முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம்: தமிழ் தேசியத்திற்கு சாவு மணியா? Dr முரளி வல்லிபுரநாதன்.....

முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம்: தமிழ் தேசியத்திற்கு சாவு மணியா? Dr முரளி வல்லிபுரநாதன்.. – Global Tamil News

by ilankai

முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் பிரவேசிப்பது, “தமிழ் அரசியல் சாக்கடையைப் பூக்கடை ஆக்குவேன்” என்ற அறிவிப்பு, தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும் முதல் முறையாகத் தென் பகுதியைச் சேர்ந்த  தேசிய மக்கள் சக்தி (NPP) அதிக வாக்குகளையும், பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களையும்  கொண்டிருப்பது தமிழ் தேசிய கட்சிகளுக்குப் பாதகமான சூழலை அதிகரித்துள்ளது. இந்த அபாயகரமான சூழ்நிலையில் எதிர்காலத்தில் தமிழர்களின் நியாயமான உரிமைகளை பெறும் நோக்குடன்  இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது. 📉 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் பின்னடைவு வடக்கு மாகாணத்தில் உள்ள தேர்தல் மாவட்டங்களின் ஆகப்பிந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதைக் காட்டுகிறது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள்  (2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல்) # Party/Independent Group Name Party Abbreviation Votes Obtained Percentage Members 1 Jathika Jana Balawegaya NPP 80,830 24.85 % 3 2 Ilankai Thamil Arasu Kadchi ITAK 63,327 19.47 % 1 3 All Ceylon Tamil Congress ACTC 27,986 8.60 % 1 4 Independent Group 17 IND17-10 27,855 8.56 % 1 5 Democratic Tamil National Alliance DTNA 22,513 6.92 % 6 Eelam People’s Democratic Party EPDP 17,730 5.45 % 7 Samagi Jana Balawegaya SJB 15,276 4.70 % வன்னி தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள் (2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல்) Party Name Party Abbreviation Votes Received Percentage District Seats Won Jathika Jana Balawegaya NPP 39,894 20.37% 2 Samagi Jana Balawegaya SJB 32,232 16.45% 1 Ilankai Thamil Arasu Kadchi ITAK 29,711 15.17% 1 Democratic Tamil National Alliance DTNA 21,102 10.77% 1 Sri Lanka Labour Party SLLP 17,710 9.04% 1 Democratic National Alliance DNA 9,943 5.08% All Ceylon Tamil Congress ACTC 7,492 3.82% Independent Group 7 IND07 7,484 3.82% வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது. 📉 தமிழ் கட்சிகளின் தோல்விக்கான காரணங்கள் தமிழ் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட தொடர் ஏமாற்றங்கள் காரணமாகவே அவை தேர்தலில்  பின்னடைவைச் சந்தித்தன. இந்த எதிர்மறையான காரணிகளில் 2024 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த ஏமாற்றங்களுக்கு பின்வரும் காரணங்களை கூற முடியும். 1.     அதிகாரப் பரவலாக்கம், போர்க் குற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற பிரச்சினைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்படாத நிலை. பல தசாப்தங்களாகக் தமிழ் தேசியக் கட்சிகள் வெறும் வாய் கிழியக் கத்துவதோடு ஜெனிவாவுக்கு “ஓசிக்காசில்” போய் பக்க அமர்வுகளில் பங்கெடுப்பதுடன் நிறுத்திக்கொள்வது. 2.      உட்கட்சி மற்றும் கட்சிகளின் மோதல்: கொள்கை ரீதியான பிரசாரங்களைத் தவிர்த்து, தனிநபர்  மீது சேறு பூசுவதற்கே முக்கியத்துவம் அளித்தல். தமிழர்களின் உரிமைகளை மறுத்த சிங்கள பௌத்த கட்சிகளுடன் மோத வேண்டிய வாட்கள் தமிழ் தேசிய உறையினுள் தமக்குள் தாமே மோதிக்கொண்டது. 3.      வெற்றுச் சொல்லாக தமிழ் தேசியம்: தமிழ் தேசியக் கட்சிகள் எவற்றுக்கும் தமிழர்களின்  பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஈழத்தில் தமிழினத்தைத் தக்க வைப்பது, ஏழைகள் மற்றும் ஊறுபடும் நிலையில் இருப்போரைப் பாதுகாக்கும் எந்தவொரு செயல்திட்டமும் இருக்கவில்லை. 🚀 தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குரிய காரணங்கள் வடக்கு மாகாணத்திலும் நாட்டிலும் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றதற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1.     