Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘வெளியே கூட்ட நெரிசல், உள்ளே ஆர்சிபிக்கு பாராட்டு விழா’ – கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எழுதியவர், இம்ரான் குரைஷி பதவி, பிபிசி இந்தி 58 நிமிடங்களுக்கு முன்னர்
பெங்களூருவில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆர் சி பி அணியின் வெற்றிக் கொண்டாடத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் பங்கேற்றவர்களில் சிலர் ரசிகர்கள், சிலர் ஒரு குதூகலத்துக்காக சென்றிருந்தவர்கள். ரசிகர்கள், ரசிகர்கள் அல்லாதவர்கள் – இரு தரப்பினருமே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர். ஒரு சந்தோசமான தருணமாக இருந்திருக்க வேண்டியது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் மிகவும் துயர் மிகுந்ததாக மாறிவிட்டது.
ஷாமிலி என்ற இளம்பெண், தனது சகோதரி மற்றும் நண்பர்கள் உடன் வெற்றிக் கொண்டாட்டத்தை காண சென்றிருந்தார். “நான் கிரிக்கெட் ரசிகை அல்ல, நிகழ்வை காணும் ஆர்வத்தில் சென்றேன்”. ஆனால் அவர் பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.
“கூட்டம் அதிகரித்த போது, கிளம்பிவிடலாம் என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். கூட்டத்தில் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டே இருந்தனர். திடீரென நான் தரையில் விழுந்திருப்பதை உணர்ந்தேன். கூட்டத்தில் மிதிபட்டேன். நான் சாகப் போகிறேன் என்றே நினைத்தேன்” என்று மருத்துவமனையில் இருந்த அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
30 ஆயிரம் பேர் கூட வேண்டிய இடத்தில் லட்சம் பேர்
ஆர் சி பி அணியினர் சின்னசாமி மைதானத்தை சுற்றி வந்து, பிறகு மீண்டும் வந்து மைதானத்துக்குள் நுழைவதை பார்ப்பதற்காக பலரும் கூடியிருந்தனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சின்னசாமி மைதானத்தில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரை இருக்கலாம். ஒரு லட்சம் பேர் வரை மக்கள் கூட்டம் வரலாம் என்று போலீஸார் கணித்திருந்தினர். ஆனால் இரண்டு அல்லது மூன்று லட்சம் பேர் கூட வந்திருக்கலாம் என்று போலீஸார் கணிக்கின்றனர். எனினும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இரண்டு லட்சம் பேர் கூடியிருந்ததாக தெரிவித்தார்.
சின்னசாமி மைதானத்துக்கு அருகிலும், அதற்கு முன்பாக கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலோட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்ற விதான் சவுதாவுக்கு அருகிலும் கூடியிருந்தவர்கள் “ஆக்ரோஷமாக” நடந்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு அருகில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய நபருக்கு காவல் துறையினர் உதவுகின்றனர். ஷாமிலிக்கு மிதிபட்டதில் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். “பிறகு நான் மயங்கிவிட்டேன். அருகில் இருந்தவர்கள் என் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். பின்னர் நான் எழுந்து, மைதானத்தில் ஆறாம் எண் வாயிலுக்கு அருகில் இருந்த நடைபாதையில் அமர்ந்தேன். ஆனால் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது” என்றார்.
“கூட்ட நெரிசலில் இருந்தவர்கள் தான் என்னை எழுப்பி நடைபாதையில் அமர வைத்தனர். மக்கள் பித்துப்பிடித்தது போல் நடந்து கொண்டனர்” என்றார்.
வயிற்று வலி காரணமாக இரவு உணவை சாப்பிடாத அவர், “ஸ்கேன் செய்த மருத்துவர்கள் இது தசை வலி மட்டுமே, பயப்பட ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்” என்றார். அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
தப்பியோட முயன்ற போது தடியடி
பொறியியல் படிப்பை முடிக்கவுள்ள இளைஞர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “நான் நின்று கொண்டு கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு உள்ளே செல்ல டிக்கெட் எதுவும் கிடையாது, எனவே உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. திடீரென மக்கள் எல்லா பக்கமும் ஓட ஆரம்பித்தனர். மக்கள் மீது போலீசார் தடியடி நடத்த தொடங்கினர். அவர்கள் தரையிலோ அல்லது கால்களிலோ அடிக்கவில்லை. ஒருவர் தலையில் அடி வாங்கினார். இது மைதானத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் நடைபெற்றது” என்று பிபிசியிடம் ஹனீஃப் முகமது தெரிவித்தார்.
