இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை கடற்படையினர் கைது செய்து , நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை,தம் மீதான குற்றச்சாட்டுகளை தமிழக கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்தது மன்று, அத்துடன் படகில் இருந்த 28 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு மன்று ஒத்திவைத்தது. அத்துடன் படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. 10 வருட கால பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் , கைது செய்யப்படும் கால பகுதியில் விதிக்கப்படும் தண்டணையுடன் , 18 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரையும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் ஊடாக மீரிகம முகாமிற்கு மாற்றப்பட்டு , அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – Global Tamil News
12