Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய பேரவையின் பங்காளிக் கட்சிகள் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது என தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் பொன்.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழில். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்த்தேசிய பேரவையினுடைய உறுப்பினர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்த்தேசிய பேரவையினர் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தோம்.
இந்தக் கலந்துரையாடலின் போது தமிழ்த்தேசிய பேரவையினுடைய தலைவர்கள் அனைவரும் கலந்துரையாடிய உறுப்பினர்களும் ஏகமனதாக ஒரு முடிவை மேற்கொண்டிருந்தோம்.
அதில் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு நாங்கள் மதிப்பளிக்கின்ற விதமாகவும் உள்ளூராட்சி சபைகள் கடந்த காலங்களைப் போன்று பாதீடுகளில் ஒருவருக்கொருவர் காலை வாருகின்ற போன்ற எதிர்த்து வாக்களித்து தோல்வியடைந்தது மாதிரியான செயற்பாடுகள் வரக்கூடாது,
மக்களுக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பன போன்ற பல விடயங்களைக் கருத்தில் கொண்டு எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக தனித்து ஆட்சியமைக்க முடியாத ஒரு நிலையில் இயன்ற வரைக்கும் நிலையான ஒரு ஆட்சியை எங்களுடைய தமிழர் தாயகத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நாங்கள் சில முடிவுகளை எட்டியுள்ளோம்.
அந்த முடிவுகளின் படி உள்ளூராட்சி மன்றங்களின் எந்தக்கட்சி ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளதே அந்தக் கட்சிக்கு தமிழ் தேசிய பேரவை தனது ஆதரவை வழங்கி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்கும்.
எந்தக் கட்சிகளென்று நான் இங்கு குறிப்பிடுவது தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சிகளுக்கு மாத்திரம் தான் பொருந்தும். இது அரசு சார்புக் கட்சிகளோ அல்லது அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற கட்சிகளோ எங்களுடைய இந்த வரையறைக்குள் அடக்கப்பட மாட்டாது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் அது யாழ்.மாநகரசபையாக இருக்கலாம், நகரசபைகளாக இருக்கலாம்,பிரதேசசபைகளாக இருக்கலாம். இங்கே ஆகக்கூடுலான ஆசனங்களைப் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளுக்கு தமிழ்த்தேசிய பேரவை தன்னுடைய ஆதரவை வழங்கும்.
தமிழ்த்தேசிய பேரவை 2 ஆவது இடத்தில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்குமாக இருந்தால் தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ்த்தேசிய நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சிகள் நாங்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு அதவாது துணைத் தவிசாளராக அல்லது துணை மேயராக வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய ஆதரவை நல்க வேண்டும் என்பதும் எங்களுடைய பணிவான வேண்டுகோளாகும்.
அதே நேரம்சில இடங்களில் சமமான ஆசனங்கள் இருக்குமாக இருந்தால் அந்த சமனான ஆசனங்கள் இருக்கக் கூடிய சபைகளில் வாக்குகளின் அடிப்படையில் எந்தக் கட்சி கூடுலாக வாக்குகளைப் பெற்றிருக்கின்றதோ அந்தக் கட்சிக்கு தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சியமைப்பதற்கான ஆதரவை வழங்கும்.
இது ஒரு சுமுகமான முறையில் நிர்வாகத்தை மன்றங்கள் தொடர்ந்து நடாத்துவதற்கும் மக்களுடைய ஆணையை மதிப்பதாகவும் அமையும் என்று நம்புகின்றோம். – என்றார்.