வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல – Global Tamil News

வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல – Global Tamil News

by ilankai

வருகைப் பதிவேடு வடக்கு மாகாண சுகாதார  பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்திற்குட்பட வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் தாதியர்களின் 24 மணி நேர பகிஸ்கரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 55 பிரதேச வைத்தியசாலைகளிலும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 20க்குஉட்பட்டதாக இருக்கின்றது. ஆரம்ப மருத்துவ சுகாதாரப் பிரிவுகளிலும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே இருக்கின்றது. எங்களுடைய வைத்தியசாலை மேற்பார்வை பரிசோதனைகளின் போது இந்த வைத்தியசாலைகளிலே நான்கு, ஐந்து அல்லது ஆறு வரவு பதிவேடுகள் பேணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. குறிப்பாக தாதிய உத்தியோத்தர்களுக்கு தனியாக  ஒரு பதிவேடும் குடும்ப நல  உத்தியோகத்தர்களுக்கு தனியாகவும் மருந்து கலவையாளர்கள், சாரதிகள், சிற்றுழியர்களுக்கு என பல வைத்தியசாலைகளிலும் நான்கு, ஐந்து , ஆறு வரவு பதிவேடுகள் பேணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதனால் பல வைத்தியசாலைகளில் ஊழியர்களின் வரவை உரிய நேரத்திலே அவர்கள் வருவதை ஒழுங்கமைப்பதிலே பல சிரமங்களை எதிர்நோக்கக் கூடியதாக இருந்தது. பல வைத்தியசாலைகளில் ஊழியர்கள் தாமதமாக வந்து முன்னே ஒரு நேரத்தை பதிவிடுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. பணியாளர்கள் கடமை நேரத்தில் அங்கே வைத்தியசாலைகளை இல்லாமையும் வைத்தியசாலை மேற்பார்வை நேரத்திலே இனம் காணக்கூடியதாக இருந்தது. அவர்களது களப்பரிசோதனைகளின் போதும் அவர்கள் அவதானித்தை சீர் செய்யுமாறு எமக்கு அறிக்கை விட்டிருக்கின்றார்கள். இந்த விடயம் சம்பந்தமாக  எங்களுடைய கணக்காய்வு கூட்டங்களின் போதும் மேற்பார்வை கூட்டங்களின் போதும் பலமுறை எங்களுக்கு சுட்டி காட்டி இருக்கின்றார்கள். இந்த வரவு பதிவேடு முறையினை சீர் செய்கின்ற ஒரு நோக்கோடு வடமாகண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அண்மையிலே ஒரு சுற்றறிக்கை ஒன்றை வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அனுப்பி இருந்தார். ஐம்பதுக்கு குறைவான மொத்த பணியாளர்கள் உள்ள வைத்தியசாலைகளிலே ஒரே ஒரு வரவு பதிவேட்டை பேணுமாறும் அதிலிருந்து சுற்றறிக்கை அறிவுறுத்தி இருந்தார். மேலதிக நேரங்களில் பணியாற்றும் போது இதுக்கு மேலதிகமாக அவர்கள் தனியான பதிவேடுகளை பேணலாம் என அறிவுறுத்தி இருந்தார். ஆனால் பல சில தொழிற்சங்கங்கள் இந்த சுற்றிக்கையை தாங்கள் பின்பற்ற முடியாது என்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த விடயம் சம்பந்தமாக பல மட்டங்களிலும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் சில காரணங்களை வெளியிட்டு இருந்தார்கள். முதலாவதாக அவர்கள் குறிப்பிட்டது பல்வேறு தரங்களை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் ஒரே வரவு பதிவேடுகளிலே  தங்களுடைய வரவை பதிவிடுவதன் மூலம் தங்களுடைய கௌரவம் பாதிக்கப்படுவதாக அதிலே குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மாகாண, பிராந்திய அலுவலகங்களில் இதே முறைமையே காணப்படுகின்றது. எங்கள் பணிமனைகளிலே கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் போன்ற பதவி நிலை உத்தியோதர் முதல் சிற்றுழியர்கள் வரை அனைவருமே ஒரே ஒரு வரவு பதிவேடுகளில் தான் தங்களுடைய வரவை பதிவு செய்கின்றார்கள். இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டதில் பணியாளர்களை கஷ்டப்படுத்துவதோ அல்லது அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது நோக்கம் அல்ல. ஒரே ஒரு நோக்கம். தம்முடைய பணியை உரிய நேரத்திலே செய்ய அவர்கள் கடமைக்கு சமூக தரவேண்டும். காலையிலே எட்டு மணி தொடங்கி 4 மணி வரை தங்களுடைய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அந்த சேவை பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் உரிய நேரத்திலே கிடைக்க வேண்டும். சேவைகளை மேம்படுத்தி சீராக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு மட்டும் தான் இந்த சுற்றறிக்கை விடப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவது அல்லது கஷ்டமான சூழ்நிலைக்கு உள்ளாக்குவது இல்லை என்பதை நாங்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் – என்றார்.

Related Posts