ஊழலுக்கு எதிரான நம்பிக்கை: நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும்   75 வருட காலமாக புரையோடிப்போய் உள்ள ஊழலே காரணம் என்றும், “அதை NPPயாலேயே ஒழிக்க முடியும்” என்ற மக்களின் நம்பிக்கை பெரும் அலையாக உருவானது. 2.     மாற்றத்தை விரும்பிய மக்கள்: மாறி மாறி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அவற்றிலிருந்து உருவான கட்சிகளுக்கும் வாக்களித்து ஏமாற்றம் அடைந்த தமிழ் பேசும் மக்கள், ஒரு மாற்றத்தை வேண்டியிருந்தனர். மட்டக்களப்பில் NPP ஏன் தோற்றது? மட்டக்களப்பில் NPP பிரபலமற்ற, மலையகத்தை சேர்ந்த ஒருவரது ஆலோசனையை கேட்டு, உள்ளுரில் பிரபலமானவர்கள், NPP யில் போட்டியிடவந்த முன்வந்தவர்கள் மகளீர் அமைப்புகளை சேர்ந்தவர்களை புறம்தள்ளி, தமக்கு வேண்டியவர்களை, அதாவது  “மட்டக்களப்பான்” அல்லாத பிரபலம் அற்றவர்களை நிறுத்தியது தமிழரசுக் கட்சியை இலகுவாக வெற்றி பெற வைத்தது. உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தமிழ் தேசியத்துக்கு வெற்றியா ? உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் பெற்றிருந்த நிலைக்கும், மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் காரணம், NPPக்கு அடிமட்டத்தில் வேலை செய்யக்கூடிய பிரபல வேட்பாளர்கள் இல்லாமையே ஒழிய, தமிழ் தேசியக் கட்சிகள் மக்களிடம் பாவமன்னிப்பை பெறவில்லை  என்பதே உண்மை. தற்போதைய கள  நிலவரம்  தோட்டத் தொழிலாளர் ஆதரவு: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை NPP அதிகரித்தது, அவர்களின் ஏகோபித்த ஆதரவை NPPக்கு வழங்கியுள்ளது. இது வட பகுதியில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குகளையும் எதிர்வரும் தேர்தலில் NPP பெறக்கூடிய  ஏதுநிலையை உருவாக்கியுள்ளது. மன்னார் காற்றாலை மற்றும் சில பிரச்சினைகளில் NPP தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றாலும், முன்னைய ஆட்சியாளர்களை விட NPP மேலானது என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர். ⚖️ இளஞ்செழியனின் அரசியல் பிரவேசத்தின் சாதக பாதக காரணிகள் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் ஈடுபடுவதற்கான சாதகமான மற்றும் பாதகமான காரணிகளை அவர் அல்லது அவரை பதவிக்கு கொண்டுவர நினைப்போர் ஆராய்வது, அவரது வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிக்க உதவும். ✅ சாதகமான காரணிகள் ·        ஊழலுக்கு அப்பாற்பட்ட பிம்பம்: அவர் முன்னாள் நீதிபதியாக இருந்தமையும், அவரது துணிகரமான தீர்ப்புகளும், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்ற அவரது பிம்பமும் தமிழ் கட்சிகளில் ஏமாற்றம் அடைந்துள்ள தமிழ் மக்களை வாக்களிக்கத் தூண்டும். ·        சட்ட அறிவு: சட்டத்துறையைச் சேர்ந்தவராக இருப்பதால், 13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களில் அவருக்குப் போதிய அறிவும் திறமையும் இருப்பதாக வாக்காளர்கள் கருதுவார்கள். ❌ பாதகமான காரணிகள் 1.     கட்சி/அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவின்மை: கட்சி அல்லது அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது முதன்மையான பின்னடைவுக்குரிய காரணியாகக் கருதலாம். தமிழரசுக் கட்சியின் தீவகப் பிரதேசவாதிகளின் ஆதரவைத் தவிர வேறு ஒரு கட்சியோ அல்லது அமைப்புகளோ அவருக்குத் துணையாக இருப்பதாகத் தெரியவில்லை. 2.     தலைமைத்துவப் பின்னடைவுகள்: இளஞ்செழியன் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவராக அறியப்பட்டிருப்பதும், நிர்வாகப் பொறுப்பில் அனுபவம் இன்மையும் அவரது தலைமைத்துவத்துக்குப் பின்னடைவாக அமையக்கூடும்.  உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வு தரவில்லை என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்து இருப்பது அவர் மீது தமிழ் மக்களின் அனுதாபத்தை ஏற்படுத்திய போதும், அந்தப் பதவி உயர்வு  கிடைத்து இருந்தால்  முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு இருக்கமாட்டார் என்பது அவரது அரசியல் கொள்கை மீதான மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று அவர் அறிவித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. 3.     தீர்வு குறித்த திட்டமின்மை: இளஞ்செழியன் “பூக்கடை – சாக்கடைகள்“ என்ற சொற்பதங்களுக்கு அப்பால், தமிழருக்கு எத்தகைய தீர்வைப் பெற்றுத்தர முயல்கிறார், மற்றும் தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைக்க அவரது பொருளாதார மற்றும் சமூக நலத் திட்டம் என்ன என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. 