கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும் கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின. இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? – Global Tamil News
3