வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்! – Global Tamil...

வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்! – Global Tamil News

by ilankai

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 இடங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையத்தினை நடாத்தி வருமானம் ஈட்டி வருவதாக வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால்  வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது  என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில்  காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் இராணுவத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன். வவுனியாவில்  பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் பரிச்சங்குளம் இராணுவ முகாமிலும், கிளிநொச்சி மாவட்டத்தில்  விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகத்திலும், முல்லைத்தீவில்  முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம்,  அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம் மற்றும் கோப்பாபுலவு  கொண்டமடு வீதி 59 ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு  இராணுவத்தினர்  சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும்  குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts