மைசூர் பாக்கில் ‘பாக்’ வந்தது எப்படி? பாகிஸ்தான் பெயர் என எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Wendy Maeda/The Boston Globe via Getty Images

படக்குறிப்பு, ‘மைசூர் பாக்’ இனிப்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது.எழுதியவர், சுமந்த் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் மோதலின் தாக்கத்தை இரு நாடுகளிலும் வெளிப்படையாக பார்க்க முடிகிறது. அதிலும் இரு நாட்டைச் சேர்ந்த சாதாரணமான பொதுமக்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை சமூக ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன.

இரு அண்டை நாடுகளுக்கான மோதலின் எதிர்வினையாக, பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கி நாட்டு தயாரிப்புகளுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் வெடித்தது. அப்படித் தொடங்கிய மோதல்போக்கு இப்போது உணவுப் பொருட்களையும் விட்டுவைக்கவில்லை.

‘மைசூர் பாக்’ இனிப்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. பலரும் விரும்பி உண்ணும் ‘மைசூர் பாக்’-இன் பெயரை ‘மைசூர் ஸ்ரீ’ என்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடை மாற்றிவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது, மோதலின் தாக்கம் பல இடங்களிலும் விரவிக்கிடப்பதை உணர வைத்தது.

மைசூர் பாக், மைசூர் ஸ்ரீ ஆன செய்தி சமூக ஊடகங்களில் பரவிய வேகத்திலேயே, இந்த செய்தி மற்றும் பெயர் மாற்றம் குறித்தும் பல்வேறு வகையான எதிர்வினைகள் வந்தன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அவசர-அவசரமாக மைசூர்பாக் உருவான கதைமைசூர் ஸ்ரீ என்பதைவிட ‘மைசூர் பாக்’ என்ற பெயரை ‘மைசூர் இந்தியா’ என்று மாற்ற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதைத் தவிர, பலரும் விரும்பும் ‘மோதி பாக்’ இனிப்பு குறித்தும் விவாதம் தொடங்கியது, இந்த இனிப்பின் பெயரும் ‘மோதி ஸ்ரீ’ என்று மாற்றப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த எதிர்ப்புக்கும் பெயர் மாற்றத்திற்கும் காரணமாக இருப்பது, இனிப்புகளின் பெயரில் உள்ள ‘பாக்’ என்ற வார்த்தைதான், பொதுவாக பாகிஸ்தானின் பெயர், ‘பாக்’ என்று சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இனிப்புகள் இந்தியாவுடையது. தற்போதைய எதிர்ப்புகள், பெயர் மாற்றம் எல்லாமே அவற்றின் பெயருக்கு மட்டும்தான், இனிப்புக்கு அல்ல. ஒரு நாட்டுடன் பதற்றம் அதிகரித்தால், அதே பெயரில் உள்ள பொருட்களுக்கு எதிர்ப்பு எழுவதும் வழக்கமானதுதான்.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கல்வானில் இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையிலான மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்தது. இந்தியாவில் சீனப் பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவை புறக்கணிக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல, ஒரு நாட்டுடனான பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், அந்த நாட்டிலுள்ள குறிப்பிட்ட பொருட்கள் புறக்கணிக்கப்பட்டது என்பதை பல்வேறு உதாரணங்கள் உணர்த்துகின்றன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’மைசூர் பாக்’ வரலாறு

‘மைசூர் பாக்’ என்ற இனிப்பு, மைசூருடன் தொடர்புடையது என்பதைக் அதன் பெயரே குறிப்பாய் சொல்லிவிடுகிறது.

1902 முதல் 1940 வரை மைசூரை ஆண்ட மகாராஜா நல்வாடி கிருஷ்ணராஜ உடையாருக்கு வகைவகையாய் உணவு உண்பதில் விருப்பம் உண்டு. அவர் தனது சமையல்காரர்களை வெவ்வேறு உணவுகளை உருவாக்க சொல்லி ஊக்குவிப்பதுடன், பல்வேறு பொருட்களை பயன்படுத்தி பரிசோதனை செய்யவும் சொல்வார்.

