிந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
“அசிம் முனிரின் தெஹ்ரான் பயணத்திலிருந்து பாடம் கற்று, இரானுக்கு எதிரான போரை நோக்கி டிரம்ப் நகராமல் இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்று தெற்காசிய அரசியல் ஆய்வாளர் ர் ஷுஜா நவாஸ், சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
இந்தச் சந்திப்பு, பாகிஸ்தானின் பிம்பத்தை மேம்படுத்தியதாகவும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டும் இந்தியாவின் முயற்சிகளைப் பலவீனப்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
“பாகிஸ்தானை தீவிரவாதத்துடன் இணைக்கும் இந்தியாவின் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்தித்த பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பஹல்காம் தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை அல்லது இந்தியாவின் கவலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. மாறாக, போரைத் தடுத்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்தைப் பாராட்டினார். அவரை (ஜெனரல் முனிர்) சந்தித்ததை நான் ஒரு மரியாதையாகக் கருதுகிறேன் என்று டிரம்ப் கூறினார்” என்று பத்திரிகையாளர் கம்ரான் யூசுப் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் ஏற்படும் போதெல்லாம், பாகிஸ்தானுக்கு அதில் நிச்சயமாக ஏதாவது பங்கு இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் உள்ள நிபுணர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் விவகார நிபுணரும் முன்னாள் ராஜ்ஜீய ஆலோசகருமான விவேக் கட்ஜு இந்த மதிய விருந்தை “அசாதாரணமானது” என்று விவரித்தார்.
தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த விவேக் கட்ஜு, “அமெரிக்கா பாகிஸ்தானுடனான தனது உறவை மேம்படுத்த விரும்புகிறது என்பதும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க விரும்புகிறது என்பதும் தெளிவாகிறது. இந்த ‘அசாதாரண’ மதிய விருந்து, அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏனெனில் பொதுவாக அமெரிக்க அதிபர், ராணுவத் தளபதிக்கு மதிய விருந்தை ஏற்பாடு செய்வதில்லை. பொதுவாக பாதுகாப்பு அமைச்சர் அல்லது ராணுவத்துடன் தொடர்புடைய ஒரு அதிகாரி இதைச் செய்வார்” என்று தெரிவித்தார்.
இரானின் அணுசக்தி திட்டம் குறித்து கட்ஜு கூறுகையில், “இரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை பாகிஸ்தானும் விரும்பவில்லை. இஸ்லாமிய உலகில் இரானின் உதவியை பெறும் சில குழுக்களை தவிர வேறு யாரும் இதை விரும்பவில்லை” என்றார்.
“இந்த மதிய விருந்தின் பின்னணியில் உள்ள அமெரிக்காவின் முயற்சி, இஸ்ரேல்-இரான் போரிலிருந்து பாகிஸ்தானை விலக்கி வைப்பதாகும். அணு ஆயுதங்களை தயாரிப்பதில் இரானுக்கு பாகிஸ்தான் உதவுவதை அமெரிக்கா விரும்பாது” என்கிறார் ஓஆர்எஃப் என்ற சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் மனோஜ் ஜோஷி.
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமநிலையைப் பேணும் பழைய அமெரிக்கக் கொள்கைக்குத் திரும்புவதை, இந்தச் சந்திப்பு குறிக்கலாம். டிரம்ப், இரான் தொடர்பாக ஜெனரல் முனிரிடம் ரகசிய ஒத்துழைப்பை நாடுகிறார் என்றால், அது பாகிஸ்தானின் பழைய தீவிரவாத வலையமைப்பை தவிர்த்து, குறுகிய கால லாபங்களை நாடும் பரிவர்த்தனைச் சிந்தனையப் பிரதிபலிக்கிறது.
இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்தாலும், பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவுகளில் இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதில் பயனில்லை என்ற செய்தியையும் டிரம்ப் அனுப்ப விரும்பக்கூடும்” என்று பாதுகாப்பு நிபுணர் பிரம்மா செலனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு