கேரளா அருகே மூழ்கிய கப்பலில் இருந்து பரவிய பொருட்களால் தனுஷ்கோடி மீனவர்கள் அச்சம்

படக்குறிப்பு, தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியான அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் கரை ஓரங்களில் சிதறிக் கிடக்கின்றனஎழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த மே 24ஆம் தேதியன்று கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கடல் பகுதியில், விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது.

கேரள கடல் பகுதியில் மூழ்கிய இந்த சரக்குக் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கன்டெய்னர்களில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் பொருட்கள் தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால், கடலில் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட நாள் கண்காணிப்புக்குப் பிறகே, அதன் பாதிப்புகள் குறித்துக் கண்டறியப்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் கரை ஒதுங்கியிருப்பது குறித்து மீனவர்கள் அச்சம் கொள்வது ஏன்?

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் பொருட்கள்

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்து கேரளா மற்றும் கன்னியாகுமரி கடற்கரையில் ஒதுங்கின. கடல் நீரோட்டத்தால் சில பொருட்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி பழைய தேவாலயம், பச்சப்பட்டி, ஒத்ததாளை, இரட்டை தாளை, முகுந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கியுள்ளன. அதில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் உருண்டைகள் (Nurdles) பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய துகள்கள் (பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்) மற்றும் ஓடு நீக்கப்படாத முந்திரிக் கொட்டைகள் கரை ஓரம் சிதறிக் கிடக்கின்றன.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், முந்திரிக் கொட்டைகள் மற்றும் கடற்கரை ஓரம் ஒருசில இடங்களில் செத்துக் கிடக்கும் சிறிய வகை மீன்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

கரை ஒதுங்கிய பொருட்களை சேகரிக்கும் பணி தீவிரம்

படக்குறிப்பு, கேரளாவின் கொச்சியில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கப்பலின் பாதிப்புகள் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரை பதிவாகியுள்ளதுதெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை ஓரமாக கரை ஒதுங்கி சிதறிக் கிடக்கும் ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகளைச் சேகரிக்கும் பணியில், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய மூன்று நகராட்சிகளுக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், மீன்வளத் துறையினர், திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள், வனத்துறை தன்னார்வலர்கள் ஆகியோர் அரிச்சல்முனை முதல் கோதண்டராமர் கோவில் வரை கடற்கரை ஓரமாகக் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“அவர்களுக்கு கையுறை, சேகரிக்கத் தட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் சாக்குப் பைகளில் சேகரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படும்,” என ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் கண்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

பட மூலாதாரம், X/@indiacoastguard

படக்குறிப்பு, கடந்த மே 24ஆம் தேதி கொச்சி கடல் பகுதியில் விபத்துக்குள்ளான சரக்குக் கப்பல்தனுஷ்கோடி பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், நாட்டுப் படகுகள் மற்றும் கரையோர மீனவர்கள் தெற்கு கடல் பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக தெற்கு கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் சிறுதொழில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இலங்கையிலும் கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் சௌத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உள்படப் பல்வேறு கடற்கரையோரப் பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் லட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.

“இதற்கு முன்பு, இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர்கிரீன் கப்பலில் இருந்தும் இதேபோன்ற வடிவமுடைய பொருள் தொடர்ச்சியாகக் கரையொதுங்கியது. அதற்குப் பிறகு, தற்போதுதான் அப்படி நடக்கிறது,” என்று கூறுகிறார் மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் ஆலம்.

அங்கும் கரையோர காவல் படை, கடற்படை, ராணுவம் இணைந்து முதல் கட்டமாக கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்களைச் சேகரித்து வருகின்றனர்.

கடற்கரையோரம் லட்சக்கணக்கில் நுண்ணிய பொருட்கள் கரை ஒதுங்கி வருவதால் இலங்கை மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மீனவர்கள் அச்சம்

படக்குறிப்பு, கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதுபிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கடல் பகுதியில் பரவியுள்ளதால் மீன்பிடித் தடைக் காலம் முடிந்த பிறகு தாங்கள் பிடித்து வரும் மீன்களை மக்கள் வாங்குவார்களா என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் இருப்பதாகக் கூறுகிறார், ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தனுஷ்கோடி பகுதியில் எத்தனை நாட்களுக்குக் கரை ஒதுங்கும், கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் எப்படி தனுஷ்கோடிக்கு வந்தன, அங்கே பிடிக்கப்படும் மீன்களை சாப்பிட்டால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா கோரியுள்ளார்.

பிளாஸ்டிக் மூலப்பொருட்களை சேகரிக்கும் பணியின் நிலை என்ன?

படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன்பிளாஸ்டிக் மூலப்பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் என்றும் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் மூலப்பொருட்களைச் சேகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆட்சியர், “பிளாஸ்டிக் மூலப்பொருட்களைக் கைகளால் தொடுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எனினும், இந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் மீன்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மாநில அரசு தொடர்ந்து இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தற்போதைக்கு, சேகரிக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

கேரளா, கன்னியாகுமரி உள்ளிட்ட கடல் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு அங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்களை என்ன செய்யலாம் என, கடல்சார் விஞ்ஞானிகள் அளிக்கும் ஆய்வறிக்கையில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, தனுஷ்கோடி கடலில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கையாளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பாதிப்புகளைக் கண்டறிவது எப்படி?

படக்குறிப்பு, கடந்த புதன்கிழமை வரை 300 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கடற்கரையில் இருந்து 75 சாக்கு மூட்டைகளில் சேகரிக்கப்பட்டதுகடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து வெளியான பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நீண்ட நாள் கண்காணிப்புக்குப் பிறகுதான் தெரிய வரும் என்கிறார், கேரளா பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியல் மற்றும் மீன்வளத் துறையின் கடல்சார் கண்காணிப்பு ஆய்வகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஏ.பிஜு குமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்திய கடல் பகுதியில் நர்டில்ஸ் பேரழிவு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை. கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை, தனுஷ்கோடி கடல் பகுதியில் அவை கரை ஒதுங்கி வருகின்றன. இந்த நர்டில்ஸ் மிதக்கும் தன்மை உடையவை என்பதால், மீன்கள் சாப்பிட அதிக வாய்ப்புள்ளது. இவற்றை உட்கொள்ளும் மீன்களின் செதில் மற்றும் குடல் பகுதியில் இவை தங்குகின்றன. அந்த மீன்களைச் சாப்பிடும்போது ஏற்படும் தீமைகள் குறித்து முழு கண்காணிப்புக்குப் பிறகு தெரிய வரும். கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் மீது படிந்து சூரிய ஒளி கிடைக்கவிடாமல் தடுப்பதால் அவையும் பாதிக்கப்படலாம்” என்று கூறினார்.

படக்குறிப்பு, இலங்கையில் கரை ஒதுங்கிய கப்பலின் கழிவுகளைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது”பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கரை ஒதுங்கும் கடற்கரை பகுதியை உடனடியாகச் சுத்தம் செய்துவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அவை கடல் மண்ணுடன் கலந்துவிடுதால் சுத்தம் செய்வதில் பல இடர்பாடுகள் உள்ளன. எனவே, பல நாட்களுக்கு இந்த சேகரிப்புப் பணிகளை தொடர வேண்டும். அவை கடற்கரையிலேயே தேங்கிவிட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.” என்று அவர் கூறினார்.

பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் மீன்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த பல கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் ஏ.பிஜு குமார் தெரிவித்தார்.

கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை கண்காணிக்கும் கேரள அரசின் குழுவில் இவரும் அங்கம் வகிக்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிளாஸ்டிக் உருண்டைகள் பற்றி பிஜு குமார் அளித்த விளக்கம்

வெள்ளை நிற பிளாஸ்டிக் துகள்கள் பொதுவாக மைக்ரோபிளாஸ்டிக் வடிவத்தில் இருக்கும் போது நர்டில்ஸ் (Nurdles) என்று அழைக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக இது செயல்படுகிறது.

பிளாஸ்டிக் துகள்கள் முதன்மை நுண் பிளாஸ்டிக்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது, அவை தயாரிக்கப்படுவதே சிறிய அளவுகளில்தான். அவை பொதுவாக 1 முதல் 5 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது.

இவை சிறிய அளவில் இருப்பதும் தண்ணீரில் மிதப்பதும் பார்க்க மீன் முட்டைகளைப் போல் இருப்பதாலும், கடலுக்குள் நுழைந்தவுடன் கண்ணுக்குத் தெரியாத, ஆபத்தான மாசு காரணியாக மாறிவிடுகின்றன.

மைக்ரோபிளாஸ்டிக் நர்டில்கள் முதன்மையாக பாலி எதிலீன், பாலிப்ரொப்பிலீன், பாலிஸ்டிரீன் மற்றும் பாலிவினைல் குளோரைட் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவை பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள் மற்றும் செயற்கை பிசின்களில் இருந்தும் தயாரிக்கப்படும். இந்தப் பொருட்கள் அவற்றின் பல்துறை திறன் மற்றும் பரந்த அளவிலான பிளாஸ்டிக் பொருட்களைச் செயலாக்க எளிதாக இருப்பதால் தேர்வு செய்யப்படுகின்றன.

படக்குறிப்பு, பறவை ஆர்வலர் பைஜுவலசை வரும் பறவைகளுக்கு பாதிப்பா?

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. வெளிநாட்டுப் பறவைகள் தீவுப் பகுதியில் அதிகளவில் வலசை வந்து தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வந்திருந்த நிலையில், வலசைக் காலம் முடிந்து திரும்பிச் சென்றுவிட்டதால், பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார் பறவை ஆர்வலர் பைஜு.

இருப்பினும், “கடலில் கலந்து மிதக்கும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் ‘பளபளப்பாக’ இருப்பதால் உள்ளூர் கடற்பறவைகள் மீன் எனக் கருதிச் சாப்பிட்டுவிடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தீவுப் பகுதிகளில் ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் பைஜு தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு