நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நான்கு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர். கைதான குறித்த நான்கு பேரும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படும் குறித்த பகுதி சில வருடங்களுக்கு முன்பு பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பகுதி என கடற்படையினரால் பதாகை போடப்பட்டு சர்ச்சை எழுந்த நிலையில் அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது.
நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது – Global Tamil News
4