சட்டக்கல்லூரி விவகாரம் – சிக்கலில் நாமல்

by ilankai

நாமல் ராஜபக்‌ஷ எம்.பி.யின் சட்டக்கல்லூரிக்கான அனுமதி தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி வரும் தகவல்கள் மற்றும் பத்திரிகையாளர் நிர்மலா கன்னங்கர நடத்திய விசாரணையை மேற்கோள்காட்டிய அவர், 2009 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு சேர்வதற்காக நாமல் ராஜபக்‌ஷ லண்டன் சிட்டி யுனிவர்சிட்டி பட்டம் தேவையான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டார்.விசாரணையின்படி, நாமல் ராஜபக்‌ஷ 2009 செப்டம்பர் 25 அன்று தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தும் அதே நாளில் சேர்க்கை பெற்றும் உள்ளார். வெளிநாட்டு கல்வித் தகுதிகள் உண்மை தன்மையைச் சரிபார்க்க வேண்டியதால், இந்த செயல்முறைக்கு பொதுவாக அதிக நேரம் தேவைப்படும்.கன்னங்கரவின் விசாரணையின் பிரகாரம், நாமல் ராஜபக்‌ஷ தனது சட்டப் பரீட்சைகளை தனிப்பட்ட வகுப்பறையில் எழுதியுள்ளார், மேலும் அவர் சமர்ப்பித்த சிட்டி யுனிவர்சிட்டி பட்டத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு சட்டப் பட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாணவர்கள், அடுத்த சேர்க்கை சுற்றில் பதிவு செய்யப்படுவதற்கு முன் கடுமையான சரிபார்ப்பு செயல்முறையை எதிர்கொள்வார்கள் என்று சட்டக் கல்லூரி ஆதாரங்கள் பத்திரிகையாளருக்கு தெரிவித்துள்ளனர்.இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவதால், சேர்க்கை நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன என அமைச்சர்  குறிப்பிட்டார். இவ்விவகாரம் குறித்து நாமல் ராஜபக்‌ஷ தெளிவான விளக்கம் வழங்குவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts