2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் கோரி வருவதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டில் இலங்கை காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அதே ஆண்டிலேயே அவர் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதுடன், இலங்கை காவற்துறையினர் தன்னைத் தேடி வீட்டிற்குச் சென்றுள்ளதால், மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப நேரிட்டால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் இந்தச் சந்தேகநபரை அநாமதேயமாகவே குறிப்பிட்டுள்ளன. மேலும் அவருடன் அவரது மனைவியும் தஞ்சம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது கோரிக்கைகளை முதலில் அந்நாட்டு உள்துறை அலுவலகம் நிராகரித்த போதிலும், சந்தேகநபர் மீண்டும் அது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. “2022 ஜனவரி 5 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் இலஞ்சம் கொடுத்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி அவர் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் அந்நாட்டு நீதிமன்ற விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பிரித்தானியப் பிரஜைகளும் அடங்குவர். கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரித்தானியப் பிரஜைகளான 42 வயதுடைய அனிதா நிக்கல்சன் மற்றும் அவரது பிள்ளைகளான 14 வயதுடைய அலெக்சாண்டர் மற்றும் 11 வயதுடைய அனபெல் ஆகியோரும் அடங்குவர்.
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார். – Global Tamil News
5