திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கிறது.சஜித் பிரேமதாச போன்றவர்களை நம்பி ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதனை நிரூபித்திருக்கிறது.ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட சுமந்திரனை அம்பலப்படுத்தியிருக்கிறது.புத்த பகவான் இலங்கைத் தீவில் எந்த அளவுக்கு அவமதிக்கப்படுகிறார் என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கிறது. உண்மையில் அது ஒரு புத்தர் சிலையில் தொடங்கிய விடயம் அல்ல.அதன் தொடக்கம் ஒரு சட்டவிரோத ரெஸ்ரோரன்ட்.அந்த ரெஸ்ரோரன்ட் அமைந்திருக்கும் காணியை2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகாரைக்கு எழுதிக் கொடுத்தார்.ஆனால் அந்த ஆவணத்தில் ஒரு முக்கிய நிபந்தனை இருந்தது.அந்த காணியில் அவர்கள் எந்தக் கட்டுமானங்களையும் அமைக்கக்கூடாது.கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சட்ட ஏற்பாடுகளின்படி அங்கே கட்டிடங்களைக் கட்டக்கூடாது.ஆனால் அந்த நிபந்தனையை மீறி அங்கே ஒரு ரெஸ்ரோரன்டைக் கட்டுவதற்கு புத்த பிக்குகள் ஒரு தனியாருக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள்.அந்தத் தனியார் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஆகும். அது சட்டவிரோதமான கட்டடம் என்று கூறி சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் போலீசாரின் உதவியுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளுக்கு முன் அவ்வாறு எதிர்ப்பு காட்டப்பட்டதையடுத்து, அங்குள்ள பௌத்த பிக்குகள் அந்த கட்டிடத்தில் பிரதான பகுதி தவிர ஏனைய கட்டுமானங்களை அகற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதைச் செய்ய விரும்பாமல் பிரச்சினையை வேறுபக்கம் திசை திருப்பும் நோக்கத்தோடு அந்தக் காணிக்குள் அறநெறிப் பள்ளி ஒன்றுக்கான அத்திவாரத்தை அமைத்ததோடு புத்தர் சிலை ஒன்றையும் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.அந்த வளவுக்குள் ஏற்கனவே அரச மர நிழலில் ஒரு புத்தர் சிலை பல தசாப்தங்களாக உண்டு. புத்தர் சிலையை அகற்றும் முடிவை முதலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்திருக்கிறது.அதன் விளைவாகத்தான் போலீசார் இரவோடு இரவாக அதனை அகற்றியிருக்கிறார்கள்.மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரியை பிக்குகள் அவமதித்திருக்கிறார்கள்.அங்கே நிலமைகளைக் கொந்தளிக்கச் செய்வதற்கென்று திருகோணமலைக்கு வெளியிலிருந்து மூன்று பிக்குகள் வந்திருக்கிறார்கள் என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். பிக்குகளால் ஓர் உயர் போலீஸ் அதிகாரி அவமதிக்கப்பட்ட பின்னணியில்,மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தவுடன் போலீசார் அந்த சிலையை அகற்றிவிட்டார்கள்.ஆனால் எந்தப் போலீசார் அந்தச் சிலையை முதலில் அகற்றினார்களோ, அதே போலீசார் மேள தாளங்களோடு அந்தச் சிலையை மீண்டும் கொண்டுவந்து,எடுத்த இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். அதாவது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளை விடவும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை விடவும்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட நாடாளுமன்றத்தை விடவும், இலங்கைத் தீவின் பௌத்த மகாசங்கம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைத்தான் அந்தச் சிலை விவகாரம் உணர்த்துகின்றதா?தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் ஆகப்பிந்திய ஆதாரம் அதுவா? அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,புத்தர் சிலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தார்.உலகில்,தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடமாகக் கருதப்படும் ஒரு நாட்டில், புத்தர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டியிருக்கிறது.