Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளார் கைது – என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இன்றைய தினத்தில் (27/05/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளியான முக்கியமான சில செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் தொடர்பில் இருந்ததுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அவர்களுக்கு அளித்து வந்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், “சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளரான மோதிராம் ஜாட் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல தகவல்களையும் அவர்களுக்கு அளித்துள்ளார். இதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு வழிகளில் பணமும் பெற்றுள்ளார்.
புது டெல்லியில் கைது செய்யப்பட்ட அவர் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 6ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் படையில் இருந்து மோதிராம் நீக்கப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் நபர்கள் மீது கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதன்படி, மோதிராமின் கைபேசி தொடர்புகள், சமூக ஊடக செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. அதில், அவரது பாகிஸ்தானுடனான தொடர்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தினமணி செய்தி கூறுகிறது.
ஏற்கெனவே ஹரியாணாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்படப் பலர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்பான தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு குற்ற வழக்கு தொடர முடியாது’ – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தியில், “மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது அந்தச் செய்தி.
இதைத் தொடர்ந்து, “விசாரணை நீதிமன்றம் இளைஞருக்கு முன்ஜாமீன் அளித்தது. பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்” எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது.
அதில், “வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ, திருமண வாக்குறுதி அளித்தோ அவரது சம்மதம் பெறப்பட்டதாகத் தோன்றவில்லை.
எங்கள் ஒருமித்த கருத்து என்னவென்றால், இது திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்த விவகாரம் அல்ல. ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, அந்த உறவில் பிளவு ஏற்படும்போதோ, கசப்புணர்வு ஏற்படும்போதோ, குற்ற வழக்கு தொடர அந்தச் சம்மத உறவு முகாந்திரம் ஆகாது.
இதுபோன்ற நடத்தைகள் நீதிமன்றத்துக்குச் சுமையாவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சட்டப் பிரிவுகளைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.
திருமணம் செய்துகொள்வதாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியையும் போலி வாக்குறுதி என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்வது முட்டாள்தனம். ஏற்கெனவே திருமணமான பெண், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மற்றொருவருடன் உறவு வைத்துக்கொண்டதாகக் கூறுவதையும் நம்ப முடியாது. எனவே, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்,” என நீதிபதிகள் கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு