யாழ் . மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 021 211 7117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலர், நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அனர்த்த காலத்தின் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது. மக்களுக்காக கடமையில் இருக்க வேண்டும். தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உத்தியோகஸ்தர்களுக்கு பணித்தார். அத்துடன், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு கோரினார். அதனை அடுத்து உடனடியாகவே நிதி விடுவிக்கப்பட்டதுமேலும், பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும். மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 021 211 7117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும். அவ் இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் என்றார். அதேவேளை இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் தெரிவிக்கையில், பொதுமக்களிடமிருந்து வடிகால்கள் சீர் செய்ய வேண்டிய கோரிக்கைகள் அதிகம் கிடைக்கப்பெறுவதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் முப்படையினர் உதவி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அனைவரின் பூரண ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட அலுவலர் ஆ. நளாயினி, உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
யாழ் . மாவட்டத்தில் முப்படையினரும் தயார் நிலையில்
5