இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும் , அவர்களை அழைத்து செல்ல காத்திருந்த ஒருவரையுமாக மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் அத்துடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் படகொன்றினையும் , கடத்தல்காரர்களை ஏற்றி செல்வதற்காக தயார் நிலையில் நின்ற மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இந்தியாவில் இருந்து படகொன்றில் 350 கிலோ கேரளா கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்படுவதாக , யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , தடங்காட்டி (GPS) உதவியுடன் , பொலிஸார் யாழ்ப்பாண கரையோர பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர். கஞ்சா கடத்தி வரும் படகினை எதிர்பார்த்து பொலிஸார் காத்திருந்த வேளை படகில் இருவர் மாத்திரமே கரை திரும்பியுள்ளனர். அதனை அடுத்து படகில் வந்த இருவரையும் கைது செய்த பொலிஸார் , அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , படகு கரையொதுங்கிய இடத்திற்கு சற்று தொலைவில் , இருவரையும் அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 130 மில்லி கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட படகு , மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் , கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை . இருவராலும் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் , கடலில் வைத்து வேறு படகுக்கு மாற்றபட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவல் – மூவர் கைது
1