ஹனீஃப் தப்பியோட முயன்ற போதும் போலீஸ் லத்தியால் அவருக்கு தலையில் அடி விழுந்தது. “எனக்கு ரத்தம் வழிந்துக் கொண்டிருப்பதை போலீஸாரிடம் காட்டிய போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவர்கள் இது வெளிக்காயம் மட்டுமே என்று கூறியுள்ளனர், எனினும் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.” என்று விஜயபுராவை சேர்ந்த அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஹனீஃபை போலவே, வெற்றிக் கொண்டாட்டத்தை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்தவர் மனோஜ். அவர் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கூட்டம் அதிகரித்து, தள்ளுமுள்ளு தொடங்கிய போது மைதானத்தின் வாயில் அருகே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு அவரது கால் மீது விழுந்தது.
“நான் தடுப்புகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். கூட்ட நெரிசலில் அது எனது வலது கால் மீது விழுந்தது” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இவை காயமடைந்த இளைஞர்கள் சிலரது அனுபவங்கள். எனினும் உயிரிழந்த 11 பேர் எந்த சூழலில் சிக்கியிருந்தனர் என்பது தெரியவில்லை.
“உயிரிழந்தவர்களில் மிகவும் இளையவர் 13 வயது சிறுவர். குழந்தைகள் அந்தக் கூட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தனர் என்று தெரியவில்லை” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் கூறினார். மருத்துவமனையில் உயிரிழந்த மற்றவர்கள் 17, 20, 25, 27 மற்றும் 33 வயதிலானவர்கள்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உயிரிழந்தவர்களை அடையாளம் காண இயலவில்லை
உயிரிழந்தவர்களில் ஒரு இளம் பெண் தவிர மற்றவர்களின் குடும்பத்தினரையும் காவல்துறையினரால் அணுக முடியவில்லை. “இவர்களில் யாரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அல்லது தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்தவர்கள்” என்று மருத்துவமனையில் இருந்த காவலர் ஒருவர் தெரிவித்தார். “ஒருவரின் உறவினர்களை கூட கண்டறிய முடியவில்லை. அவர்கள் தொலைபேசிகள் காணாமல் போகியுள்ளன.” என்றார்.
இறந்தவர்களில் பலரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே உயிரிழந்திருந்தனர். நெஞ்சுப் பகுதியில் உள்ள எலும்புகள் முறிந்ததன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் இறந்திருந்தனர். கூட்ட நெரிசல் ஆம்புலன்ஸ் உள்ளே நுழைவதற்கும் தடையாக இருந்தது.
சின்னசாமி மைதானத்துக்கு வெளியே கூச்சலும் குழப்பமும் நிலவி வந்த வேளையில், பரபரப்பான அந்த பகுதியில் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்த வேளையில் ஆர் சி பி அணியினர் பாராட்டு நிகழ்வுக்காக மைதானத்துக்கு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
“ஆர் சி பி அணியினர் மைதானத்தைச் சுற்றி வெற்றி பேரணி சென்றனர். வெளியில் நடைபெற்ற குழப்பம் குறித்த எந்த அறிகுறியும் மைதானத்துக்கு உள்ளே தெரியவில்லை” என்று பெயர் குறிப்பிட விரும்பாத இளைஞர் ஒருவர் கூறினார்.
காயமடைந்தவர்களின் உறவினர் ஒருவர், “இது போன்ற பாராட்டு விழாக்கள் பொதுவாக மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். ஆனால் இந்த நிகழ்வில் அப்படியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது” என்று கூறினார்.
“சந்தோசமான தருணம் சோகமானதாக மாறியுள்ளது” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு