கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்தனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடைய காரினை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு , பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர். சந்தேகநபர்கள் காரினை வாடகைக்கு பெற்றே வடக்கு நோக்கி தப்பி சென்றதை அறிந்த பொலிஸார் , காரினை வாடகைக்கு கொடுத்த நிறுவனத்தினை கண்டறிந்து , அவர்களிடம் இருந்து கார் தொடர்பிலான தகவல்களை பெற்று இருந்தனர் அதன் அடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த தடங்காட்டியின் (GPS) உதவியுடன் காரினை கண்காணித்த வேளை கார் , மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பினை சேர்ந்த பொலிஸ் குழு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் , காரினை மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர். அதனை அடுத்து காரினை மீட்ட பொலிஸார் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன் அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயினையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று இருந்தனர். வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில் காரில் குளிரூட்டி (AC) வேலை செய்யவில்லை என அதனை திருத்தம் செய்யவே காரினை கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , காரினை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதனை போலீசார் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர். அதேவேளை காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர். காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும் , கைது செய்யப்பட்ட பெண் , கைது செய்யப்பட்ட ஆணொருவரின் காதலி எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கொழும்பில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொலிஸ் விசேட குழு , கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ; கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்
7
previous post