யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 1220 பேர் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் டெங்கு நோய் காரணமாக யாழ் மாவட்டத்தில் எந்த ஒரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதத்தில் 73 நோயாளர்களும், ஒக்ரோபர் மாதத்தில் 127 நோயாளர்களும நவம்பர் மாதத்தின் இன்று வரையான காலப்பகுதியில் 130 நோயாளர்களும் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வருடம் இரண்டு மடங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகள் நுளம்புக் குடம்பிகளினதும், நிறையுடலிகளினதும் செறிவு அதிகரித்து செல்வதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே இந்த சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் அவசியமாகின்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும், பொதுஇடங்களிலும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும். உங்கள் வீடுகளிலும் வீட்டுச்சுற்றாடலிலும் உள்ள நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய கொள்கலன்களை சேகரித்து உள்ளூராட்சி மன்றங்களின் கழிவகற்றல் வாகனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் பொதுமக்களிடமிருந்து கொள்கலன்களை சேகரிக்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தமது வீடுகளில் நீர் சேகரித்து வைக்கும் பிளாஸ்ரிக் வாளிகளையும் தண்ணீர் தொட்டிகளையும் அடிக்கடி நீரை மாற்றுவதுடன் உட்புற சுவர்களை உரஞ்சி துப்பரவு செய்ய வேண்டும். நீர் சேகரித்து வைக்கும் கொள்கலன்களை நுளம்புகள் முட்டையிடாதவாறு மூடிவைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை உங்கள் வீட்டு சுற்றாடலை சுற்றி பார்வையிட்டு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை அழிக்க வேண்டும்.இக்காலப்பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டால் பூரண ஓய்வில் இருக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும் போது பரசிற்றமோல் வில்லைகளை உட்கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக தகுந்த வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது யாழ் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா, டெங்கு ஆகிய நோய்களின் பரம்பல் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் காய்ச்சல் ஏற்பட்டால் தகுந்த மருத்துவ ஆலோசனையை உரிய நேரத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு
5
previous post