4.     முதல் கோணல் – இந்திய நிகழ்ச்சி நிரல்: கடந்த காலத்தில் நீதிபதியாக இருந்தபோது, அரசாங்கத்தின் அனுமதியின்றி அப்போதைய ஆளுநர் சுரேன் இராகவனுடன் இந்திய அதிகாரிகளைச் சந்தித்தது அவரது முதலாவது அரசியல் நகர்வாக இருந்தது. இந்தச் செயல், அவர் இந்திய நிகழ்ச்சி நிரலின் பங்காளராகச் செயல்படக் கூடியவர் என்ற பிம்பத்தினைக் கட்டமைத்துள்ளது. இதுகுறித்துப் ‘பதவியில் உள்ள நீதிபதி சட்டத்தை மீறிச் செயல்படுவதாக’ அக் காலப்பகுதியில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோ கண்டனம்  தெரிவித்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. மேலும் ‘சுரேன் இராகவன் சிங்கள பௌத்தக் குடியேற்றங்களை வடக்கில் ஊக்குவித்து வந்தவர்’ என்ற அபிப்பிராயம் நிலவும்போது, அவருடன் இணைந்து செயற்பட்டது மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது 5.     தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு: சுமந்திரனை வீழ்த்துவதற்கு இளஞ்செழியனை தீவகப் பிரதேசவாதத்துடன் பகடைக் காயாக இறக்குவது, தமிழரசுக் கட்சியை மேலும் பலவீனப்படுத்துவதுடன், அது மேலும் பிளவடையும் நிலையை ஏற்படுத்தலாம் எனத் தமிழரசுக் கட்சித் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக இறக்குமதி செய்ததால் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சேதங்களே அவர்களைச் சூடு கண்ட பூனைகளின் நிலைக்குத் தள்ளியுள்ளது. 6.     ஆயுதக் குழுக்களின் ஆதரவு: கடந்த காலங்களில் கொலைகள், கடத்தல், சித்திரவதை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு மன்னிப்பு கோராத  ஆயுதக் குழுக்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பது முன்னாள் நீதிபதிக்குப் பொருத்தமான செயலாக இருக்காது. ➡️ முதலமைச்சர் ஆவதற்கு விரும்பும் இளஞ்செழியன்  அல்லது வேறு எவராக  இருந்தாலும்  செய்ய வேண்டியவை ·        பரந்துபட்ட கூட்டமைப்பு: தீவகப் பிரதேசவாதம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கு அப்பால், பரந்துபட்ட தமிழ் தேசியத்துக்கு ஆதரவான பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பை  உருவாக்க வேண்டும். ·        தமிழ் காங்கிரசின் ஆதரவு: முக்கியமாகத் தமிழ் தேசியக் கட்சிகளில் இரண்டாம் நிலையில் உள்ள  தமிழ் காங்கிரசின் ஆதரவு, ஒரு கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கும். வெறும் மேடைகளில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் புகழ்ந்து தமிழ் காங்கிரசின் ஆதரவை இளஞ்செழியன் பெற முடியாது. ஏற்கெனவே விக்னேஸ்வரன் விவகாரத்தால் ஏற்பட்ட பின்னடைவுகள் புத்திசாலியான கஜேந்திரகுமாருக்கு முன்னெச்சரிக்கையை வழங்கியிருக்கும். ·        நிலைப்பாட்டை வெளிப்படுத்துதல்: இந்தியா, மாகாண சபையே தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு என்று  வலியுறுத்தி வரும் நிலையில், இளஞ்செழியன் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைய அரசியலில் இறங்கியுள்ளார்  என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஏனைய முதலமைச்சர் வேட்பாளர்களுக்கும் இனப் பிரச்சினை தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது ·        பொருளாதார, சமூக நலத் திட்டம்: தமிழர்களின் இருப்பைத் தக்க வைப்பதற்கான பொருளாதார, சமூக நலச் செயல்திட்டங்களையும் முதலமைச்சர் வேட்பாளர் வெளிப்படையாக அறிவித்தால்  தமிழ் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் நிலை ஏற்படும். இவற்றைச் செய்யாமல், வெறும் சுமந்திரனை விழுத்தும் சதி முயற்சியின் அங்கமாக முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை, அல்லது எவராவது சுயேச்சைக் குழுவின் தலைவரை  வட மாகாண முதலமைச்சர் ஆக்குவதுடன், தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குச் சாவு மணியை அடிக்கும். அதுவே இந்தியாவின் இறுதி விருப்பமும் கூட. தமிழர்கள், முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தனது திட்டங்களை உரியகாலத்தில் அறிவிப்பார் என்றும், உரிமைப் போராட்டங்களுக்குச் சாவுமணி அடிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த மாட்டார் என்றும் நம்புகிறார்கள் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன், 15.11.2025

Related Posts