பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தனது வசீகரமான நடிப்பாலும், கம்பீரமான தோற்றத்தாலும், பல தசாப்தங்களாக இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தர்மேந்திரா. நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், காதல் என தான் நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். கடந்த 1935 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா தனது 19 வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், மற்றும் அஜிதா தியோல் என 4 குழந்தைகள். பின்னா் 1980ல் நடிகை ஹேமாமாலினியை திருமணம் செய்துகொண்டார். ஹேமாமாலினி மூலம் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். 1960-ம் ஆண்டு வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தர்மேந்திரா. இவர் நடிப்பில் வெளியான ‘ஷோலே’ படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததனால் இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்தார் சுமார் 60 வருடங்களாக பொலிவுட் திரையுலகில் வலம் வந்தவர் தர்மேந்திரா. அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Ikkis’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர் திரை உலகில் பிரபலமாக உள்ளனா். எதிா்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தனது 90வது பிறந்தநாளை கொண்டாட இருந்த தர்மேந்திரா அதற்குள் காலமானது அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா் – Global Tamil News
3
previous post