ஒரு நாள் அரசரின் சமையல்காரர் காகாசுர மாடப்பா, மதிய உணவுக்கு இனிப்புகள் தயாரிக்க மறந்துவிட்டார். அரசர் கோபித்துக் கொள்வார் என்பதால், அவர் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. அதனால் அவர் துரிதமாக ஒரு இனிப்பை உருவாக்கி அதற்கு ‘மைசூர் பாக்’ என்று பெயரிட்டார். இதுதான் அவசர-அவசரமாக மைசூர்பாக் உருவான கதை.

பிரபல சமையற்கலை கலைஞர் காகாசூர் மாடப்பாவின் கொள்ளுப் பேரன் எஸ். நடராஜ், முதன்முதலில் ‘மைசூர் பாக்’ உருவாக்கப்பட்ட கதையை பிபிசியிடம் பகிர்ந்துக் கொண்டார்.

“சர்க்கரை பாகில் கடலை மாவு மற்றும் நெய் கலந்து இந்த இனிப்பை தயாரித்திருந்தார் மாடப்பா. உணவு உண்ணும்போது, அதை ரசித்து உண்ட மகாராஜா, புதிய வகை இனிப்பின் பெயர் என்ன என்று கேட்டபோது, அதை பாகு (சர்க்கரை) என்று கூறினார். மைசூரில் தயாரிக்கப்பட்டதால், ‘மைசூர் பாக்’ என்று கூறினார்” என்று மைசூர் பாக் இனிப்பை தனது மூதாதையர் உருவாக்கியதை எஸ் நடராஜ் பகிர்ந்துக் கொண்டார்.

“கன்னட மொழியில், கடலை மாவுடன் சர்க்கரைப் பாகை கலப்பது பக்கா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் பேசும்போது அல்லது எழுதும்போது, பக்காவில் உள்ள ‘அ’ உச்சரிக்கப்படுவதில்லை, அது வெறுமனே பாக் என்று அழைக்கப்படுகிறது,” என்று நடராஜ் கூறினார்.

சர்க்கரையில் நீர் கலந்து பக்குவமாய் உருவாக்கும் பாகு, பல்வேறு உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இதனை தமிழில் பாகு என்று அழைக்கிறோம்.

முதல் முறையாக ‘மைசூர் பாக்’ இனிப்பு தயாரிக்கப்பட்ட கதை கர்நாடகாவின் ராமநக்ரா மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காகாசுர மாடப்பாவின் சந்ததியினர் இன்னும் ‘மைசூர் பாக்’ தயாரித்து வருகின்றனர்.

“மைசூர் பாக் இனிப்பை மக்களிடம் பிரபலப்படுத்த மகாராஜா என் கொள்ளுத்தாத்தாவை ஊக்குவித்ததார். அதனால்தான், நான்காவது தலைமுறையாக நாங்கள் மைசூர் பாக் தயாரித்து வருகிறோம். மைசூரில் உள்ள அசோகா சாலையில் தான் எங்களது முதல் கடை திறக்கப்பட்டது” என்று மாடப்பாவின் கொள்ளுப் பேரன் கூறுகிறார்.

‘மைசூர் பாக்’ தயாரிப்பது எப்படி?

ராமநக்ரா மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த இனிப்பு தென்னிந்தியாவில் பாரம்பரியமாக திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பரிமாறப்படுகிறது. இது தவிர, வளைகாப்பு, சீமந்தம் போன்ற சடங்குகளிலும் மைசூர் பாக் அனைவருக்கும் பரிமாறப்படுகிறது.

‘மைசூர் பாக்’ தயாரிக்க சர்க்கரைப் பாகு பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை பாகு பக்குவமாய் வரும்போது, அதில் கடலைமாவு மற்றும் பிற பொருட்களை சேர்த்து மைசூர் பாக் தயாரிக்கப்படுகிறது.

‘மைசூர் பாக்’ தயாரிப்பில், கடலைமாவு, சர்க்கரை, நெய் தவிர, ஏலக்காய், ரோஜா, தேன் போன்ற பல்வேறு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

இந்திய இனிப்புகளில், ஜிலேபி, குலோப் ஜாமூன், ரசகுல்லா பாதாம் பூரி, பாதுஷா என பல இனிப்பு உணவுகளிலும் சர்க்கரை பாகு பயன்படுத்தப்படுகிறது.