தமிழ் பகுதிகளில் புத்த கோவில்களின் வாசலில் படையினர் ஆயுதங்களுடன் நிற்கிறார்கள்.அகிம்சா மூர்த்தியான புத்த பகவானை இதைவிட வேறு எப்படியும் அவமதிக்க முடியாது. இங்கே புத்தர் சிலை ஒரு பஃவர்-முன்தடுப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகிய ரவூப் ஹக்கீம் கூறியதுபோல “அரசாங்கம் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நகர்த்துகிறது” தமிழ் மக்கள் எப்பவும் அச்சத்தோடு பார்ப்பது அதைத்தான்.தமிழ்மக்கள் என்றைக்குமே பௌத்தத்தை ஒரு பகை மதமாகப் பார்த்தது கிடையாது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாகப் புத்தர் பார்க்கப்படுகிறார். அறிவுபூர்வமாக பௌத்த மதத்தையும் இந்து மதத்தையும் அணுகும் தரப்புகள் புத்த மதத்தை “சீர்திருத்தவாத இந்து மதம்”-reform Hinduism என்றும் அழைப்பதுண்டு.தமிழ்மக்கள் மதப்பல்வகமைக்கு எதிரானவர்கள் அல்ல.மத மேலாண்மைதான் இங்கு பிரச்சனை. இலங்கைத் தீவின் அரசியல் யாப்பு அவ்வாறு பெரிய மதத்துக்கு-அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்-பெரிய இனத்தைச்சேர்ந்த பெரிய மதத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று அதன் ஒன்பதாவது பிரிவில் கூறியுள்ளது.அது இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தத்தை ஏறக்குறைய அரச மதமாக மேலுயர்த்தியுள்ளது. புத்த பகவான் உலகியல் ஆசைகளைத் துறந்து சன்னியாசி ஆகியவர். நிலையாமையைப் போதித்தவர். ஆனால் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரத்தில் அரசியல்வாதிகள் பௌத்த மதத்தை ஆக்கிரமிப்பின் கருவியாக மாற்றிவிட்டார்கள். இத்தகைய பொருள்படக்கூறின்,இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை என்பதே தீவின் பௌத்தமத சந்நியாசிகளும் அரசியல்வாதிகளும் புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்றத் தவறியதன் விளைவே. புத்த பகவான் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சிபெற்றவர்.ஆனால் இலங்கைத் தீவின் மகா சங்கத்துக்குள்ளையே சாதி அடுக்குகள் உண்டு. அதைவிடக் கொடுமையான விடயம் என்னவென்றால்,பௌத்த பிக்குகள் அணியும் காவி உடையிலும் சாதி உண்டு என்பதுதான். அதாவது சாதி ரீதியாக உயர்ந்த நிலைகளில் இருக்கும் பிரிவுகளைச் சேர்ந்த பிக்குகள் இந்துச் சந்நியாசிகள் அணிவதுபோன்ற காவி உடையை அணிவார்கள்.ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் செங்கட்டி நிறக் காவியை அணிவார்கள். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் பின்னாளில் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார்.அவர் இலங்கைத்தீவின் மகா சங்கத்தினரின் விருந்தாளியாக இங்கு வந்து தங்கியிருந்த காலகட்டத்தில் மகா சங்கத்துக்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கண்டு,மனம் நொந்து நாடு திரும்பினார். காவிக்குள் சாதியை வைத்திருக்கும் சன்னியாசிகள்,அரசியலில் என்ன செய்வார்கள்?புத்தர் சிலையை ஒரு முன்தடுப்பாக,கவசமாகப் பயன்படுத்துவார்கள்தானே? ஆனால் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிர்வாணமாக்கியிருக்கிறது. இந்த அரசாங்கம் தன்னை முன்னைய மேட்டுக்குடி அரசாங்கங்களில் இருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்ட முயற்சிக்கிறது.தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்று அது எப்பொழுதும் கூறிக்கொள்கிறது.முன்னைய அரசாங்கங்கள்தான் தேர்தல் தேவைகளுக்காக இனவாதத்தை கிளப்பின,இனவாதத்தைக் கையாண்டன என்று கூறுகிறது.தனக்கும் இனவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல அது காட்டிக்கொள்கிறது. தமிழ்ப் பகுதிகளில் அதற்குக் கிடைத்த எட்டு ஆசனங்களை வைத்து தமிழ் மக்களின் ஆணை தனக்கு உண்டு என்று கூறிக்கொள்கிறது.ஆனால் திருமலை புத்தர் சிலை இந்த அரசாங்கத்தை நிர்வாணமாக்கியிருக்கிறது. அரசாங்கம் எல்லாவற்றிக்கும் எதிர்கட்சிகளைக் குற்றஞ்சாட்டுகிறது.கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கையில் எடுத்து மீண்டும் தாக்கும் நிலைக்கு முன்னேற முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. திருகோணமலையில் சம்பந்தப்பட்ட காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரெஸ்ரோரன்ட் ஒரு ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தருக்குரியது. எனவே இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் நேரடியாகச் சம்பந்தப்படுகின்றன என்று அரசாங்கம் கூறக்கூடியதாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உணர்ச்சிகரமான ஆதரவைத் திரட்டும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கையில் எடுத்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. கடந்த பல தசாப்த கால இன முரண்பாட்டு அரசியலில், ஆளுங்கட்சி அதன் இனவாதப் பண்பை அடக்கி வாசித்தால் எதிர்க்கட்சிகள் இனவாதத்தை உச்ச நிலைக்கு கொண்டு போவதே இலங்கைத் தீவின் அரசியல் பாரம்பரியம் ஆகும். இப்பொழுதும் அது நடக்கின்றது. ஆனால் அதற்காக,நுகேகொட ஆர்ப்பாட்டத்தில்,வடக்குக் கிழக்கு மக்கள் ஆர்வம் காடடவில்லை என்பதை,தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்ப விரும்பவில்லை என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மாறாக,தமிழ்மக்கள் எதிர்க் கட்சிகளையும் நம்பவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.திருமலைச் சிலை எதிர்க் கட்சிகளை,குறிப்பாக சஜித் பிரேமதாசாவை அம்பலப்படுத்தியிருக்கிறது.ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு கேட்ட சுமந்திரனை அம்பலப்படுத்தியிருக்கிறது.அருண் ஹேமச்சந்திரவை ராஜினாமாச் செய்யுமாறு கேட்கும் சுமந்திரன்,ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரிப்பது என்று தான் எடுத்த முடிவுக்குப் பொறுப்பேற்று இப்பொழுது கட்சிப் பொறுப்புகளைத் துறப்பதற்குத் தயாரா? கடந்த புதன்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்தபோது,இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது தொடர்பாக அவர் தெரிவித்தவற்றை தன்னுடைய “எக்ஸ்” தளத்தில் சுமந்திரன் பதிவிட்டிருந்தார்.அப்பதிவின்படி,ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில்,நிலைமாறு கால நீதியின் கீழ், உருவாக்கப்பட்ட தீர்வு முன்மொழிவின் இடைக்கால வரைபை முழுமைப்படுத்தும் நோக்கம் அவரிடம் இருப்பது தெரிகிறது. 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து நிலைமாறு கால நீதியை ஒரு “தோல்வியடைந்த பரிசோதனை” என்று அவர் சொன்னார்.அந்தத் தோல்விக்கு அவர் இதுவரை பொறுப்பேற்கவில்லை.இப்பொழுது அந்தத் தோல்வியின் விளைவாக வந்த தீர்வு முன்மொழிவை மேசையில் வைக்க வேண்டும் என்று கேட்கிறாரா? சட்டவிரோத கட்டுமானம் ஒன்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திசை திருப்புவதற்காக,இடையில் கொண்டுவரப்பட்ட ஒரு புத்தர் சிலையின் விடயத்தில், இனவாதிகளுக்குப் பணிந்த ஓர் அரசாங்கம்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும்; அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்கும்; ஒரு புதிய யாப்பை குறிப்பாக,தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வை உள்ளடக்கிய யாப்பைக் கொண்டு வரும் என்று எப்படி நம்புவது? குறிப்பாக அந்த யாப்பு பொதுஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இனவாதத்தை கையாள்வதற்கு இந்த அரசாங்கத்தால் முடியும் என்று எப்படி நம்புவது?
புத்தர் சிலை படும்பாடு – நிலாந்தன். – Global Tamil News
5