மைசூர் பாக் தயாரிப்பதில் சர்க்கரை பாகு பதமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவரும் இந்த இனிப்பை சுலபமாக செய்துவிடமுடியும் என்றாலும், ஒரு சில சமையல்காரர்கள் மட்டுமே பாரம்பரியமான முறையில் மைசூர் பாக் தயாரிப்பதில் திறமையானவர்கள். இந்த சமையல்காரர்களில் சிலர், சர்க்கரைப் பாகு தயாரிப்பதற்கான நுணுக்கமான கலையை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘பாக்’ என்ற சொல் பல மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது (குறியீட்டு படம்)’பாக்’ என்ற சொல்லின் பொருள்

இந்தியாவில், ‘பாக்’ என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது, இது இப்போது பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ‘பாக்’ என்ற வார்த்தை பாரசீக மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித் வாட்னர்கர் என்ற மொழி நிபுணர். இவர், சொற்களின் பயணம் என்ற பொருள் தரும் ‘ஷப்தோன் கா சஃபர்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் ‘பாக்’ என்ற வார்த்தையின் தோற்றம் குறித்து விளக்கும் அவர், “இந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு பொருளும் அக்னி (நெருப்பு) வழியாகச் செல்லும்போது, அது புனிதமாகக் கருதப்படுகிறது. உலோகங்கள் நெருப்பில் போடப்படும்போது, அவை ஏதோ ஒரு புதிய பொருளாக வெளியாகின்றன. எந்த உலோகமும் நெருப்பில் உருகும்போது, அது ‘பக்’ என்று அழைக்கப்படுகிறது, அதாவது புனிதமானது. ‘பக்’ என்பது ‘பாக்’ என்ற வார்த்தையிலிருந்து உருவாகிறது. பாக் என்பது ‘பாஹ்’ என்பதில் இருந்தும் உருவாகிறது. ஜிலேபியில் பாகு இருப்பது போல, மைசூர் பாக் என்ற இனிப்பிலும் பாகு தான் முக்கியமானது.”

‘பாக்’ என்ற சொல் பல்வேறு மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மொழிகளில் ‘பாக்’ என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?

இந்தக் கேள்விக்கு அஜித் வாட்னர்கர், “பாக் என்ற சொல் இந்தியாவிலும் ஈரானிலும் புழக்கத்தில் இருந்த சொல். இதே போன்ற ஒரு சொல் ஜெர்மனியிலும் காணப்பட்டது. ஆனால் ஈரான் மற்றும் இந்தியாவின் பாக் என்ற சொல் ஜெர்மனியிலிருந்து வந்தது என்றோ அல்லது ஜெர்மனியில் காணப்படும் சொல் இந்தியாவிலிருந்து வந்தது என்றோ பொருள் கொள்ளக்கூடாது” என்று கூறுகிறார்.

“இந்தி மற்றும் பாரசீக மொழிகளில் பயன்படுத்தப்படும் ‘பக்’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘புனிதம்’, ‘தூய்மையானது’, ‘சுத்தமானது’ என்பதாகும். பாரசீக வார்த்தையான ‘பக்’ (پاک) ‘புனிதம்’ என்பதற்கு பெயரடையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு சமமான சமஸ்கிருத சொற்கள், ‘பவித்ர’ (தூய்மையானது), ‘பவ்மன்’ (சுத்திகரிப்பவர்), ‘பாவக்’ (நெருப்பு) போன்றவை.”

“இந்தியில் ‘பாக்’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று ‘சமைக்கப்பட்டது’, மற்றொன்று ‘தூய்மையானது'” என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தானின் சூழலில் ‘பாக்’ என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து அஜித் வாட்னர்கர் இவ்வாறு கூறுகிறார், “பாக் என்ற வார்த்தையில் ஒரு வகையான சாதனை உணர்வு உள்ளது. எந்தத் தவறும் காண முடியாத ஒரு சாதனை இது. பாகிஸ்தான் என்ற வார்த்தையை உருவாக்கியதன் பின்னணியில் உள்ள அடிப்படைக் கருத்து, ‘பாக்’ (தூய்மையானது) என்று அழைக்கக்கூடிய ஒரு நிலத்தை உருவாக்குவதாகும்.”

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு